PBKS vs RR : பஞ்சாப்பை வீட்டுக்கு அனுப்பி மும்பையை முந்திய ராஜஸ்தான் – பிளே ஆஃப் செல்ல இந்த மிராக்கிள் நிகழுமா?

- Advertisement -

ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் மே 19ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு அழகான தரம்சாலா மைதானத்தில் நடைபெற்ற 66வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் மோதின. ஏற்கனவே 13 போட்டிகளில் தலா 6 வெற்றிகளை மட்டுமே பெற்றதால் தங்களுடைய இந்த கடைசி போட்டியில் வென்றால் மட்டுமே எஞ்சிய 10% பிளே ஆஃப் வாய்ப்பை தக்க வைக்க முடியும் என்ற கட்டாயத்தில் இவ்விரு அணிகளும் களமிறங்கிய நிலையில் டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய பஞ்சாப்புக்கு பிரப்சிம்ரன் சிங் 2 (2) ஆரம்பத்திலேயே ட்ரெண்ட் போல்ட் வேகத்தில் அவுட்டானார்.

போதாகுறைக்கு அடுத்து வந்த அதர்வா டைட் அதிரடியாக விளையாட முயற்சித்து 19 (12) ரன்களிலும் மற்றொரு தொடக்க வீரர் கேப்டன் ஷிகர் தவான் 17 (12) ரன்களிலும் அவுட்டாகி ஏமாற்ற பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நம்பிக்கை நட்சத்திரம் லியான் லிவிங்ஸ்டன் தடுமாறி 9 (13) ரன்களில் நடைய கட்டினார். அதனால் 50/4 என ஆரம்பத்திலேயே தடுமாறிய பஞ்சாப்பை அடுத்ததாக களமிறங்கி ஜோடி சேர்ந்த சாம் கரண் – ஜிதேஷ் சர்மா ஆகியோர் ஆரம்பத்தில் நிதானமான பேட்டிங்கை வெளிப்படுத்தி நேரம் செல்ல செல்ல அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர்.

- Advertisement -

மிராக்கிள் நிகழுமா:
அந்த வகையில் 5வது விக்கெட்டுக்கு 64 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சரிவை சரி செய்த இந்த ஜோடியில் சிறப்பாக செயல்பட்ட ஜிதேஷ் சர்மா 3 பவுண்டரி 3 சிக்சருடன் 44 (28) ரன்கள் எடுத்து 14வது ஓவரில் ஆட்டமிழந்தார். ஆனால் அப்போது களமிறங்கிய தமிழக வீரர் சாருக்கான் மிகச் சிறப்பாக பேட்டிங் செய்து 4 பவுண்டரி 2 சிக்சருடன் 41* (23) ரன்களும் சாம் கரண் 4 பவுண்டரி 2 சிக்சருடன் 49* (31) ரன்களும் எடுத்து நல்ல பினிஷிங் கொடுத்தனர். குறிப்பாக சஹால் வீசிய 19வது ஓவரில் 28 ரன்களை அந்த ஜோடி குவித்ததால் 20 ஓவர்களில் பஞ்சாப் 187/5 ரன்கள் எடுக்க ராஜஸ்தான் சார்பில் அதிகபட்சமாக நவ்தீப் சைனி 3 விக்கெட்டுகள் செய்தார்.

அதை தொடர்ந்து 188 ரன்கள் துரத்திய ராஜஸ்தானுக்கு ரபாடா வீசிய 2வது ஓவரிலேயே ஜோஸ் பட்லர் டக் அவுட்டாகிய ஏமாற்றத்தை கொடுத்தார். இருப்பினும் மறுபுறம் சிறப்பாக செயல்பட்ட மற்றொரு தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் உடன் இணைந்த தேவ்தூத் படிக்கல் அதிரடியாக விளையாடி 10 ஓவர்கள் வரை நிலைத்து நின்று 2வது விக்கெட்டுக்கு 73 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 5 பவுண்டரி 3 சிக்சருடன் 51 (30) ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். அந்த சமயத்தில் வந்த கேப்டன் சஞ்சு சாம்சன் 2 (3) ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்த நிலையில் மறுபுறம் சற்று நிதானமாக விளையாடிய ஜெய்ஸ்வால் 8 பவுண்டரியுடன் 50 (36) ரன்கள் குவித்து முக்கிய நேரத்தில் ஆட்டமிழந்தார்.

- Advertisement -

அந்த நிலையில் சிம்ரோன் ஹெட்மையர் அதிரடியாக விளையாடியதால் வெற்றியை நெருங்கிய ராஜஸ்தானுக்கு கடைசி 5 ஓவரின் 47 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது வந்த ரியான் பராக் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் அதிரடியாக 1 பவுண்டரி 2 சிக்சரை அடித்து 20 (12) ரன்கள் குவித்து முக்கிய நேரத்தில் அவுட்டாக மறுபுறம் பஞ்சாப்புக்கு அச்சுறுத்தலை கொடுக்கும் வகையில் செயல்பட்ட ஹெட்மையர் 4 பவுண்டரி 3 சித்தருடன் 46 (28) ரன்கள் எடுத்து அடுத்த ஓவரில் ஆட்டமிழந்ததால் போட்டியில் பரபரப்பு ஏற்பட்டது.

இறுதியில் ராகுல் சஹர் வீசிய கடைசி ஓவரில் வெறும் 9 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட போது இம்பேக்ட் வீரராக களமிறங்கிய துருவ் ஜுரேல் 4வது பந்தில் சிக்ஸரை விளாசி 10* (4) ரன்கள் அடித்து 19.4 ஓவரில் ராஜஸ்தானை 189/6 ரன்கள் எடுக்க வைத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தார். அதனால் அதிகபட்சமாக 2 விக்கெட்களை எடுத்தும் 8வது தோல்வியை பதிவு செய்த பஞ்சாப் இந்த தொடரிலிருந்து அதிகாரப்பூர்வமாக லீக் சுற்றுடன் வெளியேறியது.

இதையும் படிங்க:RCB vs SRH : நான் செஞ்சுரி அடிப்பேன்னு போட்டிக்கு முன்னாடியே அவரு என்கிட்ட சொன்னாரு – விராட் கோலி பூரிப்பு

மறுபுறம் 14 போட்டிகளில் 7வது வெற்றியை பதிவு செய்த ராஜஸ்தான் புள்ளி பட்டியலில் மும்பையை பின்னுக்கு தள்ளி 5வது இடத்திற்கு முன்னேறியது. ஆனாலும் பெங்களூரு, மும்பை மற்றும் கொல்கத்தா ஆகிய அணிகள் தங்களுடைய கடைசி போட்டியில் தோற்றால் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறலாம் என்ற சாத்தியமற்ற மிராக்கிள் வாய்ப்பை நம்பி ராஜஸ்தான் காத்திருக்கிறது.

Advertisement