வீடியோ : நோ பாலில் வீழ்த்தப்பட்டாரா?ஸ்பார்க் காட்டிய ருதுராஜ், சூப்பர் பினிஷிங் கொடுத்த தல தோனி – சென்னை ஸ்கோர் இதோ

Ruturaj Gaikwad CSk
- Advertisement -

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த 2023 ஐபிஎல் தொடர் மார்ச் 31ஆம் தேதியன்று அகமதாபாத் நகரில் ராஷ்மிகா மந்தனா போன்ற திரை பிரபலங்கள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக துவங்கியது. வரலாற்றில் 16வது முறையாக நடைபெறும் இத்தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகள் மோதின. இரவு 7.30 மணிக்கு துவங்கிய அந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். அதை தொடர்ந்து களமிறங்கிய சென்னைக்கு முகமது ஷமி வீசிய 3வது ஓவரில் டேவோன் கான்வே 1 (6) ரன்னில் க்ளீன் போல்ட்டாகி சென்றார்.

இருப்பினும் அடுத்து வந்த மொயின் அலி மற்றொரு தொடக்க வீரர் ருதுராஜ் கைக்வாட் உடன் கைகோர்த்து 2வது விக்கெட்டுக்கு அதிரடியாக 36 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த போது 4 பவுண்டரி 1 சிக்சருடன் 23 (17) ரன்களில் அவுட்டாக்கிய ரசித் கான் அடுத்து வந்த நம்பிக்கை நட்சத்திரம் பென் ஸ்டோக்ஸை அதிரடி காட்ட விடாமல் 7 (6) ரன்களில் காலி செய்தார். அதனால் 70/3 என தடுமாறிய சென்னைக்கு மறுபுறம் அசத்தலாக பேட்டிங் செய்த ருதுராஜ் அரை சதமடித்து ரன் ரேட்டை தாங்கி பிடித்தார்.

- Advertisement -

மிரட்டிய ரூட்டு:
அவருடன் அடுத்து வந்த அம்பத்தி ராயுடு தனது அனுபவத்தை காட்டி 4வது விக்கெட்டுக்கு முக்கியமான 51 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த போது 12 (12) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். ஆனாலும் மறுபுறம் தொடர்ந்து அசத்தலாக பேட்டிங் செய்த ருதுராஜ் நேரம் செல்ல செல்ல மேலும் செட்டிலாகி நங்கூரமாக நின்று குஜராத் பவுலர்களை அதிரடியாக எதிர்கொண்டு அமர்க்களமாக பேட்டிங் செய்தார். பொதுவாகவே அதிக பவுண்டரிகளை அடிக்கக்கூடிய அவர் இந்த போட்டியில் ஆரம்பம் முதலே எதிரணி பவுலர்களை விட ஆஃப் சைட் திசையில் அதிரடியான சிக்சர்களை பறக்க விட்டு ரசிகர்களை துள்ளி குதிக்க வைத்தார்.

அதனால் சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவர் கடைசி நேரத்தில் தடவலாக செயல்படாமல் சுயநலமின்றி 4 பவுண்டரி 9 சிக்ஸருடன் 92 (50) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்துடன் சென்றார். குறிப்பாக அல்சாரி ஜோசப் வீசிய 18வது ஓவரின் முதல் பந்து இடுப்புக்கு மேலே வந்தது போல் இருந்ததால் அது சென்னை ரசிகர்கள் நோ-பால் என்று கருதினார்கள். குறிப்பாக 2021 டி20 உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விராட் கோலி சந்தித்த நோபால் போலவே இதுவும் இருந்ததாக ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.

- Advertisement -

அத்துடன் சமீபத்திய மகளிர் ஐபிஎல் தொடரில் ஷபாலி வர்மாவுக்கு வழங்கப்படாத நோபால் போல இருப்பதாகவும் ரசிகர்கள் கூறுகிறார்கள்இருப்பினும் நடுவர் அதை சரியான பந்து என்று அறிவித்ததால் சென்னை ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். அடுத்த சில பந்துகளிலேயே அடுத்து வந்த ரவீந்திர ஜடேஜா 1 ரன்னில் அவுட்டாகி பெரிய பின்னடைவை ஏற்படுத்திய நிலையில் கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாட வேண்டிய சூழ்நிலையில் சிவம் துபே 19 (18) ரன்களில் அவுட்டாகி சென்றார்.

அதனால் பின்னடைவை சந்தித்த சென்னைக்கு கடைசி நேரத்தில் களமிறங்கிய எம்எஸ் தோனி ஜோஸ் லிட்டில் வீசிய கடைசி ஓவரில் 1 பவுண்டரி 1 சிக்சருடன் 14* (7) ரன்கள் விளாசி நல்ல பினிஷிங் கொடுத்தாலும் 20 ஓவர்களில் சென்னை 178/7 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதையும் படிங்க: வீடியோ : நோ பாலில் வீழ்த்தப்பட்டாரா?ஸ்பார்க் காட்டிய ருதுராஜ், சூப்பர் பினிஷிங் கொடுத்த தல தோனி – சென்னை ஸ்கோர் இதோ

குறிப்பாக 10 ஓவரில் 100 ரன்கள் எடுத்திருந்த அந்த அணி 200 ரன்கள் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் டெத் ஓவர்களில் குஜராத் சிறப்பாக செயல்பட்டு 178 ரன்களுக்கு கட்டுப்படுத்தியது. அந்த வகையில் பந்து வீச்சில் அசத்திய குஜராத் சார்பில் அதிகபட்சமாக முகமது ஷமி, அல்சாரி ஜோசப், ரசித் கான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் சாய்த்தனர். இதைத் தொடர்ந்து 179 என்ற இலக்கை குஜராத் துரத்தி வருகிறது.

Advertisement