
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் இறுதிப்போட்டி டிசம்பர் 6ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் துவங்கியது. மதியம் 1.30 மணிக்கு துவங்கிய அப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய தென்னாபிரிக்காவுக்கு அர்ஷ்தீப் சிங் வீசிய முதல் ஓவரிலேயே ரியன் ரிக்கல்டன் டக் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார்.
இருப்பினும் மற்றொரு துவக்க வீரர் குவிண்டன் டீ காக் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தார். அடுத்து வந்த கேப்டன் தெம்பா பவுமா நிதானமாக விளையாடி அரை சதத்தை நெருங்கினார். 2வது விக்கெட்டுக்கு 133 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்திய அவர் 48 ரன்கள் எடுத்த போது ரவீந்திர ஜடேஜா சுழலில் விக்கெட்டை இழந்தார்.
மறுபுறம் தொடர்ந்து அசத்திய டீ காக் அரை சதத்தை அடித்து இந்தியாவுக்கு சவாலைக் கொடுத்தார். எதிர்ப்புறம் வந்த மேத்யூ பிரெட்ஸ்கே அதிரடியாக விளையாடும் முயற்சித்த போது 24 (23) ரன்னில் அவுட்டாக்கிய பிரசித் கிருஷ்ணா அடுத்து வந்த ஐடம் மார்க்ரமையும் 1 ரன்னில் காலி செய்தார். அதோடு நிற்காத அவர் மறுபுறம் தொடர்ந்து சதத்தை அடித்து அதிரடியாக விளையாடிய டீ காக்’கையும் 106 (89) ரன்களில் அவுட்டாக்கினார்.
மிடில் ஆர்டரில் தேவால்ட் பிரேவிஸ் அதிரடி காட்டியதால் 234/5 என்ற வலுவான நிலையில் இருந்த தென்னாப்பிரிக்கா குறைந்தது 330 ரன்கள் அடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்போது ப்ரேவிஸை அவுட்டாக்கிய குல்தீப் யாதவ் அதிரடியாக விளையாட முயற்சித்த மார்கோ யான்செனையும் 17 (15) ரன்களில் ஃபெவிலியன் அனுப்பி வைத்தார்.
அடுத்து வந்த கோர்பின் போஸ்க்கை 9 ரன்களில் அவுட்டாக்கிய குல்தீப் யாதவ் லுங்கி நிகிடியையும் 1 ரன்னில் காலி செய்தார். இறுதியில் கேசவ் மகாராஜ் 20* ரன்கள் எடுத்த போதிலும் ஓட்னல் பார்ட்மேன் 3 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார்கள். அதனால் 47.5 ஓவரில் தென்னாப்பிரிக்காவை 270 ரன்களுக்கு வீசிய இந்தியாவுக்கு அதிகபட்சமாக பிரசித் கிருஷ்ணா மற்றும் குல்தீப் யாதவ் தலா 4 விக்கெட்டுகள் எடுத்தார்கள்.
இதையும் படிங்க: 106 ரன்ஸ்.. இந்தியாவுக்கு எதிராக டீ காக் உலக சாதனை.. சங்ககாரா, ஜெயசூர்யா, ஏபிடியின் 3 சாதனை சமன்
இப்போட்டியையும் சேர்த்து தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட்டில் குல்தீப் யாதவ் 5வது முறையாக 4 அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகளை (4/23, 4/57, 4/18, 4/68, 4/41*) எடுத்துள்ளார். இதன் வாயிலாக தெனாப்பிரிக்காவுக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக முறை விக்கெட்டுகளை எடுத்த வீரர் என்ற சாதனையை அவர் சமன் செய்துள்ளார். அந்தப் பட்டியல்:
1. குல்தீப் யாதவ்: 5 (16 இன்னிங்ஸ்)
1. பிரெட் லீ: 5 (20 இன்னிங்ஸ்)
1. வக்கார் யூனிஸ்: 5 (32 இன்னிங்ஸ்)
2. லசித் மலிங்கா: 4 (24 இன்னிங்ஸ்)