சல்யூட் அடித்த மயங் அகர்வால், பாண்டிச்சேரியில் அட்டகாசம் செய்த சுதர்சன் – தெற்கு மண்டலத்தை ஃபைனலுக்கு அழைத்து சென்று அபாரம்

Sai Sudharsan
- Advertisement -

இந்தியாவின் பிரபலமான உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடரான 2023 தியோதார் கோப்பை இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. கடந்த ஜூலை 24 முதல் பாண்டிச்சேரியில் நடைபெற்று வந்த இந்த தொடரில் மயங் அகர்வால் தலைமையில் அசத்தி வந்த தெற்கு மண்டல அணி தங்களுடைய கடைசி லீக் போட்டியில் மத்திய மண்டலத்தை எதிர்கொண்டது. ஆகஸ்ட் 1ஆம் தேதி பாண்டிச்சேரியில் நடைபெற்ற அந்த போட்டியில் டாஸ் வென்ற மத்திய மண்டலம் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய அந்த அணிக்கு தொடக்க வீரர் மாதவ் கௌசிக் தடுமாறி 6 (21) அவுட்டாக மறுபுறம் நிதானமாக விளையாட முயற்சித்த சிவம் சௌத்ரியும் 34 (34) ரன்களில் ஆட்டமிழந்தார்.

அதை தொடர்ந்து வந்த யாஸ் துபே 77 (99) ரன்கள் எடுத்த போதிலும் மிடில் ஆர்டரில் உபேந்திரா யாதவ் 26, ரிங்கு சிங் 26, கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 2 என முக்கிய பேட்ஸ்மேன்கள் தெற்கு மண்டலத்தின் சிறப்பான பந்து வீச்சில் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அதனால் 50 ஓவர்களில் மத்திய மண்டலம் 261/9 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் தெற்கு மண்டலம் சார்பில் அதிகபட்சமாக மோஹித் ரேட்கர் 3 விக்கெட்டுகளையும் அர்ஜுன் டெண்டுல்கர் மற்றும் கௌசிக் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் எடுத்தனர்.

- Advertisement -

சுதர்சனின் அட்டகாசம்:
அதைத் தொடர்ந்து 262 ரன்களை துரத்திய தெற்கு மண்டல அணிக்கு கேப்டன் மயங் அகர்வால் ஆரம்பத்திலேயே காயமடைந்ததால் களமிறங்காத நிலையில் ரோகன் குன்னும்மாள் மற்றும் தமிழக வீரர் சாய் சுதர்சன் ஆகியோர் 58 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்தனர். அதில் குன்னம்மாள் 24 ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து வந்த நாராயன் ஜெகதீசன் 19 (21) ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றத்தை கொடுத்தார்.

இருப்பினும் மறுபுறம் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு அரை சதமடித்து வெற்றிக்கு போராடி சுதர்சனுடன் எதிர்ப்புறம் ஜோடி சேர்ந்து 3வது விக்கெட்டுக்கு 79 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்திய ரோஹித் ராயுடு 37 ரன்களில் ஆட்டமிழந்தார். அந்த நிலைமையில் வந்த மற்றொரு தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தருடன் ஜோடி சேர்ந்த சுதர்சன் நேரம் செல்ல செல்ல நங்கூரமாக நின்று எதிரணி பவுலர்களை மிகச் சிறப்பாக எதிர்கொண்டு லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் தன்னுடைய 5வது சதத்தை பதிவு செய்தார்.

- Advertisement -

அப்போது பெவிலியனிலிருந்த கேப்டன் மயங் அகர்வால் சல்யூட் அடித்து பாராட்டு கொடுத்த உற்சாகத்துடன் தொடர்ந்து அசத்திய சுதர்சன் கடைசி வரை அவுட்டாகாமல் 11 பவுண்டரி 1 சிக்சருடன் 132* (136) ரன்கள் குவித்தார். அவருடன் வாஷிங்டன் சுந்தர் தனது பங்கிற்கு 43* (58) ரன்கள் எடுத்ததால் 48.2 ஓவர்களிலேயே 262/3 ரன்கள் எடுத்த தெற்கு மண்டலம் 7 விக்கெட் வித்தியாசத்தில் சிறப்பாக வெற்றி பெற்றது. அதன் வாயிலாக இந்த தொடரில் பங்கேற்ற 5 லீக் போட்டிகளில் 5 வெற்றிகளை பதிவு செய்த தெற்கு மண்டலம் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்து ஆகஸ்ட் 3ஆம் தேதி நடைபெறும் மாபெரும் இறுதிப்போட்டியில் 2வது இடம் பிடித்த கிழக்கு மண்டல அணியை எதிர்கொள்ள தகுதி பெற்றது.

முன்னதாக டிஎன்பிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டு கடந்த வருடம் ஐபிஎல் தொடரில் முதல் முறையாக குஜராத் அணிக்காக விளையாடும் வாய்ப்பைப் பெற்று ஓரளவு அசத்திய சாய் சுதர்சன் இந்த வருடம் 8 போட்டிகளில் 362 ரன்களை 141.4 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் வெளுத்து வாங்கினார். குறிப்பாக தோனி தலைமையிலான சென்னைக்கு எதிரான மாபெரும் ஃபைனலில் 96 ரன்களை அடித்து நொறுக்கி அவர் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் பாராட்டுகளைப் பெற்ற அவர் 2023 டிஎன்பிஎல் தொடரிலும் கோவை அணிக்காக அதிக ரன்கள் அடித்தார்.

இதையும் படிங்க:IND vs WI : முக்கிய போட்டியில் வெ.இ அணியை ஓடவிட்ட இளம் இந்திய படை – 2006க்குப்பின் தொடரும் 17 வருட மானத்தை தக்க வைத்தது எப்படி?

அதன் காரணமாக இந்தியா ஏ அணிக்காக விளையாட தேர்வான அவர் இலங்கையில் நடைபெற்ற 2023 வளரும் வீரர்களுக்கான ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக சதமடித்து சிறப்பாகவே செயல்பட்டார். தற்போது இத்தொடரிலும் அசத்தி வரும் அவர் இந்த தொடர்ச்சியான செயல்பாடுகளால் 2023 ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான இந்திய அணியில் ஸ்டேண்ட் பை வீரர்கள் பட்டியலில் தேர்வாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement