ஃபுட் ஒர்க் இல்லாமையே மேக்ஸ்வெல் மிரட்ட காரணம் இது தான்.. டெக்னிக் பற்றி ரசிகர்களுக்கு விளக்கிய சச்சின்

Sachin Tendulkar 2
- Advertisement -

இந்தியாவில் பரபரப்பாக நடைபெற்று வரும் ஐசிசி உலகக்கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் நவம்பர் 7ஆம் தேதி மும்பையில் நடைபெற்ற போட்டியில் இப்ராஹிம் ஜாட்ரான் 129* ரன்கள் எடுத்த உதவியுடன் ஆப்கானிஸ்தான் 292 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. ஆனால் அதைத் துரத்திய ஆஸ்திரேலியாவுக்கு டேவிட் வார்னர், மார்னஸ் லபுஸ்ஷேன், ஹெட், மார்ஷ், ஸ்டோய்னிஸ் உள்ளிட்ட அனைத்து முதன்மை பேட்ஸ்மேன்களும் ஆப்கானிஸ்தானின் தரமான பந்து வீச்சில் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.

அதனால் 91/7 என சரிந்த ஆஸ்திரேலியா கண்டிப்பாக தோல்வியை சந்திக்கும் என்று அனைவரும் நினைத்த போது 6வது இடத்தில் களமிறங்கி அதிரடியாக விளையாடிய கிளன் மேக்ஸ்வெல் தனி ஒருவனாக வெற்றிக்கு போராட தொடங்கினார். அதற்கு கேப்டன் கமின்ஸ் சிங்கிள்களுடன் 12* (68) ரன்கள் மட்டும் மட்டும் எடுத்து ஸ்ட்ரைக்கை மாற்றியதை பயன்படுத்திய அவர் சதமடித்து மனம் தளராமல் போராடினார்.

- Advertisement -

சச்சின் பாராட்டு:
இருப்பினும் நீண்ட நேரம் விளையாடியதால் வழக்கம் போல நிறைய வீரர்கள் சந்திக்கும் தசை பிடிப்பு காயத்தை சந்தித்த மேக்ஸ்வெல் ஒரு கட்டத்தில் ஓட முடியாமல் தடுமாறி களத்திலேயே படுத்தார். ஆனால் அப்போதும் பெவிலியன் திரும்பாமல் முதலுதவிகளை எடுத்துக்கொண்டு தொடர்ந்து பேட்டிங் செய்த அவர் இரு மடங்கு வேகத்தில் ரன்கள் சேர்த்தார்.

குறிப்பாக இடுப்பு மற்றும் கால் பகுதிகளில் தசை பிடிப்பு ஏற்பட்டதால் தன்னுடைய கால்களை சரியாக நகர்த்த முடியாமல் தடுமாறிய அவர் மனதளவில் வலுவாக இருந்ததால் கைகளை மட்டுமே பயன்படுத்தி அதிரடியான சிக்சர்களையும் பவுண்டரிகளையும் பறக்க விட்டார். அந்த வகையில் மொத்தம் 21 பவுண்டரி 10 சிக்சரை அடித்த அவர் ஒருநாள் கிரிக்கெட்டிலும் உலக கோப்பையிலும் சேசிங் செய்யும் போது இரட்டை சதமடித்த முதல் வீரர் என்ற மாபெரும் உலக சாதனையுடன் 201* (128) ரன்கள் குவித்து அசாத்தியமான வெற்றியை சாத்தியமாக்கினார்.

- Advertisement -

இந்நிலையில் இப்போட்டியில் மேக்ஸ்வெல் கால்களை பயன்படுத்தாமலேயே வெற்றி கண்ட பேட்டிங் டெக்னிக் பற்றி ஜாம்பவான் சச்சின் டுவிட்டரில் விளக்கமாக பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “வாழ்க்கைக்கும் கிரிக்கெட்டுக்கும் பல ஒற்றுமைகள் உண்டு. சில நேரங்களில் ஒரு ஸ்பிரிங் போல உங்களை பின்னோக்கி இழுப்பதும் இறுதியில் உங்களையே முன்னோக்கி செலுத்துகிறது. நேற்றைய ஆட்டத்தின் போது மேக்ஸ்வெல் கால் வேலை செய்வதை தசைப்பிடிப்பு கட்டுப்படுத்தியது”

இதையும் படிங்க: ஒன்றல்ல.. இரண்டல்ல.. 4 பேருக்கு இடம்.. வெளியான ஐ.சி.சி யின் பவுலர்கள் தரவரிசை பட்டியல் – விவரம் இதோ

“இருப்பினும் களத்தில் இருக்க வேண்டிய சூழ்நிலையே அவருடைய தலை நேர்த்தியாகவும் கை – கண் ஆகியவை ஒருங்கிணைந்து பந்தை உன்னிப்பாக கவனிப்பதற்கான வேலையை செய்ய அனுமதித்தது. அதற்கு அற்புதமான பேட்டின் வேகமும் ஆதரவு கொடுத்தது. விளையாட்டின் வெவ்வேறு வடிவங்கள் மற்றும் நிலைகளுக்கு வெவ்வேறு ஃபுட் ஒர்க் தேவை. ஆனால் சில நேரங்களில் ஃபுட் ஒர்க் இல்லாததே மிகச் சிறந்த ஃபுட் ஒர்க்காகும்” என்று புகைப்படத்துடன் பதிவிட்டு பாராட்டியுள்ளார்.

Advertisement