என்னோட லட்சியமே அதை செஞ்சுட்டு நம்ம தேசிய கீதத்தை பாடனும் – இந்தியாவின் கேப்டன் ருதுராஜ் பேசியது என்ன?

- Advertisement -

ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஐசிசி 2023 உலகக் கோப்பை வரும் அக்டோபர் 5 முதல் இந்தியாவில் நடைபெற உள்ளது. இருப்பினும் அதற்கு முன்பாக செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 8 வரை சீனாவில் 19வது ஆசிய விளையாட்டு போட்டிகள் நடைபெறுகிறது. மறுபுறம் ரோகித் சர்மா தலைமையிலான முதன்மை அணி முழுமையாக தயாராகி உலகக் கோப்பையில் களமிறங்க வேண்டும் என்பதால் இத்தொடரில் விளையாட முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக ருதுராஜ் கைக்வாட் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணியில் வெஸ்ட் இண்டீஸ் டி20 கிரிக்கெட் தொடரில் தேர்வாகாத ரிங்கு சிங், ஜிதேஷ் சர்மா ஆகியோர் தேர்வாகியுள்ளனர்.

மேலும் சென்னை அணியில் சிறப்பாக செயல்பட்ட சிவம் துபே நீண்ட நாட்கள் கழித்து கம்பேக் கொடுத்துள்ள நிலையில் ஜெய்ஸ்வால், திலக் வர்மா ஆகியோருடன் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தரும் தேர்வாகி அசத்தியுள்ளார். முன்னதாக இந்தியாவின் வெற்றிக்கு கடந்த காலங்களில் ஆற்றிய பங்கிற்காக கேரியர் முடிந்ததாக கருதப்படும் சீனியர் வீரர் ஷிகர் தவான் இத்தொடரில் கேப்டனாக செயல்படுவார் என்று செய்திகள் வெளியானது.

- Advertisement -

ருதுராஜ் கனவு:
ஆனாலும் வருங்காலத்தை கருத்தில் கொண்டுள்ள தேர்வு குழுவினர் விஜய் ஹசாரே கோப்பை உள்ளூர் தொடரில் மகாராஷ்டிரா அணியின் கேப்டனாக செயல்பட்ட அனுபவத்தையும் கடந்த வருடம் ஒரே ஓவரில் 7 சிக்சர்கள் அடித்து உலக சாதனை படைத்த தரத்தையும் கொண்ட ருதுராஜை தேர்ந்தெடுத்துள்ளனர். கடந்த 2020 ஐபிஎல் தொடரில் சென்னை அணியில் அறிமுகமாகி அசத்திய அவர் 2021 சீசனில் 635 ரன்கள் குவித்து ஆரஞ்சு தொப்பியை வென்று 4வது கோப்பையை வெல்வதற்கு முக்கிய பங்காற்றி இந்தியாவுக்காகவும் அறிமுகமானார்.

இருப்பினும் 1 ஒருநாள் மற்றும் 9 டி20 போட்டிகளுடன் மறு வாய்ப்பு பெறாத அளவுக்கு சற்று தடுமாற்றமாக செயல்பட்ட அவர் இந்த வருடம் மீண்டும் 590 ரன்கள் அடித்து சென்னை 5வது கோப்பையை வெல்வதற்கு முக்கிய பங்காற்றி ஃபார்முக்கு திரும்பியுள்ளார். அதன் காரணமாக வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரில் தேர்வாகியுள்ள அவர் இந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவுக்கு தங்கப் பதக்கத்தை வென்று தேசிய கீதம் பாடுவதே தம்முடைய லட்சியம் என்று கூறியுள்ளார்.

- Advertisement -

குறிப்பாக இந்தியாவுக்காக விளையாடுவதே பெரிய பெருமை என்ற நிலைமையில் கேரியரில் முதல் முறையாக தாய் நாட்டை கேப்டனாக வழி நடத்துவது மிகப்பெரிய கௌரவம் என்று பெருமிதத்தை வெளிப்படுத்தும் அவர் இது பற்றி பிசிசிஐ இணையத்தில் பேசியது பின்வருமாறு. “இந்த வாய்ப்புக்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இத்தொடரில் தங்கப்பதக்கத்தை வென்று பரிசாளர்கள் மேடையில் நின்று தேசிய கீதத்தை கேட்டுப் பாடுவதே எங்களுடைய கனவாகும்”

“இந்த வாய்ப்பு எங்கள் அனைவருக்குமே மிகவும் ஸ்பெஷலானது என்று நினைக்கிறேன். அதில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டு நம்முடைய நாட்டில் இருப்பவர்களை பெருமைப்படுத்துவோம். குறிப்பாக ஆசிய விளையாட்டு போட்டிகளில் நாட்டுக்காக விளையாடி பதக்கத்தை வெல்வதற்கு மிகுந்த ஆவலாக இருக்கிறோம். நாங்கள் சிறுவயதில் இருக்கும் போது நம்முடைய விளையாட்டு வீரர்கள் நாட்டுக்காக போராடி பதக்கங்களை வென்றதை தொலைக்காட்சிகளில் பார்த்துள்ளோம்”

- Advertisement -

“தற்போது பதக்கத்தை வெல்லும் அந்த வாய்ப்பு எங்களுக்கு கிடைத்துள்ளது மிகவும் சிறப்பானதாகும். சாதாரணமாகவே இந்தியாவுக்காக விளையாடுவது பெருமையான உணர்வை கொடுக்கும். அப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்த பெரிய தொடரில் இந்தியாவை வழி நடத்துவது எனக்கும் என்னுடன் அணியில் விளையாடும் வீரர்களுக்கு மிகப்பெரிய கௌரவமாகும்” என்று கூறினார். இருப்பினும் இதன் காரணமாக அக்டோபர் மாதம் நடைபெறும் உலகக் கோப்பையில் அவருக்கு 15 பேர் கொண்ட அணியில் கூட வாய்ப்பு கிடைக்காது என்பது முன்கூட்டியே உறுதியாகியுள்ளது.

இதையும் படிங்க:வெ.இ மட்டுமல்ல ஆஸி இங்கிலாந்திலும் விளையாட ஜெய்ஸ்வால் ரெடியா இருக்காரு, காரணம் இது தான் – முன்னாள் வீரர் பாராட்டு

ஆனால் ஒருவேளை உலகக் கோப்பை அணியில் வாய்ப்பு பெற்றாலும் ரோகித் சர்மா இருப்பதால் விளையாடும் 11 பேர் அணியில் அவருக்கு இடம் கிடைப்பது கடினமாகும். எனவே இந்த தொடரில் இந்தியாவை கேப்டனாக வழி நடத்துவதே ருதுராஜுக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டம் மற்றும் கௌரவமாக இருக்கும் என்றால் மிகையாகாது.

Advertisement