என்னப்பா இதெல்லாம். இவருக்கும் டீமுக்கும் ராசியே இல்ல போலயே – பறிபோகும் இளம்வீரரின் வாய்ப்பு

Practice
- Advertisement -

இலங்கை அணிக்கு எதிராக தனது சொந்த மண்ணில் இந்தியா பங்கேற்கும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நேற்று உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள லக்னோ நகரில் துவங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை அடுத்து களமிறங்கிய இந்தியாவிற்கு தொடக்க வீரர்கள் ரோகித் சர்மா மற்றும் இஷான் கிசான் ஆகியோர் அதிரடியாக பேட்டிங் செய்யத் துவங்கினார்கள்.

- Advertisement -

இலங்கை பந்துவீச்சாளர்களை ஆரம்பம் முதலே பவுண்டரிகளும் சிக்ஸர்களுமாக பறக்க விட்ட இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 111 ரன்கள் குவித்து ஆரம்பத்திலேயே இந்தியாவின் வெற்றியை கிட்டத்தட்ட உறுதி செய்தது. இதில் சிறப்பாக பேட்டிங் செய்த கேப்டன் ரோகித் சர்மா 44 (32) ரன்களில் ஆட்டமிழந்த போதிலும் மறுபுறம் தெறிக்கவிடும் பேட்டிங் செய்த இஷான் கிசான் 89 (56) ரன்களை விளாசினார்.

வாய்ப்பு கிடைக்காத ருதுராஜ் கைக்வாட்:
கடைசி நேரத்தில் களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் தன் பங்கிற்கு வெறும் 28 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் உட்பட அரைசதம் அடித்து 57* ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன் காரணமாக நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இந்தியா 199/3 ரன்களை எடுத்தது. இறுதியில் 200 என்ற மிகப்பெரிய இலக்கை துரத்திய இலங்கை இந்தியாவின் தரமான பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் 20 ஓவர்களில் 137/6 ரன்கள் மட்டுமே எடுத்து. இதனால் 62 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்தியா 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 1 – 0* என முன்னிலை பெற்றுள்ளது.

Ruturaj

முன்னதாக சமீபத்தில் நடந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வண்ணம் மிடில் ஆர்டரில் களமிறங்கிய ரோஹித் சர்மா தனது இடத்தை ருதுராஜ் கைக்வாத் மற்றும் இஷான் கிசான் ஆகியோருக்காக வழங்கினார். இருப்பினும் அந்தப் போட்டியில் அந்த ஜோடி சிறப்பாக ஜொலிக்க தவறிய வேளையில் இலங்கைக்கு எதிரான இந்த டி20 தொடரிலும் அதே ஜோடி மீண்டும் களமிறங்கும் என நேற்று முன்தினம் செய்தியாளர்களை சந்தித்த கேப்டன் ரோகித் சர்மா அறிவித்திருந்தார். ஆனால் போட்டி துவங்குவதற்கு ஒரு சில மணி நேரங்களுக்கு முன்பாக நடத்தப்பட்ட உடல்தகுதி தேர்வில் இளம் வீரர் ருதுராஜ் வலது மணிக்கட்டில் ஏற்பட்ட காரணமாக திடீரென்று விலகுவதாக பிசிசிஐ அறிவித்தது.

- Advertisement -

கடுமையான உழைப்பு:
நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட வாய்ப்பு தற்போது கிடைத்த போதிலும் திடீரென அவர் விலகியது பல ரசிகர்களை ஏமாற்றம் அடையச் செய்தது. ஏனெனில் கடந்த 2020ஆம் ஆண்டு துபாயில் நடந்த ஐபிஎல் தொடரில் அடுத்தடுத்த படுதோல்விகளை சந்தித்த எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் வரலாற்றிலேயே முதல் முறையாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் பெரிய அவமானத்தை சந்தித்தது.

ruturaj

அந்த வேளையில் சென்னை விளையாடிய கடைசி 4 – 5 லீக் போட்டிகளில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கலாம் என எம்எஸ் தோனி கருதினார். அதனால் கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பில் நெருப்பாக பற்றி எரிந்த ருதுராஜ் கைக்வாட் அதிரடியாக ரன்களை குவித்து சென்னைக்கு அடுத்தடுத்த வெற்றிகளை பெற்று கொடுத்தார். குறிப்பாக கடைசி 3 லீக் போட்டிகளில் பட்டையைக் கிளப்பிய அவர் அடுத்தடுத்த 3 வெற்றிகளை பெற்றுக்கொடுத்து 3 ஆட்ட நாயகன் விருதுகளை வென்று புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட இருந்த சென்னையை 7வது இடத்திற்கு முன்னேற்றினார்.

