ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் மே ஒன்றாம் தேதி இரவு 7.30 மணிக்கு தமிழகத்தின் தலைநகர் சென்னையில் 49வது லீக் போட்டி நடைபெற்றது. அதில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய ரஹானே – கேப்டன் ருதுராஜ் 64 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல துவக்கத்தை கொடுத்தனர்.
இருப்பினும் அதில் ரகானேவை 29 (24) ரன்களில் அவுட்டாக்கிய ஹர்ப்ரீத் ப்ரார் அடுத்ததாக வந்த நம்பிக்கை நட்சத்திரம் சிவம் துபேவை கோல்டன் டக் அவுட்டாக்கினார். போதாக்குறைக்கு அடுத்ததாக வந்த ரவீந்திர ஜடேஜா 2 (4) ரன்னில் அவுட்டானதால் 70/3 என சென்னை தடுமாறியது. இருப்பினும் மறுபுறம் தொடர்ந்து அசத்தலாக விளையாடிய கேப்டன் ருதுராஜ் அரை சதமடித்து ரன் குவிப்பில் ஈடுபட்டார்.
புதிய சிகரம்:
ஆனால் எதிர்புறம் வந்த சமீர் ரிஸ்வி தடுமாற்றமாக விளையாடி 21 (23) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். அடுத்த சில ஓவர்களில் மறுபுறம் அசத்தலாக விளையாடிய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 5 பவுண்டரி 2 சிக்சருடன் 62 (47) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதே போல அடுத்ததாக வந்து அதிரடியாக விளையாட முயற்சித்த மொய்ன் அலி 15 (9) ரன்களில் ஆட்டமிழந்தார்.
இறுதியில் தோனி 14 (11) ரன்கள் எடுத்தும் 20 ஓவரில் சென்னை 162/7 ரன்கள் மட்டுமே எடுத்தது. பஞ்சாப் சார்பில் அதிகபட்சமாக ஹர்ப்ரீத் ப்ரார் 2, ராகுல் சஹர் 2 விக்கெட்டுகளை சாய்த்தனர். ஆனால் கடந்த போட்டியில் கொல்கத்தாவுக்கு எதிராக 262 ரன்களை எளிதாக சேசிங் செய்து உலக சாதனை படைத்த பஞ்சாப்பை கட்டுப்படுத்த இந்த ஸ்கோர் போதுமா என்பதே சிஎஸ்கே ரசிகர்களின் கவலையாக இருக்கிறது.
மேலும் இப்போட்டியில் அடித்த 62 ரன்களையும் சேர்த்து இந்த வருடம் ருதுராஜ் மொத்தமாக 10 போட்டிகளில் 509* ரன்கள் எடுத்துள்ளார். இதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றில் ஒரு சீசனில் 500 ரன்கள் அடித்த முதல் சிஎஸ்கே கேப்டன் என்ற புதிய சரித்திரத்தை அவர் படைத்துள்ளார். இதற்கு முன் 2008 – 2023 வரையிலான காலகட்டங்களில் முன்னாள் கேப்டன் தோனி பெரும்பாலும் மிடில் ஆர்டரில் விளையாடியதால் ஒருமுறை கூட ஒரு வருடத்தில் 500 ரன்கள் அடித்ததில்லை.
இதையும் படிங்க: பட்டாசு, இனிப்போட காத்திருந்தோம்.. அம்மாவிடம் மனமுடைஞ்சுட்டான்.. ரிங்குவின் அப்பா ஏமாற்ற பேட்டி
தற்போது கேப்டனாக பொறுப்பேற்ற முதல் வருடத்திலேயே தோனியால் தொட முடியாத சிகரத்தை ருதுராஜ் தொட்டுள்ளார். அத்துடன் இந்த வருடம் அதிக ரன்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் அவர் விராட் கோலியை (500*) முந்தி ஆரஞ்சு தொப்பியையும் தன்வசமாக்கியுள்ளார்.



