சென்னையில் த்ரில்லர்.. 1 விக்கெட்டில் தெ.ஆ திக்திக் வெற்றி.. வரலாறு காணாத தோல்வியால் பாகிஸ்தான் வெளியேறியதா?

PAK vs RSA
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் அக்டோபர் 27ஆம் தேதி தமிழகத்தின் தலைநகர் சென்னையில் நடைபெற்ற 26வது லீக் போட்டியில் தென்னாபிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. அதில் புள்ளி பட்டியலில் 2வது இடத்தில் இருக்கும் தென்னாபிரிக்காவை வெற்றி பாதைக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் எதிர்கொண்ட பாகிஸ்தான் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய அந்த அணிக்கு தடுமாற்றமாக விளையாடிய அப்துல்லா ஷபிக் 9, இமாம்-உல்-ஹக் 12 ஆகிய துவக்க வீரர்கள் மார்கோ யான்சென் வேகத்தில் சொற்ப ரன்களில் அவுட்டானார்கள். அதனால் 38/2 என்ற சுமாரான துவக்கத்தை பெற்ற பாகிஸ்தானுக்கு கேப்டன் பாபர் அசாம் நிதானமாக விளையாடி காப்பாற்ற போராடிய நிலையில் எதிர்ப்புறம் வந்த முகமது ரித்வான் அதிரடியாக விளையாடி 31 (27) ரன்களில் பெவிலியன் திரும்பினார்.

- Advertisement -

த்ரில் வெற்றி:
அந்த நிலைமையில் களமிறங்கி நிதானமாக விளையாட முயற்சித்த இப்திகார் அகமதை 21 ரன்களில் தன்னுடைய சுழலில் சிக்க வைத்த தப்ரிஸ் சம்சி எதிர்புறம் 50 ரன்கள் கடந்து சவாலை கொடுத்த கேப்டன் பாபர் அசாமையும் அவுட்டாக்கினார். அதனால் 141/5 என மேலும் சரிந்த பாகிஸ்தானுக்கு மிடில் ஆர்டரில் சௌத் ஷாக்கில் 52, சடாப் கான் 43 முகமது நவாஸ் 24 ரன்கள் எடுத்த போதிலும் பெரிய இன்னிங்ஸ் விளையாடாமல் அவுட்டானார்கள்.

அதனால் 46.4 ஓவரிலேயே பாகிஸ்தானை 270 ரன்களுக்கு சுருட்டிய தென்னாப்பிரிக்கா சார்பில் அதிகபட்சமாக தப்ரிஸ் சம்சி 4, மார்கோ யான்சென் 2 விக்கெட்களை சாய்த்தனர். அதைத்தொடர்ந்து 271 ரன்களை துரத்திய தென்னாப்பிரிக்காவுக்கு 5 பவுண்டரியை பறக்க விட்ட குவிண்டன் டீ காக் 24 (14) ரன்களில் சாகின் அப்ரிடி வேகத்தில் அவுட்டாக மறுபுறம் தடுமாறிய கேப்டன் பவுமாவும் 28 ரன்களில் முகமது வாசிம் பந்தில் பெவிலியன் திரும்பினார்.

- Advertisement -

அப்போது களமிறங்கி அதிரடியாக விளையாடிய ஐடன் மார்க்ரமுடன் ஜோடி சேர்ந்த வேன் டெர் டுஷன் 3வது விக்கெட்டுக்கு 54 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தாலும் தடுமாற்றமாக விளையாடி 21 ரன்களில் அவுட்டானார். அந்த நிலைமையில் வந்த ஹென்றிச் கிளாசினும் 12 ரன்களில் அவுட்டானதால் தடுமாறிய தென்னாப்பிரிக்காவுக்கு அடுத்ததாக வந்த டேவிட் மில்லர் 5வது விக்கெட்டுக்கு மார்க்ரமுடன் 70 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த போது 29 ரன்களில் சாகின் அப்ரிடி வேகத்தில் வீழ்ந்தார்.

அவரைத் தொடர்ந்து வந்த மார்க்கோ யான்சன் அதிரடியாக 20 (14) ரன்களை விளாசி அவுட்டான நிலையில் மறுபுறம் தொடர்ந்து சவாலை கொடுத்த மார்க்ரம் சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 91 (93) ரன்களில் அவுட்டாக அடுத்ததாக வந்த ஜெரால்ட் கோட்சியும் 10 ரன்களில் அவுட்டானதால் தென்னாபிரிக்காவின் வெற்றி கேள்விக்குறியானது. அப்போது லுங்கி நெகிடி போராடி 4 (14) ரன்களில் ஹரிஷ் ரவூப் அபார கேட்ச்சால் அவுட்டானதால் போட்டியில் மெகா பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க: பாபர் அசாமை எல்லாரும் திட்றது தப்பே இல்ல. தவறான முடிவை எடுத்து – அவரே அவங்க டீமுக்கு ஆப்பு வச்சிட்டாரு

ஆனாலும் அந்த சமயத்தில் அதிக பந்துகள் இருந்ததை பயன்படுத்திய கேசவ் மஹராஜ் சிங்கிளாகவே எடுத்து கடைசியில் பவுண்டரியுடன் 7* (21) ரன்கள் அடித்து ஃபினிஷிங் கொடுத்தார். அவருடன் சம்ஸி 4* (6) ரன்கள் எடுத்ததால் 47.2 ஓவரில் 271/9 ரன்கள் எடுத்த தென்னாப்பிரிக்கா 1 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றதால் பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக ஷாகிர் அப்ரிடி 3 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியை சந்தித்தது. குறிப்பாக உலகக்கோப்பை வரலாற்றிலேயே முதல் முறையாக பாகிஸ்தான் 4 தொடர்ச்சியான தோல்விகளை சந்தித்து மோசமான சாதனை படைத்து லீக் சுற்றுடன் வெளியேறுவதற்கு 90% தயாராகியுள்ளது.

Advertisement