ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் ஐந்தாம் தேதி நடைபெற்ற 17வது போட்டியில் டெல்லி அணியிடம் 25 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை தோல்வியை சந்தித்தது. சேப்பாக்கத்தில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய டெல்லி கேஎல் ராகுல் 77, அபிஷேக் போரேல் 33 ரன்கள் எடுத்த உதவியுடன் 184 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அதைத் துரத்திய சென்னை தடுமாற்றமாக விளையாடி 20 ஓவரில் 158/5 ரன்கள் மட்டுமே எடுத்தது.
அந்த அணிக்கு ரச்சின் 2, கேப்டன் ருதுராஜ் 5, கான்வே 13, துபே 18, ஜடேஜா 2 என முக்கிய வீரர்கள் ஆரம்பத்திலேயே சொற்ப ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தனர். அதனால் கடையில் விஜய் சங்கர் 69*, தோனி 30* ரன்கள் எடுத்தும் ஃபினிஷிங் செய்ய தவறினார்கள். அதன் காரணமாக இந்த வருடம் சென்னை தங்களது 3வது தோல்வியை சந்தித்தது.
ஓய்வு எப்போது:
அதை விட டெல்லிக்கு எதிராக தங்களுடைய கோட்டையாக கருதப்படும் சேப்பாக்கம் மைதானத்தில் 15 வருடங்கள் கழித்து சென்னை தோல்வியை சந்தித்தது. வழக்கம் போல இந்த தோல்விக்கு தோனி தான் காரணம் என்று எதிரணி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகிறார்கள். உண்மையில் கடந்த 3 போட்டிகளிலுமே பவர் பிளே ஓவர்களில் சென்னை 2 – 3 விக்கெட்டுகளை இழப்பதை வாடிக்கையாக வைத்துள்ளது.
அதே போல மிடில் ஆர்டரில் சிவம் துபே போன்றவர்கள் அதிரடியாக விளையாடத் தவறுகிறார்கள். அதனால் லோயர் மிடில் ஆர்டரில் ஜடேஜா, தோனி ஆகியோர் போராடியும் வெற்றியை பெற்றுக்கொடுக்க முடியவில்லை. இருப்பினும் சிறந்த ஃபினிஷர் என்று பாராட்டப்படும் தோனி இன்றைய போட்டியில் 26 பந்துகளை எதிர்கொண்டு 30 ரன்கள் மட்டுமே எடுத்தார். அதனால் சிறந்த டெஸ்ட் இன்னிங்ஸ் விளையாடி தோல்விக்கு காரணமான தோனி ஓய்வு பெற வேண்டும் என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன.
பிளெமிங் பதில்:
குறிப்பாக 43 வயதில் இதெல்லாம் தேவையா? பேசாமல் தோனி ஓய்வு பெறலாம் என்று எதிரணி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கிண்டலடிக்கின்றனர். இந்நிலையில் அது பற்றி சென்னை அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளம்மிங்கிடம் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு அவர் கொடுத்த பதில் பின்வருமாறு. “இல்லை. அவருடைய கேரியருக்கு முடிவு கட்டுவது என்னுடைய வேலை கிடையாது”
இதையும் படிங்க: 2009க்குப்பின் இது ஈஸியா இருக்கும்ன்னு நினைக்கல.. சென்னையை வீழ்த்த இதான் காரணம்.. கேப்டன் அக்சர் பேட்டி
“அது பற்றிய ஐடியாவும் எனக்கு இல்லை. இப்போதும் தோனியுடன் நான் வேலை செய்து வருகிறேன். இப்போதும் அவர் வலுவாக செயல்பட்டு வருகிறார். அதனால் ஓய்வு பற்றி இப்போதெல்லாம் அவரிடம் நான் கேட்பது கூட கிடையாது. நீங்கள் தான் இப்படி தொடர்ச்சியாக கேட்டு வருகிறீர்கள்” என்று கூறினார்.



