இங்கிலாந்து அணிக்கு எதிராக எட்ஜ்பேஸ்டன் மைதானத்தில் நடைபெற்று முடிந்த இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 336 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட இந்த ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் தொடரினை தற்போது ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கிலும் இந்திய அணி சமன் செய்துள்ளது.
49 ஆண்டுகால சாதனையை நிகழ்த்திய ஆகாஷ் தீப் :
மிக முக்கியமான இந்த போட்டியில் இந்திய அணி பெற்ற இந்த வெற்றிக்கு பல்வேறு தரப்பிலும் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. குறிப்பாக பும்ரா இல்லாமல் இந்த இரண்டாவது போட்டியில் இந்திய அணி எவ்வாறு சமாளிக்கப்போகிறது என்று அனைவரும் எதிர்பார்த்த வேளையில் பந்துவீச்சில் மிகச் சிறப்பாக செயல்பட்ட இந்திய வீரர்கள் இங்கிலாந்து அணியின் 20 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இந்த வெற்றியை பெற்று தந்துள்ளனர்.
அதிலும் குறிப்பாக பும்ராவிற்கு பதிலாக மாற்று வேகப்பந்து வீச்சாளராக இடம் பிடித்திருந்த ஆகாஷ் தீப் அசத்தலான பந்துவீச்சை இந்த போட்டியில் வெளிப்படுத்தி இருந்தார். முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்த அவர் இரண்டாவது இன்னிங்ஸின் போதும் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி மொத்தமாக 10 விக்கெட்டுகளை கைப்பற்றி இந்திய அணியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக திகழ்ந்தார்.
ஏற்கனவே கடந்த ஆண்டு இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமான அவர் 7 போட்டிகளில் விளையாடி 15 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்த வேளையில் தற்போது தனக்கு மீண்டும் கிடைத்த வாய்ப்பில் மிகச் சிறப்பாக செயல்பட்டு 10 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியிருந்தார். இந்நிலையில் இந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடிய அவர் 49 ஆண்டுகளுக்குப் பிறகு இங்கிலாந்து அணிக்கு எதிராக ஒரு தனித்துவமான சாதனை ஒன்றினை நிகழ்த்தி அசத்தியுள்ளார்.
அந்த வகையில் அவர் நிகழ்த்திய சாதனை யாதெனில் : கடந்த 1976-ஆம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் மைக்கல் ஹோல்டிங் இங்கிலாந்து அணியின் டாப் 5 வீரர்களில் நான்கு பேரை வீழ்த்தி அவர்களது விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். அதன்பிறகு கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக அந்த அணியின் டாப் 5 வீரர்களில் நான்கு வீரர்களை எந்த ஒரு பந்துவீச்சாளரும் வீழ்த்தியதே கிடையாது.
இதையும் படிங்க : ஆமாம்.. அவர் விளையாடுவாரு.. 3 ஆவது போட்டியில் பும்ரா ஆடுவது குறித்து உறுதியளித்த கேப்டன் கில் – பேசியது என்ன?
பல்வேறு ஜாம்பவான்கள் இந்த இடைப்பட்ட காலத்தில் இருந்தும் அவர்களால் இந்த சாதனையை நிகழ்த்த முடியவில்லை. ஆனால் இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான ஆகாஷ் தீப் இங்கிலாந்து அணியின் டாப் 5 வீரர்களில் நான்கு பேரை வீழ்த்தி மைக்கேல் ஹோல்டிங்க்கு அடுத்து இந்த அரிதான சாதனையை நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.



