132 பந்தில் சுருட்டி தெறிக்க விட்ட தெ.ஆ.. இங்கிலாந்து வரலாறு காணாத தோல்வியுடன் வெளியேறுகிறதா?

RSa vs ENg 2
- Advertisement -

இந்தியாவில் பரபரப்பான தருணங்களுடன் நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் அக்டோபர் 21ஆம் தேதி மதியம் 2 மணிக்கு மும்பையில் இருக்கும் வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற 19வது லீக் போட்டியில் வலுவான தென்னாப்பிரிக்கா நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை எதிர்கொண்டது. அப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய தென்னாபிரிக்காவுக்கு டீ காக் 4 ரன்களில் அவுட்டானார்.

இருப்பினும் மறுபுறம் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ரிசா ஹென்றிஸ் உடன் அடுத்ததாக ஜோடி சேர்ந்த வேன் டெர் டுஷன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 2வது விக்கெட்டுக்கு 121 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 60 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்த சில ஓவர்களிலேயே மறுபுறம் 9 பவுண்டரி 3 சிக்சரை பறக்க விட்ட ஹென்றிக்ஸ் 85 (75) ரன்களில் அவுட்டாகி சதத்தை நழுவ விட்டார்.

- Advertisement -

மாபெரும் தோல்வி:
அவர்களை தொடர்ந்து வந்த வீரர்களில் கேப்டன் ஐடன் மார்க்ரம் 42 (44) ரன்களில் அவுட்டாக மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நம்பிக்கை நட்சத்திரம் டேவிட் மில்லர் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால் அடுத்ததாக வந்த மார்க்கோ யான்சனும் எதிர்புறம் அதிரடியாக விளையாடிய ஹென்றிச் க்ளாஸெனும் 40 ஓவர்களுக்கு மேல் இங்கிலாந்து பவுலர்களை வெளுத்து வாங்கி வேகமாக ரன்களை சேர்த்தார்கள்.

அதில் நல்ல ஃபார்மில் இருக்கும் கிளாசின் அதிரடியாக 12 பவுண்டரி 4 சிக்சருடன் சதமடித்து 109 (67) ரன்கள் விளாசி அவுட்டானார். அவருடன் 6வது விக்கெட்டுக்கு 151 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து டெத் ஓவர்களில் வெளுத்து வாங்கிய யான்சன் கடைசி வரை அவுட்டாகாமல் 3 பவுண்டரி 6 சிக்சருடன் 75* (41) ரன்கள் எடுத்தார். அதனால் 50 ஓவர்களில் தென்னாப்பிரிக்கா 399/7 ரன்கள் எடுத்த நிலையில் இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக ரீஸ் டாப்லி 3, அடில் ரசித் மற்றும் கஸ் அட்கின்ஷன் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.

- Advertisement -

அதை தொடர்ந்து 400 என்ற மெகா இலக்கை துரத்திய இங்கிலாந்துக்கு ஜானி பேர்ஸ்டோ 10, டேவிட் மாலன் 6, ஜோ ரூட் 2, பென் ஸ்டோக்ஸ் 5 என முக்கிய பேட்ஸ்மேன்கள் தென்னாப்பிரிக்காவின் தெறிக்க விடும் பந்து வீச்சில் பவர் பிளே முடிவதற்குள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அதனால் 38/4 என ஆரம்பத்திலேயே சரிந்த இங்கிலாந்துக்கு நங்கூரத்தை போட வேண்டிய கேப்டன் ஜோஸ் பட்லர் 17, ஹரி ப்ரூக் 15 ரன்களில் அவுட்டாகி கை கொடுக்க தவறினார்கள்.

இறுதியில் மார்க் வுட் அதிரடியாக 43* (17), அட்கின்ஷன் 35 (21) ரன்கள் எடுத்துப் போராடியும் 22 ஓவரில் 132 பந்திலேயே இங்கிலாந்தை 170 ரன்களுக்கு சுருட்டிய தென்னாப்பிரிக்கா 229 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அந்த அணிக்கு அதிகபட்சமாக ஜெரால்ட் கோட்ஸி 3, லுங்கி நிகிடி மற்றும் மார்க்கோ யான்சன் தலா 2 விக்கெட்டுகள் சாய்த்தனர். இதனால் ஒருநாள் கிரிக்கெட்டில் மிகப்பெரிய ரன்கள் (229) வித்தியாசத்தில் வரலாறு காணாத படுதோல்வியை இங்கிலாந்து சந்தித்துள்ளது.

இதையும் படிங்க: 132 பந்தில் சுருட்டி தெறிக்க விட்ட தெ.ஆ.. இங்கிலாந்து வரலாறு காணாத தோல்வியுடன் வெளியேறுகிறதா?

இதற்கு முன் கடந்த 2022இல் மெல்போர்ன் நகரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 221 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து தோற்றத்தை முந்தைய மோசமான தோல்வியாகும். அதனால் 3வது தோல்வியை பதிவு செய்து புள்ளி பட்டியலில் 9வது இடத்திற்கு சரிந்து லீக் சுற்றுடன் வெளியேறுவதற்கான வாய்ப்பு அதிகமாகியுள்ள நிலையில் தென்னாபிரிக்கா 4வது வெற்றியை பதிவு செய்தது.

Advertisement