அடிப்படை தேர்விலேயே பெரிய தவறு இருக்கு – ஆசிய கோப்பையை தொடர்ந்து தேர்வுக்குழுவின் சொதப்பலை அம்பலமாக்கும் சபா கரீம்

Karim
- Advertisement -

வங்கதேசத்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் பங்கேற்று வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்த இந்தியா கோப்பையை வெல்லும் வாய்ப்பை கோட்டை விட்டது. குறிப்பாக முதல் போட்டியில் 9 விக்கெட்களை எடுத்தும் கடைசி 6 ஓவர்களில் டெயில் எண்டர்கள் 51 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றியை தட்டிப் பறிக்கும் அளவுக்கு சொதப்பிய இந்திய பவுலர்கள் 2வது போட்டியிலும் 6 விக்கெட்டுகளை எடுத்த மிதப்பில் முகமதுல்லா – மெஹதி ஹசன் 7வது விக்கெட்டுக்கு 148 ரன்கள் சாதனை பார்ட்னர்ஷிப் அமைத்து தோல்வியை பரிசளிக்கும் அளவுக்கு மோசமாக செயல்பட்டது ரசிகர்களை அதிருப்தியடைய வைத்துள்ளது.

Mehidy

- Advertisement -

போதாக்குறைக்கு விராட் கோலி முதல் ராகுல் வரை முக்கிய பேட்ஸ்மேன்கள் தடவலான பேட்டிங்கை வெளிப்படுத்தி தொடர்ந்து சொதப்பலாக செயல்படுவது ரசிகர்களை கடுப்பாக வைத்துள்ளது. 2023இல் சொந்த மண்ணில் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பைக்கு தயாராகும் பயணத்தில் ஏற்கனவே நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் தோல்வியை சந்தித்த இந்தியா தற்போது கத்துக்குட்டியான வங்கதேசத்திடம் மண்ணை கவ்வியுள்ளது.

தவறான செலக்சன்:

இதனால் 2022 டி20 உலக கோப்பை, ஆசிய கோப்பை உட்பட சமீபத்திய முக்கிய தொடர்களில் சந்தித்த தோல்விகளில் எந்த மாற்றமும் முன்னேற்றத்தையும் காணாத இந்தியா 2023 உலக கோப்பையிலும் தோற்பது உறுதியென்று ரசிகர்கள் கவலையடைந்துள்ளனர். முன்னதாக ஐபிஎல் தொடரில் அசத்தும் நிறைய வீரர்கள் இந்தியாவுக்காக தேர்வானாலும் சீனியர்கள் இருப்பதால் விளையாடும் 11 பேர் அணியில் வாய்ப்பு பெறுவதில்லை. அது போக ரிஷப் பண்ட் – சஞ்சு சாம்சன் போல தேர்வு செய்வதில் சில மறைமுக அரசியலும் நடக்கும் இந்திய அணியில் கடந்த சில வருடங்களாகவே கடுமையாக போராடிய ராகுல் திரிபாதி கடந்த ஜூலை மாதம் நடந்த அயர்லாந்து டி20 தொடரில் தேர்வு செய்யப்பட்டார்.

tripathi

ஆனால் விளையாடும் 11 பேர் அணியில் வாய்ப்பு பெறாத அவருடைய கதை ஜிம்பாப்வே தொடர் முதல் இந்த வங்கதேச ஒருநாள் தொடர் வரை நீடிக்கிறது. ஆனால் டி20 கிரிக்கெட்டில் அசத்திய அவரை ஒருநாள் கிரிக்கெட் அணியில் தேர்வு செய்தது ஏன் என்று முன்னாள் வீரர் மற்றும் தேர்வுக்குழு உறுப்பினர் சபா கரீம் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட சஞ்சு சாம்சனுக்கு இடமில்லாத நிலையில் ரஜத் படிடார் தேர்வு செய்யப்பட்டதையும் அவர் விமர்சித்துள்ளார்.

- Advertisement -

முன்னதாக சமீபத்திய ஆசிய கோப்பையில் 4 வேகப்பந்து வீச்சாளர்கள் தேவைப்பட்ட நிலையில் 3 பேரை மட்டுமே தேர்வு செய்த தேர்வுக்குழுவின் தவறால் அவேஷ் கானை நீக்கிய போது ஆல் ரவுண்டரான ஹர்திக் பாண்டியாவை 3வது வேகப்பந்து வீச்சாளராக பயன்படுத்த வேண்டிய அவலம் ஏற்பட்டது. அந்த தவறை அப்போதே கடுமையாக விமர்சித்து தேர்வு குழுவின் வண்டவாலத்தை அம்பலப்படுத்திய அவர் 2023 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் நடைபெறும் இந்த வங்கதேச தொடரில் ஹர்திக் பாண்டியா போன்ற முக்கிய வீரர்களுக்கு பணிச்சுமை என்ற பெயரில் ஓய்வு கொடுப்பதை நிறுத்துமாறு இந்திய அணி நிர்வாகத்தையும் சாடியுள்ளார்.

Karim

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “ராகுல் திரிபாதி மற்றும் ரஜத் படிடார் ஆகியோரை ஏன் வங்கதேச ஒருநாள் தொடருக்கு அழைத்துச் சென்றீர்கள்? ராகுல் திரிபாதி ஒருநாள் கிரிக்கெட்டில் அப்படி என்ன செய்து விட்டார்? அவர் டி20 ஸ்பெசலிஸ்ட் வீரர். ஆனால் அவரை நீங்கள் ஒருநாள் கிரிக்கெட்டில் தேர்வு செய்துள்ளீர்கள். அதனால் கடைசி போட்டியிலும் அவருக்கு வாய்ப்பு கிடைக்காது என்று நினைக்கிறேன். எனவே புதிய தேர்வுக் குழுவாவது நமது முதன்மை அணியை சரியாக தேர்வு செய்ய வேண்டும்”

இதையும் படிங்க:  சாதகமான பிட்ச்சில் இந்தியா இப்படி செய்வாங்கன்னு எதிர்பார்க்கவே இல்ல – டேனிஷ் கனேரியா விமர்சனம்

“ஹர்திக் பாண்டியா சிறந்த பார்மில் இருக்கிறார். இருப்பினும் காயத்திலிருந்து குணமடைந்த பின் அவர் பேட்டிங்கில் தடுமாறுகிறார். ஐபிஎல் தொடரில் அபாரமாக செயல்பட்டு இந்தியாவின் கேப்டனாகும் அளவுக்கு முன்னேறிய அவர் சமீப காலங்களில் தடுமாறுகிறார். அதை தடுக்க அவர் முதலில் தொடர்ந்து விளையாட வேண்டும். அதனால் பணிச்சுமை என்ற பெயரில் முக்கிய வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கும் நடைமுறையை நிறுத்த வேண்டும்” என்று கூறினார். இப்படி சொதப்பலாக செயல்பட்டதாலயே சேட்டன் சர்மா தலைமையிலான தேர்வு குழு கூண்டோடு நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement