இலங்கைக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் இந்தியா விளையாடி வருகிறது. அதில் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற இந்தியா ஆரம்பத்திலேயே கோப்பையை கைப்பற்றியது. அந்த நிலையில் சம்ப்ராய கடைசிப் போட்டி ஜூலை 30ஆம் தேதி இலங்கையின் பல்லகேல் நகரில் இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு துவங்கியது.
மழையால் தாமதமாக 8 மணிக்கு துவங்கிய அப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா, ரிஷப் பண்ட் உள்ளிட்ட 4 முக்கிய வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து துவங்கிய போட்டியில் ஆரம்பத்திலேயே அதிரடியாக விளையாட முயற்சித்த ஜெய்ஸ்வால் 10 (9) ரன்களில் தீக்சனா சுழலில் சிக்கினார்.
இந்தியா வெல்லுமா:
ஆனால் அடுத்ததாக வந்த சஞ்சு சாம்சன் டக் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். சொல்லப்போனால் கடந்த போட்டியிலும் டக் அவுட்டான அவர் இந்த வருடம் மொத்தமாக 3 முறை டக் அவுட்டாகியுள்ளார். அதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரு காலண்டரில் அதிக முறை டக் அவுட்டான இந்திய வீரர் என்ற மோசமான சாதனையை சஞ்சு சாம்சன் சமன் செய்துள்ளார். இதற்கு முன் யூசுப் பதான் (2009), ரோகித் சர்மா (2018, 2022), விராட் கோலியும் (2024) தலா 3 முறை அவுட்டாகியுள்ளனர்.
தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் அடுத்ததாக வந்த ரிங்கு சிங் 1 ரன்னில் அவுட்டாகி அழுத்தத்தை உண்டாக்கினார். போதாகுறைக்கு அடுத்து வந்த கேப்டன் சூரியகுமாரும் 8 (9) ரன்னில் பெவிலியன் திரும்பியதால் 30/4 என ஆரம்பத்திலேயே இந்தியா திணறியது. அப்போது மறுபுறம் சுப்மன் கில் தொடர்ந்து நிதானமாக விளையாடினார். ஆனால் எதிர்ப்புறம் வந்த சிவம் துபே 13 (14) ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்.
இருப்பினும் அடுத்து வந்த ரியான் பராக்குடன் ஜோடி சேர்ந்த கில் 6வது விக்கெட்டுக்கு 54 ரன்கள் பார்ட்னர்ஷிப் பார்ட்னர்ஷிப் அமைத்தார். அந்த வகையில் இந்தியாவை ஓரளவு காப்பாற்றிய சுப்மன் கில் 39 (37) ரன்களில் ஸ்டம்ப்பிங் ஆனார். அதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக முறை ஸ்டம்பிங்கான இந்திய வீரர் என்ற பரிதாப சாதனையை ரோஹித் சர்மா, ஸ்ரேயாஸ் ஐயருடன் (தலா 3 முறை) கில் பகிர்ந்து கொண்டார்.
இதையும் படிங்க: என் வழியும் தோனி வழி தான்.. அந்த 3 பேருடன் சேர்ந்து விளையாட அதிர்ஷ்டம் பண்ணிருக்கணும்.. அர்ஷ்தீப் பேட்டி
இறுதியில் ரியான் பராக் அதிரடியாக 26 (18), தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் 25 (18), ரவி பிஸ்னோய் 8* ரன்கள் எடுத்ததால் 20 ஓவரில் 137/9 இந்தியா ரன்கள் குவித்தது. இலங்கை சார்பில் அதிகபட்சமாக ஹசரங்கா 3, தீக்சனா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர். அந்த வகையில் 30/4 என சரிந்த இந்தியா கடைசியில் போராடினால் வெற்றி பெறக்கூடிய 138 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.



