23 விக்கெட்ஸ்.. பலமாக நிற்கும் 36 ரன்ஸ்.. திருப்பி அடிக்கும் தெ.ஆ அணியை இந்தியா மடக்கி பிடிக்குமா?

IND vs RSA 2nd Test 1
- Advertisement -

இந்தியாவுக்கு எதிராக ஜனவரி 3ஆம் தேதி கேப்டன் நகரில் துவங்கிய 2வது போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இத்தொடரின் முதல் போட்டியில் இன்னிங்ஸ் வெற்றி பெற்று இந்தியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரில் தோற்காமல் இருந்து வரும் கௌரவத்தை தக்க வைத்துக்கொண்ட அந்த அணி இப்போட்டியில் மோசமாக விளையாடி முதல் இன்னிங்ஸில் 55 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

ஐடன் மார்க்ரம், கடைசி போட்டியில் விளையாடும் கேப்டன் டீன் எல்கர் உட்பட அந்த அணியின் அனைத்து பேட்ஸ்மேன்களும் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்த நிலையில் அதிகபட்சமாக கெய்ல் வேர்ரின் 15 ரன்கள் எடுத்தார். மறுபுறம் பந்து வீச்சில் அதிரடியாக செயல்பட்ட இந்தியா சார்பில் அதிகபட்சமாக முகமது சிராஜ் 6, முகேஷ் குமார் 2, பும்ரா 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.

- Advertisement -

இந்தியா சாதிக்குமா:
அதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பத்திலேயே ஜெய்ஸ்வால் டக் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். இருப்பினும் 2வது விக்கெட்டுக்கு 55 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஓரளவு தாக்குப்பிடித்த கேப்டன் ரோகித் சர்மா 39, சுப்மன் கில் 36 ரன்களில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார்கள். ஆனால் அடுத்து வந்த ஷ்ரேயாஸ் ஐயர் டக் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்ததால் 110/4 என இந்திய தடுமாறியது.  இருப்பினும் மறுபுறம் சிறப்பாக விளையாடி விராட் கோலி சவாலை கொடுத்தார்.

ஆனாலும் அடுத்ததாக வந்த கேஎல் ராகுலை 8 ரன்களில் அவுட்டாக்கிய லுங்கி நிகிடி அதற்கடுத்ததாக வந்த ரவீந்திர ஜடேஜா மற்றும் பும்ரா ஆகியோரை டக் அவுட்டாக்கி ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகளை எடுத்து மிரட்டலை போட்டியை தலைகீழாக மாற்றினார். அந்த சூழ்நிலையில் மறுபுறம் போராடிய விராட் கோலியும் 46 ரன்களில் அவுட்டாக அடுத்ததாக வந்த சிராஜ், பிரசித் கிருஷ்ணாவும் டக் அவுட்டானார்கள். அதனால் 153/4 என்ற நிலையில் இருந்த இந்தியா மேற்கொண்டு ஒரு ரன் கூட எடுக்காமல் 153 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்த நிலையில் தென்னாப்பிரிக்கா சார்பில் அதிகபட்சமாக ரபாடா, லுங்கி நிகிடி, நன்ரே பர்கர் தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தார்கள்.

- Advertisement -

அதைத்தொடர்ந்து 98 ரன்கள் பின்தங்கிய நிலைமையில் களமிறங்கிய தென்னாப்பிரிக்காவுக்கு டீன் எல்கர் கடைசி முறையாக 12 ரன்களில் அவுட்டாகி இந்திய வீரர்கள் மற்றும் ரசிகர்களின் பாராட்டுக்கு மத்தியில் விடை பெற்றார். அவரை அவுட்டாக்கிய முகேஷ் குமார் அடுத்ததாக வந்த டோனி டீ ஜோர்சியை 1 ரன்னில் அவுட்டாக்கி அசத்திய நிலையில் அதற்கடுத்ததாக வந்த ட்ரிஷன் ஸ்டப்ஸை 1 ரன்னில் பும்ரா காலி செய்தார்.

இதையும் படிங்க: எதிரணி வீரராக இருந்தாலும் டேவிட் வார்னருக்கு மரியாதை செய்த பாக் வீரர்கள் – களமிறங்கும் முன் வார்னர் செய்த செயல்

அதனால் முதல் நாள் முடிவில் 62/3 ரன்கள் எடுத்துள்ள தென்னாப்பிரிக்காவுக்கு களத்தில் ஐடன் மார்க்கம் 36*, டேவிட் பெடிங்கம் 7* ரன்களுடன் உள்ளனர். இப்போட்டியின் பிட்ச்சில் முதல் நாளிலேயே 23 விக்கெட்கள் விழும் அளவுக்கு இரு அணி பவுலர்களும் போட்டி போட்டுக்கொண்டு பேட்ஸ்மேன்களை மிரட்டினர். ஆனாலும் அதில் சிறப்பாக செயல்பட்ட இந்தியா இன்னும் 36 ரன்கள் முன்னிலையை கொண்டுள்ளதால் 2வது நாளில் தென்னாப்பிரிக்காவை விரைவில் ஆல் அவுட்டாக்கி வெற்றி பெறுவதற்கான வாய்ப்பை அதிகமாக வைத்துள்ளது என்றே சொல்லலாம்.

Advertisement