
இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. அத்தொடரில் முதல் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 140 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. இதை எடுத்து நடைபெறும் 2வது போட்டியில் தமிழக வீரர் சாய் சுதர்சன் சிறப்பாக விளையாடுவது அவசியமாகிறது.
உள்ளூர் மட்டும் ஐபிஎல் தொடரில் கிளாஸ் ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு பொருத்தமான வீரராக தென்பட்டார். அதனால் கடந்த இங்கிலாந்து தொடரின் முதல் போட்டியில் அறிமுகமான அவர் பெரிய ரன்கள் குவிக்கவில்லை. அடுத்தப் போட்டியில் கருண் நாயருக்காக கழற்றி விடப்பட்ட அவருக்கு கடைசி 2 போட்டிகளில் வாய்ப்பு கிடைத்தது.
அந்த வாய்ப்பில் ஒரு அரை சதம் மட்டுமே அடித்த சுதர்சன் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் பெரிய ரன்கள் அடிக்கவில்லை. இதுவரை மொத்தம் 4 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 147 ரன்களை 21 என்ற சுமாரான சராசரியில் மட்டுமே எடுத்துள்ளார். இந்நிலையில் திறமையான சாய் சுதர்சனுக்கு தொடர்ந்து வாய்ப்பளிக்கப்படும் என்று இந்திய அணியின் துணைப் பயிற்சியாளர் ரியன் டஸ்சேட் கூறியுள்ளார்.
அதே சமயம் அந்த வாய்ப்புகளில் சுதர்சன் பெரிய ரன்கள் அடிப்பது அவசியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இல்லையெனில் கருண் நாயரைப் போல சுதர்சன் கழற்றி விடப்படுவதற்கு வாய்ப்புள்ளதாக அவர் மறைமுகமாக கூறியுள்ளார். ஏனெனில் துருவ் ஜுரேல், தேவ்தூத் படிக்கல் போன்ற இந்தியா ஏ அணிக்காக சதங்கள் அடித்த வீரர்கள் போட்டிக்கு காத்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “சுதர்சன் எங்களுடைய ஆதரவை பெறுவதாக உணர்வார் என்று உறுதியாகச் சொல்வேன். அவருக்கு கேப்டன், பயிற்சியாளர்கள் ஆதரவு இருக்கிறது. நாங்களும் அவர் விரைவில் அசத்துவார் என்று நம்புகிறோம். அவர் எந்தளவுக்கு நல்ல பிளேயர் என்பதை கடந்த வாரம் நாங்கள் காண்பித்தோம். சில நேரங்களில் அவர் மிடில் ஆர்டரில் விளையாட பொருந்துவார். அது போக டாப் 3 – 4 இடத்திற்கு போட்டியாக நிறைய வீரர்கள் சண்டையிட்டு வருகின்றனர்”
இதையும் படிங்க: ஒரு பந்துக்கு 2 வருஷமா? ஹர்ஷித் ராணாவை விமர்சித்து பேசிய ரவிச்சந்திரன் அஷ்வின் – விவரம் இதோ
“சுப்மன் கில் மட்டுமே 4வது இடத்தில் உறுதியாக விளையாடுவார் என்பது சுதர்சனுக்கு தெரியும். எனவே சுதர்சன் அங்கே சென்று ரன்கள் அடிப்பது தகுதியானது என்று நாங்கள் நினைக்கிறோம். உங்கள் இடத்துக்காக நீங்கள் சண்டையிட வேண்டும் என்ற உண்மையை அவரால் மறைக்க முடியாது. இங்கிலாந்தில் கருண் நாயருக்கு 4 போட்டிகள் கிடைத்தது என்பது உங்களுக்குத் தெரியும். அப்படி நிறைய நல்ல வீரர்கள் போட்டியைக் கொடுக்கும் சூழ்நிலையில் சுதர்சன் தன்னை நம்பி ரன்கள் அடிப்பதில் கவனம் செலுத்த வேண்டும்” என்று கூறினார்.