152 ரன்ஸ்.. மழையால் புதிய டார்கெட்.. தெ.ஆ அசால்டாக சேஸ் செய்தது எப்படி.. இந்தியாவின் தோல்விக்கான காரணம் என்ன?

IND vs RSA 2
- Advertisement -

தென்னாபிரிக்கா மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகள் மோதி வரும் 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. அதை தொடர்ந்து இத்தொடரின் முக்கியமான 2வது போட்டி டிசம்பர் 12ஆம் தேதி இந்திய நேரப்படி இரவு 8.30மணிக்கு போர்ட் எலிசபெத் நகரில் நடைபெற்றது. அதில் டாஸ் வென்ற தென்னாபிரிக்கா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு ஜெய்ஸ்வால், சுப்மன் கில் ஆகிய துவக்க வீரர்கள் ஆரம்பத்திலேயே அடுத்தடுத்த ஓவர்களில் டக் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அதனால் 6/2 என்ற சுமாரான துவக்கத்தை பெற்ற இந்தியாவுக்கு அடுத்ததாக கேப்டன் சூரியகுமார் யாதவ் அதிரடியாக விளையாடிய நிலையில் எதிர்புறம் தனது பங்கிற்கு அதிரடியாக விளையாட முயற்சித்த திலக் வர்மா 29 (20) ரன்கள் விளாசி அவுட்டானார்.

- Advertisement -

தென்னாபிரிக்கா வெற்றி:
அந்த நிலைமையில் வந்த ரிங்கு சிங் நிதானமாக விளையாடிய நிலையில் மறுபுறம் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய சூரியகுமார் யாதவ் 4வது விக்கெட்டுக்கு 70 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 5 பவுண்டரி 3 சிக்சருடன் 56 (36) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவருக்கு பின் ரிங்கு சிங் நேரம் செல்ல செல்ல அதிரடியாக விளையாடி 9 பவுண்டரி 2 சிக்ஸருடன் அரை சதம் கடந்து 68 (39) ரன்கள் எடுத்தார்.

இறுதியில் ரவீந்திர ஜடேஜா 19 (11) ரன்கள் எடுத்த உதவியுடன் 19.3 ஓவரில் இந்தியா 180/7 ரன்கள் எடுத்த போது மழை வந்தது. தென்னாப்பிரிக்கா சார்பில் அதிகபட்சமாக ஜெரால்ட் கோட்சி 3 விக்கெட்டுகள் எடுத்தார். அதை தொடர்ந்து ஒரு மணி நேரம் மழை தாமதம் செய்ததால் 15 ஓவரில் 152 ரன்கள் தேவை என்ற புதிய இலக்கை துரத்திய தென்னாப்பிரிக்காவுக்கு அடித்து நொறுக்கிய ரீசா ஹென்றிக்ஸ் உடன் சேர்ந்து 42 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த மேத்தியூ பிரட்ஸ்கே 16 (7) ரன்களில் ரன் அவுட்டானார்.

- Advertisement -

அந்த நிலைமையில் வந்த ஐடன் மார்க்கம் அதிரடியாக 30 (17) ரன்கள் விளாசி முகேஷ் குமார் அவுட்டான நிலையில் மறுபுறம் பட்டைய கிளப்பிய ஹென்றி 8 பவுண்டரி 1 சிக்சருடன் 49 (27) ரன்கள் விளாசியதால் இந்தியாவின் வெற்றி கேள்விக்குறியானது. அப்போது அவரை குல்தீப் யாதவ் அவுட்டாக்கிய நிலையில் அடுத்து வந்த க்ளாஸென் 7 (5) ரன்களில் சிராஜ் வேகத்தில் பெவிலியன் திரும்பினார்.

ஆனால் அடுத்ததாக வந்த நம்பிக்கை நட்சத்திரம் டேவிட் மில்லர் தம்முடைய பங்கிற்கு அதிரடியாக விளையாடி 17 (12) ரன்கள் விளாசி அவுட்டானார். இறுதியில் இளம் வீரர் திரிசன் ஸ்ட்ப்ஸ் 14* (12) ரன்களும் பெலுக்வியோ 10* (4) ரன்களும் எடுத்ததால் 13.5 ஓவரிலேயே 154/5 ரன்கள் எடுத்த தென்னாப்பிரிக்கா 5 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்று 1 – 0* (3) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது.

இதையும் படிங்க: தெ.ஆ அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் விளையாடாதது ஏன் – வெளியான உண்மை தகவல்

அதனால் இந்தியா சார்பில் அதிகபட்சமாக முகேஷ் குமார் 2 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியை தவிர்க்க முடியவில்லை. இப்போட்டியில் ஆரம்பத்திலேயே ஜெய்ஸ்வால் மற்றும் கில் டக் அவுட்டானதால் பேட்டிங்கில் இந்தியா எக்ஸ்ட்ரா 20 – 30 ரன்கள் எடுக்க தவறியது. அதை விட பந்து வீச்சில் அடித்து நொறுக்கிய தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன்களுக்கு எதிராக பவர் பிளே மற்றும் டெத் ஓவர்களில் ரன்களை வாரி வழங்கியது இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமானது.

Advertisement