ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் ஐந்தாம் தேதி சண்டிகரில் 18வது போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் ராஜஸ்தானுக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து விளையாடிய ராஜஸ்தான் அணிக்கு இளம் நம்பிக்கை நட்சத்திரம் ஜெய்ஸ்வால் அபாரமாக விளையாடி அரை சதத்தை அடித்து 67 (45) ரன்கள் குவித்து அவுட்டானார்.
அவருடன் 89 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல துவக்கத்தைக் கொடுத்த கேப்டன் சஞ்சு சாம்சன் 38 (26) ரன்கள் விளாசி அசத்தினார். மிடில் ஆடரில் நித்திஷ் ராணா 12, ஹெட்மயர் 20 ரன்னில் அவுட்டானார்கள். இருப்பினும் ரியான் பராக் அதிரடியாக விளையாடி 43* (25) ரன்கள் குவித்தார். அவருடன் கடைசி நேரத்தில் வெளுத்து வாங்கிய துருவ் ஜுரேல் 13* (5) ரன்கள் அடித்து ஃபினிஷிங் செய்தார்.
ராஜஸ்தான் அசத்தல்:
அதன் காரணமாக 20 ஓவரில் ராஜஸ்தான் 205-4 ரன்கள் எடுத்த நிலையில் பஞ்சாப் அணிக்கு அதிகபட்சமாக லாக்கி பெர்குசன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அடுத்ததாக விளையாடிய பஞ்சாப் அணிக்கு பிரியான்ஸ் ஆர்யாவை கோல்டன் டக் அவுட்டாக்கிய ஜோப்ரா ஆர்ச்சர் அடுத்ததாக வந்த கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரை 10 (5) ரன்னில் போல்ட்டாக்கினார். அடுத்ததாக வந்த மார்கஸ் ஸ்டோய்னிஸ் 1 அவுட்டான நிலையில் மறுபுறம் தடுமாறிய பிரப்சிம்ரன் சிங் 17 ரன்னில் விக்கெட்டை இழந்தார்.
அதனால் 43-4 என ஆரம்பத்திலேயே சரிந்த பஞ்சாப் அணிக்கு மிடில் ஆர்டரில் அதிரடியாக விளையாடி போராடிய நேஹல் வதேரா 62 (41) ரன்கள் எடுத்து விக்கட்டை இழந்தார். அவருடன் சேர்ந்து விளையாடிய கிளன் மேக்ஸ்வெல் 30 (21) ரன்கள் எடுத்த போதிலும் ஃபினிஷிங் செய்யத் தவறினார். இறுதியில் சசாங் சிங் 10* ரன்கள் எடுத்தும் 20 ஓவரில் பஞ்சாப்பை 155-9 ரன்களுக்கு கட்டுப்படுத்திய ராஜஸ்தான் 50 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
சாம்சன் சாதனை:
அதிகபட்சமாக சந்திப் சர்மா 2, மஹீஸ் தீக்சனா 2, ஜோப்ரா ஆர்ச்சர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றியில் பங்காற்றினர். முதல் 3 போட்டிகளில் காயத்தால் பேட்ஸ்மேனாக மட்டும் விளையாடிய சஞ்சு சாம்சன் கேப்டனாக வந்ததும் இந்தப் போட்டியில் ராஜஸ்தான் அபார வெற்றி பெற்றுள்ளது.
இதையும் படிங்க: டெஸ்ட் இன்னிங்ஸ் ஆடிய தோனி ஓய்வு எப்போது? ரசிகர்களின் கேள்விக்கு சிஎஸ்கே கோச் பிளெமிங் பதில்
இதையும் சேர்த்து சாம்சன் ராஜஸ்தான் கேப்டனாக 62 போட்டிகளில் 32 வெற்றிகளை பெற்றுள்ளார். இதன் வாயிலாக ஐபிஎல் தொடரில் அதிக வெற்றிகளை பெற்ற ராஜஸ்தான் கேப்டன் என்ற வரலாற்று சாதனையை அவர் படைத்துள்ளார். இதற்கு முன் ஜாம்பவான் ஷேன் வார்னே 55 போட்டிகளில் 31 வெற்றிகள் பெற்றதே முந்தைய சாதனை.



