இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு 1980 காலகட்டங்களில் சம்பளம் கொடுப்பதற்கே பிசிசிஐ திண்டாடியது. 1983 உலகக் கோப்பையை கபில் தேவ் தலைமையில் வென்ற பின் கொஞ்சம் கொஞ்சமாக இந்திய அணிக்கு ஸ்பான்சர்கள் கிடைத்தனர். குறிப்பாக பிரபல சிகரெட் நிறுவனமான ஐடிசி’யின் வில்ஸ் இந்திய அணிக்கு முதல் முறையாக ஜெர்சி ஸ்பான்சராக வந்தார்கள்.
1993 – 2000 வரை இந்திய அணியின் ஜெர்சி ஸ்பான்சராக வில்ஸ் செயல்பட்டு வந்தது. அது போதைப் பொருள்களை விளம்பரப் படுத்துவதாகவும் இருந்தது. அதனால் அரசின் தடை காரணமாக அந்த பெயர் இந்திய அணியிலிருந்து நீக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து விளையாட்டு உபகரணங்கள் விற்கும் நிறுவனமான சஹாரா இந்திய அணியின் ஜெர்சி ஸ்பான்சராக வந்தது.
இந்திய அணியை தொட்டதும்:
அந்த ஸ்பான்சர்ஷிப் பெயரைக் கொண்ட ஜெர்சியில் தான் சௌரவ் கங்குலி தலைமையில் புதிய இந்திய அணி சூதாட்டப் புகார்களை உடைத்து எழுச்சி கண்டு வெற்றிகளைப் பெற்றது. 2013 வரை நீடித்த சஹாரா எனும் பெயர் கொண்ட இந்திய அணியின் ஜெர்சியை ரசிகர்களால் எப்போதும் மறக்க முடியாது. ஏனெனில் அந்த நிறுவனம் ஸ்பான்சர்ஷிப் செய்த போது இந்திய அணி பல மகத்தான வெற்றிகளை பெற்றது.
எடுத்துக்காட்டாக தோனி தலைமையில் 2007 டி20 உலகக் கோப்பை, 2010ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் நம்பர் ஒன் அணி, 2011 உலகக்கோப்பை, 2013 சாம்பியன்ஸ் டிராபி ஆகிய வரலாற்று வெற்றிகளைப் இந்தியா பெற்றது. ஆனால் நாளடைவில் அந்த நிறுவனம் வணிக ரீதியாக நஷ்டத்தை சந்தித்து திவாலானது. அடுத்ததாக இந்தியாவின் பிரபல தொலைக்காட்சி நிறுவனமான ஸ்டார் இந்திய அணியின் ஜெர்ஸி ஸ்பான்சராக வந்தது.
சாபமா அதிர்ஷ்டமின்மையா:
அந்த நிறுவனத்தை டிஸ்னி வாங்கியதால் ஸ்டார் என்ற தனிப்பெயர் கொண்ட நிறுவனம் உரிமங்களை இழந்து மறைந்து போனது. பின்னர் ஓப்போ மொபைல் நிறுவனம் ஸ்பான்சராக வந்தது. ஆனால் சீனப் பொருள்களுக்கு அரசாங்கம் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த நிறுவனமும் குறுகிய காலத்திலேயே பெரிய இழப்பை சந்தித்து வெளியேறியது. அடுத்ததாக குழந்தைகளுக்கு ஆன்லைன் கல்வி கற்றுத்தரும் நிறுவனமான பைஜூஸ் இந்திய அணிக்கு ஸ்பான்சர்ஷிப் செய்ய வந்தது.
அந்த நிறுவனமும் வணிக ரீதியாக நஷ்டத்தை சந்தித்ததால் 3 வருடத்திற்கு மேல் தாக்குப் பிடிக்காமல் சென்றது. அடுத்ததாக 2023 முதல் ரசிகர்களின் பணத்தில் கோடிகளை சம்பாதித்த ட்ரீம் 11 நிறுவனம் இந்திய அணியின் ஜெர்சி ஸ்பான்சராக இருந்தது. ஆனால் இந்திய அரசாங்கம் சூதாட்ட நிறுவனங்களுக்கு எதிராக புதிய மசோதா நிறைவேற்றியுள்ளது.
இதையும் படிங்க: பாகிஸ்தான் வீரரை முந்தி டி20 போட்டிகளில் சரித்திர சாதனையை படைக்க காத்திருக்கும் – அர்ஷ்தீப் சிங்
அதனால் ட்ரீம் 11 தங்களுடைய நிறுவனத்தை மூடுவதாக அறிவித்துள்ளது. அந்த வகையில் சஹாரா, ஸ்டார், ஓப்போ, பைஜூஸ் ட்ரீம் 11 ஆகிய 5 நிறுவனங்கள் இந்திய அணியை தொட்ட நேரம் கடைசியில் கடையை மூடும் அளவுக்கு இழப்பை சந்தித்தன. ஓப்போ மட்டும் மார்க்கெட்டில் நிற்கிறது. அது சாபமா அல்லது அதிர்ஷ்டமின்மையா என்பது தெரியவில்லை.



