ஆஸ்திரேலிய நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய கிரிக்கெட் அணியானது அங்கு நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே பிசிசிஐ-யின் மூலம் அறிவிக்கப்பட்ட வேளையில் அந்த இரண்டு தொடர்களிலுமே வேகப்பந்து வீச்சாளரான ஹர்ஷித் ராணாவிற்கு இடம் கிடைத்துள்ளது.
ஹர்ஷித் ராணாவின் தேர்வை விமர்சித்த ரவிச்சந்திரன் அஷ்வின் :
இந்நிலையில் ஹர்ஷித் ராணாவிற்கு இடம் அளிக்கப்பட்டுள்ளது குறித்து விமர்சித்து பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரரும், தமிழக கிரிக்கெட் வீரருமான ரவிச்சந்திரன் அஸ்வின் ஹர்ஷித்ராவை தேர்வு செய்ததற்கு பின்னால் யார் இருக்கிறார்கள்? என்பது போன்ற சில கேள்விகளை முன் வைத்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : என்னை பொருத்தவரை ஹர்ஷித் ராணாவை யார் தேர்வு செய்திருப்பார்கள்? என்று தெரிய ஆவலுடன் காத்திருக்கிறேன். ஏனெனில் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் விளையாடும் போது பேட்டிங் தெரிந்த வேகப்பந்து வீச்சாளர்கள் அவசியம். எனக்கு என்னவோ சிலர் ஹர்ஷித் ராணாவால் பேட்டிங் செய்ய முடியும் என்று நினைக்கிறார்கள்.
அதன் காரணமாகவே அவரை எட்டாவது இடத்திற்கு தேர்வு செய்திருக்கலாம். ஆனால் இதுவரை ஹர்ஷித் ராணா பேட்டிங் பற்றி எனக்கு சுத்தமாக எதுவும் தெரியாது. அதேபோன்று அவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஐபிஎல் தொடரின் போது நிதிஷ் ராணாவுக்கு எதிராக ஐ.பி.எல் தொடரின் இறுதிப்போட்டியில் ஒரு சிறப்பான பந்தினை வீசியிருந்தார்.
அந்த ஒரு பந்து காரணமாகவே அவர் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக இந்திய அணியில் இருப்பதாக நினைக்கிறேன்.. ஹர்ஷித் ராணாவிடம் திறமை இருக்கிறது என்பது உண்மைதான். ஆனால் இப்படி தொடர்ந்து முக்கியத்துவம் அளித்து அவர் தேர்வு செய்யப்பட யார் காரணம்? என்று தெரிந்து கொள்ள விரும்புகிறேன் என்றும் அஸ்வின் கூறியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : இதனால தான் ரோஹித் பாய் என்னை பஸ்ல ஏத்தல.. எல்லோரிடமும் மன்னிப்பு கேட்க சொன்னாரு.. ஜெய்ஸ்வால் பேட்டி
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரானது எதிர்வரும் அக்டோபர் 19-ஆம் தேதி துவங்கவுள்ளது. இந்த தொடருக்கான இந்திய ஒருநாள் அணியின் கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