- Advertisement -

ருதுராஜ் எனும் ஸ்பார்க்:
அதன் காரணமாக ஐபிஎல் 2021 தொடரில் நிரந்தரமான வாய்ப்பைப் பெற்ற அவர் இம்முறை ஒவ்வொரு போட்டியிலும் எதிரணிகளை பந்தாடி மிகப்பெரிய ரன்களை குவித்து சென்னைக்கு தொடர்ச்சியான வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்து வந்தார். இறுதியில் 635 ரன்களை விளாசிய அவர் ஐபிஎல் 2021 தொடரில் அதிக ரன்களை அடித்த வீரராக ஆரஞ்சு தொப்பியை வென்றதுடன் சென்னை அணி 4-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்ல முக்கிய பங்காற்றினார்.

Ruturaj

அதனால் “இந்திய அணியின் ஸ்பார்க்” என ரசிகர்களால் கொண்டாடப்பட்ட அவருக்கு கடந்த 2021 ஜூலை மாதம் இலங்கையில் நடந்த டி20 தொடருக்கான இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பு தேடி வந்தது. ஆனால் அவருக்கு முழுமையான வாய்ப்பு அளிக்காத இந்திய அணி நிர்வாகம் மொத்தம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் 2 போட்டிகளில் மட்டுமே விளையாட வாய்ப்பு கொடுத்து பின் பெஞ்சில் அமர வைத்தது.

- Advertisement -

ஆனால் அதற்கெல்லாம் பின் வாங்காத ருத்ராஜ் அதன் பின் இந்தியாவில் நடந்த உள்ளூர் கிரிக்கெட் தொடர்களான சயீத் முஷ்டாக் அலி கோப்பை 2021 மற்றும் விஜய் ஹசாரே கோப்பை 2021 ஆகிய தொடர்களில் அபாரமாக பேட்டிங் செய்து ரன் மழை பொழிந்து நிறைய சதங்களை விளாசிய காரணத்தால் கடந்த ஜனவரி மாதம் நிகழ்ந்த தென்ஆப்பிரிக்க ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் மீண்டும் இடம் பிடித்தார்.

Ruturaj

அதிர்ஷ்டம் இல்லையா:
ஆனால் தென்ஆப்பிரிக்காவில் நடந்த அந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா 3 – 0 என ஒயிட்வாஷ் தோல்வியை பெற்ற போதிலும் இவருக்கு ஒரு வாய்ப்பு கூட அளிக்காத இந்திய அணி நிர்வாகம் தொடர்ந்து பெஞ்சில் அமர வைத்தது. அந்தவேளையில் சமீபத்தில் நடந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் இடம் பிடித்திருந்த இவருக்கு திடீரென கரோனா ஏற்பட்டு தனிமைப்படுத்தப்பட்டதால் மீண்டும் முழுமையான வாய்ப்பு கிடைக்காமல் போனது.

தற்போது இலங்கைக்கு எதிரான தொடரில் கைக்கு எட்டிய வாய்ப்பு காயத்தால் மீண்டும் வாய்க்கு எட்டாமல் போயுள்ளது. மொத்தத்தில் ஐபிஎல் மற்றும் உள்ளூர் கிரிக்கெட்டில் கடினமாக உழைத்து இந்திய அணியில் இடம் பிடிக்கும் ருதுராஜ் கைக்வாட்’க்கு ஒன்று இந்திய அணி நிர்வாகம் முழுமையாக நம்பி வாய்ப்பு கொடுக்க மறுக்கிறது அல்லது கரோனா, காயம் காரணமாக கிடைக்கும் அரைகுறை வாய்ப்புகளும் நழுவிப் போகிறது.

இதையும் படிங்க : தோனி மற்றும் ரிஷப் பண்டை கடந்து மாஸ் சாதனையை நிகழ்த்திய இஷான் கிஷன் – என்ன தெரியுமா?

இதையெல்லாம் பார்க்கும் போது ருதுராஜ்க்கு கடினமாக உழைத்தாலும் அதிர்ஷ்டம் இல்லாத காரணத்தால் இந்திய அணியில் தொடர்ச்சியாக விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லையா என்ற எண்ணத்தை நமக்கு தோன்ற வைக்கிறது.

Advertisement