365 நாட்களாச்சு.. சீக்கிரம் அதையும் செய்ங்க.. தனது வாழ்நாள் சாதனையை சமன் செய்த கிங் கோலியை வாழ்த்திய சச்சின்

Sachin Tendulkar
- Advertisement -

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐசிசி உலகக்கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் நவம்பர் 5ஆம் தேதி கொல்கத்தாவில் நடைபெற்ற போட்டியில் தென்னாப்பிரிக்காவை 234 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்தது. அந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா 50 ஓவர்களில் அதிரடியாக விளையாடி தென்னாபிரிக்கா வெற்றி பெறுவதற்கு 327 என்ற இலக்கை நிர்ணயித்தது.

இந்தியாவுக்கு அதிகபட்சமாக நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி சதமடித்து 101* ரன்களும் ஸ்ரேயாஸ் ஐயர் 77 ரன்களும் எடுத்தனர். ஆனால் அதை சேசிங் செய்த தென்னாப்பிரிக்கா ஆரம்பத்திலிருந்தே இந்தியாவின் அட்டகாசமான பந்து வீச்சுக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து வெறும் 83 ரன்களுக்கு சுருண்டு படுதோல்வியை சந்தித்தது.

- Advertisement -

சச்சினின் வாழ்த்து:
ஐடன் மார்க்கம், டீ காக், டேவிட் மில்லர் உள்ளிட்ட முக்கிய பேட்ஸ்மேன்கள் ஏமாற்றத்தை கொடுத்து அந்த அணிக்கு அதிகபட்சமாக மார்க்கோ யான்சன் 14 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 5 விக்கெட்டுகளை சாய்த்தார். இதனால் இதுவரை விளையாடிய 8 போட்டிகளிலும் தொடர்ந்து 8வது வெற்றியை பதிவு செய்த இந்தியா புள்ளி பட்டியலில் முதலிடத்தை முழுவதுமாக தங்களுடையதாக்கி சொந்த மண்ணில் தங்களை வலுவான அணி என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது.

இந்த வெற்றிக்கு சந்தேகமின்றி கடினமான பிட்ச்சில் 101* ரன்கள் குவித்து முக்கிய பங்காற்றிய விராட் கோலி ஆட்டநாயகன் விருது வென்றார். சொல்லப்போனால் தன்னுடைய 35வது பிறந்தநாளில் அசத்திய அவர் உலகக் கோப்பையில் தன்னுடைய பிறந்தநாளில் சதமடித்த முதல் இந்திய வீரர் என்ற புதிய வரலாற்று சாதனை படைத்தார். அத்துடன் இதையும் சேர்த்து ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் (தலா 49) வாழ்நாள் சாதனையையும் விராட் கோலி சமன் செய்துள்ளார்.

- Advertisement -

இந்நிலையில் தம்முடைய வாழ்நாள் சாதனையை சமன் செய்த விராட் கோலி அடுத்த சில நாட்களுக்குள் இதே உலகக்கோப்பையில் அதை முறியடிக்க வேண்டும் என்று ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் வாழ்த்தியுள்ளார். குறிப்பாக 49வது வயதிலிருந்து இந்த வருடம் 50வது வயதை தொடுவதற்கு தாம் 365 நாட்கள் எடுத்துக் கொண்டதைப் போல் நீங்கள் செய்யாதீர்கள் என்று கலகலப்பாக வாழ்த்தும் அவர் இது பற்றி ட்விட்டரில் பதிவிட்டுள்ளது பின்வருமாறு.

இதையும் படிங்க: அது நாங்க நெனச்ச மாதிரி இல்ல.. இந்தியாவை கன்ட்ரோல் பண்ணியும் அதுல தோத்துட்டோம்.. பவுமா சோகம்

“சிறப்பாக விளையாடினீர்கள் விராட். இந்த வருடத்தின் ஆரம்பத்தில் 49லிருந்து 50 செல்வதற்கு எனக்கு 365 நாட்கள் தேவைப்பட்டது. இருப்பினும் நீங்கள் அடுத்த சில நாட்களில் 49லிருந்து 50க்கு சென்று என்னுடைய சாதனையை முறியடிப்பீர்கள் என்று நம்புகிறேன். வாழ்த்துக்கள்” என கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து இந்தியா தங்களுடைய கடைசி லீக் போட்டியில் நெதர்லாந்தை எதிர்கொள்வது குறிப்பிடத்தக்கது.

Advertisement