இந்தியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை 2 – 2 என்ற கணக்கில் இங்கிலாந்து சமன் செய்தது. அத்தொடரில் பஸ்பால் அணுகுமுறையைப் பின்பற்றி இந்தியாவை தோற்கடிப்போம் என்று ஆரம்பத்திலேயே இங்கிலாந்தினர் தெரிவித்தனர். ஆனால் சுப்மன் கில் தலைமையில் அசத்திய இளம் இந்திய அணி இங்கிலாந்தை அதனுடைய சொந்த மண்ணில் தொடரை வெல்ல முடியாமல் கோப்பையை பகிர்ந்து கொண்டது.
அடுத்ததாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் இங்கிலாந்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. அத்தொடரின் முதல் போட்டி செப்டம்பர் 2ஆம் தேதி ஹெண்டிங்லே நகரில் இருக்கும் லீட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நேரப்படி மாலை 5.30 மணிக்கு துவங்கியது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது.
சுருட்டிய தென் ஆப்பிரிக்கா:
அதைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்துக்கு ஜேமி ஸ்மித் நிதானம் கலந்த அதிரடியை வெளிப்படுத்தினார். ஆனால் எதிர்ப்புறம் தடுமாறிய பென் டக்கெட் 5 (8) ரன்னில் அவுட்டானார். அடுத்து வந்த ஜோ ரூட் நிதானமாக விளையாட முயற்சித்து 14 (17) ரன்னில் விக்கெட்டை இழந்தார். இருப்பினும் மறுபுறம் ஜேமி ஸ்மித் அரை சதத்தை அடித்ததால் இங்கிலாந்து 82/2 என்ற நல்ல நிலையில் இருந்தது.
அப்போது எதிர்ப்புறம் தடுமாற்றமாக பேட்டிங் செய்த கேப்டன் ஹாரி ப்ரூக் 12 (18) ரன்னில் ரன் அவுட்டானார். அடுத்த சில ஓவர்களில் மறுபுறம் அசத்திய ஸ்மித்தும் 54 (48) ரன்னில் விக்கெட்டை இழந்தது திருப்புமுனையாக அமைந்தது. ஏனெனில் மிடில் ஆர்டரில் ஜோஸ் பட்லர் 15, ஜேக்கப் பேத்தல் 1, வில் ஜேக்ஸ் 7 ரன்களில் தென்னாப்பிரிக்காவின் கேசவ் மகாராஜின் மாயாஜால சுழல் பந்துகளில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார்கள்.
இங்கிலாந்து பரிதாபம்:
அடுத்து வந்த வீரர்களும் பெரிய ரன்கள் எடுக்கத் தவறியதால் 24.3 ஓவரிலேயே இங்கிலாந்தை 131 ரன்களுக்கு தென் ஆப்பிரிக்கா சுருட்டி வீசியது. இதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட்டில் லீட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்து தங்களுடைய 2வது குறைந்தபட்ச ஸ்கோரை பதிவு செய்து மோசமான சாதனைப் படைத்தது. இதே மைதானத்தில் 1975 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவிடம் 93க்கு ஆல் அவுட்டானதே இங்கிலாந்தின் குறைந்தபட்ச ஸ்கோராகும்.
இதையும் படிங்க: 2014இல் ஒரு சின்ன தப்புக்காக என்னை திட்டிய தோனியிடம்.. அதை பற்றி நிறைய கத்துக்கலாம்.. மோஹித் பேட்டி
மறுபுறம் டெஸ்ட் கிரிக்கெட்டிலேயே அதிரடியாக விளையாடுவோம் என்று சொல்லக்கூடிய பஸ்பால் இங்கிலாந்தை சுருட்டிய தென்னாப்பிரிக்காவுக்கு அதிகபட்சமாக கேசவ் மகாராஜ் 4 விக்கெட்டுகள் எடுத்தார். அவருடன் வியான் முல்தார் 3 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். இதை அடுத்து இங்கிலாந்து போல சொதப்பாமல் வெற்றி பெறும் முனைப்புடன் தென்னாப்பிரிக்கா பேட்டிங் செய்கிறது.



