
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்கா அங்கு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. அந்தத் தொடரின் முதல் போட்டி செப்டம்பர் இரண்டாம் தேதி ஹெண்டிங்லே லீட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நேரப்படி மாலை 5.30 மணிக்கு துவங்கியது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாபிரிக்கா முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது.
அதைத்தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து மிகவும் மோசமாக பேட்டிங் செய்து 24.3 ஓவரில் 131 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணிக்கு ஓப்பனிங் பேட்ஸ்மேன் ஜேமி ஸ்மித் அதிகபட்சமாக அரை சதத்தை அடித்து 54 (48) ரன்கள் எடுத்தார். அவரை தவிர்த்து ஜோ ரூட் 14, பென் டக்கெட் 5, கேப்டன் ஹாரி ப்ரூக் 12, ஜோஸ் பட்லர் 15, ஜேக்கப் பெத்தல் 1, வில் ஜேக்ஸ் 7 என மற்ற பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்கள் எடுக்கவில்லை.
மறுபுறம் பஸ்பால் என்ற பெயரில் அதிரடியாக விளையாடக்கூடிய இங்கிலாந்தை அபாரமாக பவுலிங் செய்து சுருட்டிய தென்னாப்பிரிக்காவுக்கு கேசவ் மகாராஜ் 4, வியான் முல்தார் 3 விக்கெட்டுகள் எடுத்தனர். அடுத்து விளையாடிய தென்னாப்பிரிக்காவுக்கு ஐடன் மார்க்ரம் அடித்து நொறுக்கும் ஆட்டத்தை வெளிப்படுத்தினார். குறிப்பாக இங்கிலாந்துக்காக அறிமுகமான சோனி பேக்கரை அவர் அதிரடியாக எதிர்கொண்டு ரன்களை குவித்தார்.
அவருக்கு மறுபுறம் ரியான் ரிக்கல்டன் நிதானமாக விளையாடிக் கொண்டார். அதைப் பயன்படுத்தி வெளுத்து வாங்கிய மார்க்கம் 23 பந்துகளில் அரை சதத்தை அடித்தார். அதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட்டில் இங்கிலாந்துக்கு எதிராக வேகமான அரை சதத்தை அடித்த தென்னாப்பிரிக்க வீரர் என்ற மிரட்டலான சாதனையையும் மார்க்ரம் படைத்தார்.
இதற்கு முன் 2016 ஜோஹன்ஸ்பர்க் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக தென்னாபிரிக்காவுக்காக கிறிஸ் மோரிஸ் 30 பந்துகளில் அரை சதமடித்ததே முந்தைய சாதனை. தொடர்ந்து அதிரடியாக விளையாடிய மார்க்ரம் 13 பவுண்டரி 2 சிக்சருடன் 86 (55) ரன்களில் அடில் ரசித் சுழலில் அவுட்டானார். அடுத்து வந்த கேப்டன் பவுமா 6, ஸ்டப்ஸ் 0 ரன்களில் ரசித் அவுட்டாக்கினார்.
ஆனால் மறுபுறம் தொடர்ந்து நங்கூரமாக விளையாடிய ரிக்கல்டன் 31* (59), அடுத்து வந்த தேவால்ட் ப்ரேவிஸ் 6* (2) ரன்கள் எடுத்தார்கள். அதனால் 20.5 ஓவரிலேயே 137/3 ரன்கள் எடுத்து தென்னாபிரிக்கா 7 விக்கெட் வித்தியாசத்தில் 175 பந்துகளை மீதம் வைத்து வென்றது. அதனால் 1 – 0* (3) என்ற கணக்கில் இத்தொடரில் தென்னாபிரிக்கா ஆரம்பத்திலேயே முன்னிலைப் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: 82/2 டூ 131க்கு ஆல் அவுட்.. 1975க்குப்பின் இங்கிலாந்து மோசமான சாதனை.. பஸ்பாலை சுருட்டிய தெ.ஆ
அத்துடன் ஒருநாள் கிரிக்கெட்டில் இங்கிலாந்துக்கு எதிராக பந்துகள் (175) அடிப்படையில் தென்னாப்பிரிக்கா தங்களுடைய 2வது பெரிய சாதனை வெற்றியைப் பெற்றுள்ளது. இதற்கு முன் 2007 உலகக் கோப்பையில் பிரிட்ஜ்டவுன் மைதானத்தில் இங்கிலாந்தை 184 பந்துகள் மீதம் வைத்த தோற்கடித்ததே தென்னாப்பிரிக்காவின் பெரிய வெற்றியாகும்.