இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணிகள் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றன. 2 போட்டிகளில் முடிவில் சமநிலையில் இருக்கும் அத்தொடரின் கடைசிப் போட்டி விசாகப்பட்டினத்தில் டிசம்பர் 6ஆம் தேதி மதியம் 1.30 மணிக்கு துவங்கியது. அப்போட்டியில் 20 தொடர் தோல்விகளுக்கு பின் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
அதைத்தொடர்ந்து களமிறங்கிய தென்னாப்பிரிக்காவுக்கு ரியன் ரிக்கல்டன் முதல் ஓவரிலேயே அர்ஷ்தீப் சிங் வேகத்தில் டக் அவுட்டானார். அடுத்து வந்த கேப்டன் தெம்பா பவுமா நிதானமாக விளையாடினார். மறுபுறம் அதிரடியாக விளையாடிய மற்றொரு துவக்க வீரர் குவிண்டன் டீ காக் அரை சதத்தை அடித்து அசத்தினார்.
டீ காக் அசத்தல்:
அவருடன் இணைந்து இரண்டாவது விக்கெட்டுக்கு 113 ரன்கள் அமைத்த பார்ட்னர்ஷிப் அமைத்த பவுமா 48 ரன்கள் எடுத்த போது ஜடேஜா சுழலில் சிக்கினார். அடுத்து வந்த மேத்யூ பிரெட்ஸ்கே 24 (23) ரன்களில் அதிரடியாக விளையாட முயற்சித்து பெவிலியன் திரும்பினார். அதைத்தொடர்ந்து வந்த ஐடன் மார்க்கம் 1 ரன்னில் விக்கெட்டை இழந்தாலும் மறுபுறம் இந்தியாவை அதிரடியாக எதிர்கொண்ட டீ காக் சதத்தை அடித்து 8 பவுண்டரி 6 சிக்ஸருடன் 106 (89) ரன்கள் குவித்து அவுட்டானார்.
இதையும் சேர்த்து ஒருநாள் கிரிக்கெட்டில் அவர் விக்கெட் கீப்பராக 23 சதங்கள் அடித்துள்ளார். அதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற இலங்கை ஜாம்பவான் குமார் சங்கக்காரா உலக சாதனையை அவர் சமன் செய்துள்ளார். அந்த பட்டியல்:
1. குமார் சங்கக்காரா/குவிண்டன் டீ காக்: தலா 23
2.ஷாய் ஹோப்: 19
3. ஆடம் கில்க்ரிஸ்ட்: 16
உலக சாதனை சமன்:
இதையும் சேர்த்து இந்தியாவுக்கு எதிராக மட்டும் டீ காக் 7 சதங்கள் அடித்துள்ளார். அதன் வாயிலாக இந்தியாவுக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற உலக சாதனையையும் டீ காக் சமன் செய்துள்ளார். அவரும் இலங்கை ஜாம்பவான் சனாத் ஜெயசூர்யாவும் இந்தியாவுக்கு எதிராக உலகிலேயே அதிகபட்சமாக ஒருநாள் கிரிக்கெட்டில் தலா 7 சதங்கள் அடித்துள்ளனர்.
இதையும் படிங்க: 72 பந்தில் 0 ரன்ஸ்.. டெய்ல் எண்டர் கெமர் ரோச் தனித்துவ உலக சாதனை.. நியூஸி வெற்றியை உடைத்து அபாரம்
அத்துடன் ஆசிய கண்டத்தில் நடைபெற்ற ஒருநாள் போட்டிகளில் அதிக சதங்கள் அடித்த வெளிநாட்டு வீரர் என்ற ஏபி டீ வில்லியர்ஸ் உலக சாதனையையும் டீ காக் சமன் செய்துள்ளார். தென்னாப்பிரிக்காவை சேர்ந்த அவர்கள் இருவருமே இந்தியா, பாகிஸ்தான், இலங்கை போன்ற ஆசிய நாடுகளில் தலா 10 அடித்து அந்த சாதனையை படைத்துள்ளனர். அவர்ளுக்கு அடுத்தபடியாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் கிரிஸ் கெய்ல் 8 சதங்களுடன் 2வது இடத்தில் உள்ளார்.



