
இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நாயகர்கள் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் ஓய்வு பெற்று விட்டனர். அதனால் ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடப் போகும் அவர்கள் இந்தியாவுக்காக 2027 உலகக் கோப்பையில் விளையாடுவார்கள் என்று ரசிகர்கள் நம்புகின்றனர். அதுவே இந்தியாவுக்காக அவர்கள் விளையாடும் கடைசித் தொடராக இருக்கும் என்று நம்பப்படுகிறது.
ஆனால் 2027ஆம் ஆண்டு 38, 40 வயதில் அவர்களால் நல்ல உடல் தகுதியுடன் நல்ல ஃபார்மில் இந்தியாவுக்காக அசத்த முடியுமா? என்பது கேள்விக்குறியாகும். அதனால் சுப்மன் கில் தலைமையில் இப்போதே இளம் அணியை உருவாக்கி உலகக் கோப்பையில் களமிறக்க தேர்வுக்குழு விரும்புகிறது. அதற்காக அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் ஒருநாள் தொடருடன் விராட், கோலி ரோஹித்தை பிசிசிஐ கழற்றி விட முடிவெடுத்துள்ளதாக செய்திகள் காணப்படுகின்றன.
இந்நிலையில் விராட், ரோஹித் 2027 விளையாடுவதற்கு முழு தகுதியானவர்கள் என்று முன்னாள் நியூசிலாந்து கேப்டன் ராஸ் டெய்லர் தெரிவித்துள்ளார். மேலும் விராட் கோலி உலகத்தரமான பேட்ஸ்மேனாக வருவார் என்று 2008 ஐபிஎல் தொடரிலேயே ஆஸ்திரேலிய வீரர் கேமரூன் வைட் தெரிவித்ததாகவும் டெய்லர் கூறியுள்ளார். அதை விராட் கோலி இன்று நிரூபித்துள்ளதாகவும் அவர் பாராட்டியுள்ளார்.
இது பற்றி சமீபத்திய பேட்டியில் டெய்லர் பேசியது பின்வருமாறு. “விராட், ரோஹித் இப்போதும் ஃபிட்டாக ரன்கள் அடிப்பதை நீங்களே பார்க்கிறீர்கள். எனவே அடுத்ததாக என்ன செய்யப் போகிறோம் என்பது அவர்களைப் பொறுத்தது. தற்போது பெற்றோர்களாக மாறியுள்ள அவர்கள் தங்களுடைய குடும்பம் மற்றும் குழந்தைகளுடன் நிறைய நேரத்தை செலவிடுவார்கள்”
“ஏனெனில் இவ்வளவு கிரிக்கெட்டை விளையாடியதால் அவர்களுடைய உடலில் தாக்கம் ஏற்பட்டிருக்கும். அதே சமயம் கிரிக்கெட்டில் அவர்கள் விளையாடுவதை உலகம் விரும்புகிறது. உலக மற்றும் இந்திய கிரிக்கெட்டை பொறுத்த வரை அவர்கள் 2027இல் விளையாடுவார்கள் என்று நம்பலாம். முதல் ஐபிஎல் தொடரில் 18 – 19 வயதில் இருந்த விராட் கோலி கொஞ்சம் பருமனாக இருந்தார்”
இதையும் படிங்க: சஹாரா டூ ட்ரீம் 11.. இந்திய அணியை தொட்ட பின் கடைடையை மூடிய 5 நிறுவனங்களின் சோகம்.. சாபமா? துரதிஷ்டமா?
“அப்போது கேமரூன் ஒயிட் இந்த பையனை பார்த்தீர்களா இவர் உலகத்தரம் என்று என்னிடம் சொன்னார். அந்த காலங்களில் சாதாரணமாக இருந்த அவர் தற்போது மிகச் சிறந்த வீரராக மாறியுள்ளார். ஆர்சிபி அணியுடன் விசுவாசமாக இருக்கும் அவர் இந்திய மற்றும் உலக கிரிக்கெட்டுக்கு பங்காற்றிய விஷயங்கள் சிறப்பானது. இம்முறை ஆர்சிபி வெற்றிக்கோட்டை கடந்து அவர் ஐபிஎல் கோப்பையை வென்றதைப் பார்த்தது நன்றாக இருந்தது” என்று கூறினார்.