
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து மண்ணில் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகின்றது. அத்தொடரின் முதல் போட்டியில் வென்ற இங்கிலாந்தை 2வது போட்டியில் இந்தியா 336 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. பர்மிங்காம் நகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா 587 மற்றும் 427/6 ரன்களை குவித்து ஆரம்பத்திலேயே வெற்றிக்கான அடித்தளத்தைப் போட்டது.
அடுத்ததாக விளையாடிய இங்கிலாந்தை 407 ரன்களுக்கு சுருட்டிய இந்தியா 180 ரன்கள் முன்னிலைப் பெற்றது. இறுதியில் 608 ரன்களை துரத்திய இங்கிலாந்தை 2வது இன்னிங்சில் 271 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கிய இந்தியா அபார வெற்றி பெற்றது. அதன் வாயிலாக பர்மிங்காம் மைதானத்தில் முதல் முறையாக வெற்றி பெற்று இந்தியா சாதனை படைத்தது.
மேலும் பர்மிங்காம் மைதானத்தில் வெற்றி பெற்ற முதல் ஆசிய அணி என்ற சாதனையையும் இந்தியா படைத்தது. இந்த வெற்றிக்கு பேட்டிங் துறையில் 269, 161 ரன்கள் அடித்து முக்கிய பங்காற்றிய கேப்டன் சுப்மன் கில் பல சாதனைகளைப் படைத்து ஆட்டநாயகன் விருதை வென்றார். பவுலிங் முறையில் பும்ராவுக்கு பதிலாக வந்து 10 விக்கெட்டுகள் எடுத்த ஆகாஷ் தீப் அறிவிக்கப்படாத ஆட்டநாயகனாக செயல்பட்டார்.
இந்நிலையில் இந்தப் போட்டியில் பஸ்பால் அணுகுமுறையை பின்பற்றி வெற்றியை நெருங்க முடியாத அளவுக்கு இந்தியா 608 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்து இங்கிலாந்தை கட்டிப் போட்டதாக ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பாராட்டியுள்ளார். 2வது இன்னிங்சில் ஜோ ரூட்டை போல்டாக்கிய ஆகாஷ் தீப் பந்து “இத்தொடரின் சிறந்த பந்து” என்றும் சச்சின் பாராட்டியுள்ளார். அதே போல ஜோஸ் டாங் கொடுத்த கடைசி விக்கெட் கேட்ச்சை ஜான்டி ரோட்ஸ் போல தரையோடு தரையாக சிராஜ் அபாரமாக பிடித்ததாகவும் சச்சின் கிண்டலாக பாராட்டியுள்ளார்.
இது பற்றி ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “சுப்மன் கில் தற்போதைய தருணத்தின் நபராக இருக்கிறார். இந்தியாவுக்கு அற்புதமான வெற்றியை பெற்றுக் கொடுத்த சுப்மன் கில்லுக்கு வாழ்த்துக்கள். ரிஷப் பண்ட், ராகுல் மற்றும் ஜடேஜா நன்றாக பேட்டிங் செய்தார்கள். குறிப்பாக 2வது இன்னிங்சில் ஜடேஜா அசத்தினார். இப்போட்டியில் இந்தியாவின் அணுகுமுறை இங்கிலாந்தை வெற்றியை நெருங்க விடாமல் வலுக்கட்டாயமாக வித்தியாசமாக விளையாட வைத்தது”
இதையும் படிங்க: 49 ஆண்டுகளில் பெரிய பெரிய ஜாம்பவான்கள் கூட செய்யாத சாதனையை நிகழ்த்திய ஆகாஷ் தீப் – விவரம் இதோ
“மேலும் இப்போட்டியில் ஒரே ஒரு வெற்றியாளர் மட்டுமே இருப்பார்கள் என்பதையும் இந்தியா உறுதி செய்தது. பவுலர்கள் வீசிய லென்த்துகள் மிகவும் கவர்ந்தது. ஆகாஷ் தீப் உயர்ந்து நின்ற பவுலர் என்பதை சொல்லத் தேவையில்லை. என்னுடைய கருத்துப்படி ஜோ ரூட்டுக்கு அவர் வீசியது இத்தொடரின் சிறந்த பந்து. பின்குறிப்பு: முகமது “ஜான்டி” சிராஜ் பிடித்த கேட்ச்சை மகிழ்ச்சியுடன் பார்த்தேன்” என்று கூறினார்