
இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 44-வது லீக் போட்டியானது மே இரண்டாம் தேதியான நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஹார்டிக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாசில் வெற்றி பெற்ற மும்பை அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதனைத்தொடர்ந்து முதலில் விளையாடிய மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்களை மட்டுமே குவித்தது. பின்னர் 160 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சி.எஸ்.கே அணி 18.1 ஓவரில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 160 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பதிவு செய்தது.
இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் அடைந்த வெற்றி குறித்து பேசிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கூறியதாவது : உண்மையிலேயே இந்த வெற்றியை பெற்று இங்கு நிற்பதில் மிகவும் மகிழ்ச்சி. நாங்கள் இந்த போட்டியின் முதல் இரண்டு ஓவர்களை மிகச் சிறப்பாக வீசினோம். அதன்பிறகு மும்பை அணியின் வீரர்கள் சற்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.
ஆனாலும் பவர்பிளேவிற்க்கு பிறகு நாங்கள் மீண்டும் அவர்களை மிகச் சிறப்பாக கட்டுப்படுத்தியதாக நினைக்கிறேன். இந்த போட்டியில் 20 முதல் 30 ரன்கள் வரை நாங்கள் குறைவாக சேசிங் செய்ததாக நினைக்கிறோம். அந்த அளவிற்கு பந்துவீச்சாளர்கள் மிகச் சிறப்பாக அவர்களை தடுத்து நிறுத்தியுள்ளனர். பேட்டிங்கின் போது முடிந்தளவு பவர்பிளே ஓவர்களில் ரன்களை சேர்க்க வேண்டும் என்று நினைத்தோம்.
இதையும் படிங்க : பவர்பிளே ஓவர்களில் ரோஹித் சர்மாவின் சாதனையை சமன் செய்த ரயான் ரிக்கல்டன் – விவரம் இதோ
ஏனெனில் மிடில் ஓவர்களின் போது நாம் சற்று பொறுமையாக விளையாட சிறப்பான துவக்கம் உதவும் என்பதாலே அந்த ஒரு திட்டத்தை வைத்திருந்தோம். மற்றபடி பந்துவீச்சில் அன்ஷுல் கம்போஜ், நூர் முகமது என தேவையான நேரத்தில் வீரர்கள் தங்களது நல்ல பங்களிப்பை வழங்க மும்பை அணியை பெரிய ரன் குவிப்பதற்கு செல்ல முடியாமல் தடுத்து நிறுத்த முடிந்தது என ருதுராஜ் கெய்க்வாட் கூறியது குறிப்பிடத்தக்கது.