முதல் ஓவரிலேயே முடித்த ட்ரெண்ட் போல்ட் – அதிர்ஷ்டம் கிடைத்தும் தவறான முடிவால் டெல்லி ஹாட்ரிக் தோல்வி பெற்றது எப்படி

RR vs DC
- Advertisement -

ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 8ஆம் தேதி மதியம் 3.30 மணிக்கு அசாம் மாநிலம் கௌகாத்தியில் நடைபெற்ற 11வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. அதில் தன்னுடைய முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்ததால் நிச்சயம் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய டெல்லி டாஸ் வென்று முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதை தொடர்ந்து களமிறங்கிய ராஜஸ்தானுக்கு கலீல் அகமது வீசிய முதல் ஓவரிலேயே 5 பவுண்டரிகளுடன் 20 ரன்களை தெறிக்க விட்ட யசஸ்வி ஜெய்ஸ்வால் அதிரடியான தொடக்கத்தை கொடுத்தார்.

அதே வேகத்தில் ஜோஸ் பட்லருடன் இணைந்து 98 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து அபாரமான தொடக்கத்தை கொடுத்த அவர் 11 பவுண்டரி 1 சிக்சருடன் 60 (31) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அந்த நிலையில் களமிறங்கிய கேப்டன் சஞ்சு சாம்சன் டக் அவுட்டாக அடுத்து வந்த ரியான் பராக் 7 (11) ரன்களில் அவுட்டாகி பின்னடைவை கொடுத்தார். இருப்பினும் மறுபுறம் நங்கூரமாகவும் அதிரடியாகவும் செயல்பட்ட நட்சத்திர வீரர் ஜோஸ் பட்லர் அரை சதமடித்து 11 பவுண்டரி 1 சிக்சருடன் 79 (51) ரன்கள் குவித்து கடைசி நேரத்தில் ஆட்டமிழந்தார்.

- Advertisement -

தவறான முடிவு:
இறுதியில் சிம்ரோன் ஹெட்மையர் அதிரடியாக 1 பவுண்டரி 4 சிக்சரை பறக்க விட்டு 39* (21) ரன்களும் துருவ் ஜுரேல் 8* (3) ரன்களும் எடுத்து நல்ல பினிஷிங் கொடுத்ததால் 20 ஓவர்களில் ராஜஸ்தான் 199/4 ரன்கள் எடுக்க டெல்லி சார்பில் அதிகபட்சமாக முகேஷ் குமார் 2 விக்கெட் எடுத்தார். அதைத் தொடர்ந்து 200 என்ற கடினமான இலக்கை துரத்திய டெல்லிக்கு முதல் ஓவரிலேயே அதிரடியான வேகத்தில் ஸ்விங் பந்துகளை பிரயோகித்த ட்ரெண்ட் போல்ட் இம்பேக்ட் வீரராக களமிறங்கிய பிரித்வி ஷா’வை சஞ்சு சாம்சனின் அபார கேட்ச்சால் டக் அவுட்டாக்கினார்.

அந்த நிலையில் களமிறங்கிய மணிஷ் பாண்டேவையும் கோல்டன் டக் அவுட்டாக்கிய அவர் ஆரம்பத்திலேயே டெல்லியின் கதையை முடித்தார் என்றே சொல்லலாம். ஏனெனில் அதிலிருந்து மீள்வதற்காக மறுபுறம் கேப்டன் டேவிட் வார்னர் நிதானத்தை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்ட நிலையில் அடுத்து வந்த ரிலீ ரோசவ் 14 (12) ரன்களில் அஸ்வின் சுழலில் சிக்கினார். அதனால் 36/3 என மேலும் தடுமாறிய டெல்லியை அடுத்ததாக களமிறங்கிய இளம் வீரர் லலித் யாதவ் பயமறியாத காளையாக 5 பவுண்டரிகளை பறக்க விட்டு 38 (24) ரன்கள் விளாசி 4வது விக்கெட்டுக்கு 64 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து போராடிய போது மீண்டும் ட்ரெண்ட் போல்ட் தனது அதிரடியான வேகத்தால் கிளீன் போல்ட்டாக்கினார்.

- Advertisement -

இருப்பினும் மறுபுறம் தொடர்ந்து நங்கூரமாக நின்ற டேவிட் வார்னர் அரை சதமடித்து வெற்றிக்கு போராடிய போதிலும் அவருக்கு கை கொடுக்க வேண்டிய அக்சர் பட்டேல் 2 (6) ரன்களில் சஹால் சுழலிலும் அதிரடி வீரர் ரோவ்மன் போவல் 2 (2) ரன்களில் அஸ்வின் சுழலிலும் அவுட்டாகி பெரிய பின்னடைவை கொடுத்தனர்.

இறுதியில் டேவிட் வார்னரும் 65 (55) ரன்களில் அவுட்டானதால் 20 ஓவர்களில் 142/9 ரன்ளுக்கு டெல்லியை சுருட்டிய ராஜஸ்தான் 57 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அந்த அணிக்கு அதிகபட்சமாக ட்ரெண்ட் போல்ட் மற்றும் சஹால் தலா 3 விக்கெட்டுகளையும் அஸ்வின் 2 விக்கட்டுகளையும் சாய்த்தனர்.

- Advertisement -

முன்னதாக டி20 கிரிக்கெட்டில் டாஸ் வென்றால் போட்டியை வெல்லலாம் என்ற நிலையில் இப்போட்டி நடைபெற்ற கௌகாத்தி மைதானம் பேட்டிங்க்கு சாதகமாக இருந்து வருவதை வார்னர் – பாண்டிங் ஆகியோர் அறியாவிட்டாலும் டெல்லி அணியின் இயக்குனராக இருக்கும் சௌரவ் கங்குலிக்கு நிச்சயமாக தெரிந்திருக்கும். அதை விட பகல் நேர போட்டியில் பனியின் தாக்கமிருக்காது என்பதால் எப்போதுமே முதலில் பேட்டிங் செய்தால் எளிதாக பெரிய ரன்களை குவித்து வெற்றி பெறலாம்.

இதையும் படிங்க:வீடியோ : சேவாக் போல முதல் ஓவரிலேயே 5 பவுண்டரிகளை தெறிக்க விட்ட ஜெய்ஸ்வால், போராடிய டெல்லி – ராஜஸ்தான் மீண்டும் அதிரடி ஸ்கோர்

அப்படி 2 முக்கிய வெற்றி அஸ்திரங்களை டாஸ் வென்றதால் கையில் பெற்ற டெல்லி முதலில் பந்து வீசத் தீர்மானித்து மிடில் ஓவர்களை தவிர பவர் பிளே மற்றும் டெத் ஓவர்களில் ரன்களை வாரி வழங்கி வெற்றியை கோட்டை விட்டது. எஞ்சிய வெற்றியை பிரிதிவி ஷா, மனிஷ் பாண்டே, ரோசவ், போவல், அக்சர் படேல் உள்ளிட்ட முக்கிய வீரர்களை சொற்ப ரன்களில் அவுட்டாகி தாரை பார்த்தனர். இதனால் இந்த சீசனில் ஹாட்ரிக் தோல்விகளை பதிவு செய்த முதல் அணியாக டெல்லி பரிதாபத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

Advertisement