50வது பிறந்தநாளில் ஆஸ்திரேலியாவின் சிட்னி மைதானத்தில் சச்சினுக்கு வழங்கப்பட்ட உயரிய கெளரவம் – லாராவுக்கும் சமமான அங்கீகாரம்

Sachin Sydney
- Advertisement -

இந்தியாவின் நட்சத்திர முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் ஏப்ரல் 24ஆம் தேதியான இன்று தன்னுடைய 50வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடுகிறார். கடந்த 1989ஆம் ஆண்டு தன்னுடைய 16 வயது பிஞ்சு கால்களுடன் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் ஆரம்ப காலங்களிலேயே வாசிம், அக்ரம் இம்ரான் கான் போன்ற அதிரடியான வேகப்பந்து வீச்சாளர்களை எதிர்கொண்டு குறுகிய காலத்திலேயே இந்திய அணியில் நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்தார். குறிப்பாக 90களில் சச்சின் அடித்தால் தான் இந்தியா வெற்றி பெறும் என்று நிலைமையில் பெரும்பாலான போட்டிகளில் மிகச் சிறப்பாக செயல்பட்ட அவர் அந்த காலத்தில் இருந்த உலகின் அத்தனை டாப் பவுலர்களையும் மிகச் சிறப்பாக எதிர்கொண்டு நிறைய வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்தார்.

அந்த வகையில் இந்திய பேட்டிங் துறையின் முதுகெலும்பாக அவதரித்த அவர் ஓரிரு வருடங்கள் நினைத்து ஓரிரு சதங்கள் அடிப்பதற்கு தடுமாறும் நிறைய வீரர்களுக்கு மத்தியில் ரன் மெஷினாக செயல்பட்டு 30000க்கும் மேற்பட்ட ரன்களையும் 100 சதங்களையும் விளாசி சர்வதேச கிரிக்கெட்டின் பேட்டிங் துறையில் இருக்கும் அனைத்து சாதனைகளையும் தன்வசமாக்கினார். அதே போல் யாராலுமே தொட முடியாது என்று கருதப்பட்ட ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதத்தை முதல் நபராக அடித்து சாதனை படைத்த அவர் 24 வருடங்கள் காயங்களையும் ஃபார்மையும் கடந்து வெற்றிகரமாக செயல்பட்டு 2011 உலகக் கோப்பை உட்பட இந்தியாவின் பல மறக்க முடியாத வெற்றிகளில் முக்கிய பங்காற்றினார்.

- Advertisement -

சிட்னியில் கௌரவம்:
அதனால் பலருக்கும் ரோல் மாடலாக திகழும் அவருடைய 50வது பிறந்தநாளன்று ஏராளமானவர்கள் வாழத்தினர். அந்த நிலையில் பொதுவாகவே சொந்த மண்ணுக்கு நிகராக வெளிநாடுகளிலும் எதிரணிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்த சச்சின் டெண்டுல்கர் ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் 5 டெஸ்ட் போட்டிகளில் 785 ரன்களை 157 என்ற அபாரமான சராசரியில் குவித்து அற்புதமாக செயல்பட்டுள்ளார்.

அப்படி தங்களது மைதானத்தில் அபாரமாக செயல்பட்ட அவரை பாராட்டும் வகையில் சிட்னி மைதானத்தில் வெளிநாட்டு வீரர்கள் களமிறங்கும் கதவுக்கு அவருடைய பெயர் சூட்டப்பட்டுள்ளதாக அந்த மைதான நிர்வாகம் அறிவித்துள்ளது. அவரைப் போலவே 4 போட்டிகளில் 384 ரன்களை 54.85 என்ற சராசரியில் எடுத்த வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் பிரையன் லாராவின் பெயரும் அந்த கதவுக்கு சூட்டப்பட்டுள்ளதாக சிட்னி மைதானம் அறிவித்துள்ளது.

- Advertisement -

அதாவது நூற்றாண்டு பழமை வாய்ந்த சிட்னி மைதானத்தில் நடைபெறும் போட்டிகளில் வெளிநாட்டு அணிகள் தங்குவதற்கு இதர மைதானங்களைப் போலவே தனியாக பெவிலியன் இருக்கிறது. அங்கிருந்து வெளிநாட்டு வீரர் களமிறங்கும் போது மைதானத்தை ஒட்டிய பகுதியில் தனியாக கதவு இருக்கும். அதை வெளிநாட்டு வீரர்கள் களமிறங்கும் போது பாதுகாப்பாளர் திறந்து விடுவது சிட்னி மைதானத்தின் ஸ்பெஷலாகும். அந்த கதவுக்கு தான் பிரைன் லாரா மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஆகிய 2 ஜாம்பவான்களின் பெயரை அந்த மைதானம் சூட்டி கௌரவித்துள்ளது.

அதிலும் குறிப்பாக 2004இல் ஃபார்மின்றி தடுமாறிய போது அவுட் சைட் ஆஃப் ஸ்டம்ப் பந்துகளை தொடாமல் கவர் டிரைவ் அடிக்காமலேயே இந்த மைதானத்தில் தான் 241* ரன்களை விளாசிய சச்சின் வரலாற்று சிறப்புமிக்க இன்னிங்ஸ் விளையாடி உலகிற்கே பாடம் நடத்தினார். அதே போல் 1993இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்த மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் சிம்ம சொப்பனமாக திகழ்ந்த லாரா 277 ரன்கள் விளாசினார். அப்படி தங்களது மைதானத்தில் அந்த ஜாம்பவான்கள் வெளிப்படுத்திய சிறந்த செயல்பாடுகளை பாராட்டும் வகையிலும் இந்த கௌரத்தை அம்மைதான நிர்வாகம் அவர்களுக்கு கொடுத்துள்ளது.

இதையும் படிங்க:IPL 2023 : வண்டி 8 பால் தான் ஓடுமா? நட்சத்திர பெங்களூரு வீரரை விளாசும் மைக்கேல் வாகன் – காரணம் என்ன

அதை சிட்னி மைதானம் மற்றும் நியூ சவுத் வேல்ஸ் சேர்மன் ராட் மெக்ஜியோக் மற்றும் இயக்குனர் கேரி மதர் ஆகியோருடன் ஆஸ்திரேலிய வாரியத்தின் இயக்குனர் நிக் ஹாக்கலி ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர். அத்துடன் தங்களது வாழ்வில் மறக்க முடியாத தருணங்களை கொடுத்து தங்களது கேரியரில் பெரிய அளவில் முன்னேறுவதற்கு உதவிய சிட்னி மைதானத்தில் இவ்வளவு பெரிய கௌரவத்தை கொடுத்ததற்கு சச்சின் டெண்டுல்கர் மற்றும் பிரைன் லாரா ஆகியோர் ஆஸ்திரேலிய வாரியத்துக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

Advertisement