விராட் கோலியை விட அந்த விஷயத்தில் ரோஹித் பெரிய லெவலில் வருவார் – வாசிம் ஜாபர் கணிப்பு

Jaffer
- Advertisement -

இலங்கை அணிக்கு எதிராக தனது சொந்த மண்ணில் பங்கேற்று வந்த 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2 – 0 என்ற கணக்கில் கைப்பற்றிய ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா வைட்வாஷ் வெற்றியுடன் கோப்பையை வென்றது. கடந்த மார்ச் 4-ஆம் தேதியன்று முதலில் துவங்கிய இந்த தொடரின் முதல் போட்டியில் இன்னிங்ஸ் வெற்றி பெற்ற இந்தியா ஆரம்பத்திலேயே தொடரில் முன்னிலை பெற்றது. அதன்பின் பெங்களூருவில் கடந்த சில தினங்களாக பகலிரவு போட்டியாக இளஞ்சிவப்பு நிற பந்தில் நடைபெற்று வந்த 2-வது போட்டியிலும் 238 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற இந்தியா சொந்த மண்ணில் கில்லி என மீண்டும் நிரூபித்துள்ளது.

Jasprith Bumrah India

- Advertisement -

டாப் டக்கர் ரோஹித் சர்மா:
மறுபுறம் சமீபத்தில் நடந்த 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் ஒரு வெற்றியைக் கூட சுவைக்க முடியாத இலங்கை இந்த டெஸ்ட் தொடரிலும் அடுத்தடுத்து தோல்விகளை பெற்று 2 வைட்வாஷ் தோல்விகளுடன் பரிதாபமாக நாடு திரும்பியது. முன்னதாக இந்த இலங்கை தொடரில் புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்ட ரோகித் சர்மா தலைமையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா தனது புதிய பயணத்தை வெற்றியுடன் தொடங்கியுள்ளது. கடந்த நவம்பர் மாதம் முதல் முறையாக டி20 கேப்டனாக பொறுப்பேற்ற அவரிடம் கடந்த டிசம்பர் மாதம் ஒருநாள் கேப்டன் பதவியும் ஒப்படைக்கப்பட்டது.

அந்த சமயத்தில் வெற்றிகரமான இந்திய டெஸ்ட் கேப்டனாக இருந்த விராட் கோலி திடீரென பதவி விலகியதை அடுத்து தற்போது 3 வகையான இந்திய அணிக்கும் ரோகித் சர்மா கேப்டனாக செயல்பட துவங்கியுள்ளார். முழுநேர கேப்டனாக பொறுப்பேற்ற பின் இதுவரை நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இலங்கை ஆகிய அணிகளுக்கு நடந்த 3 வகையான கிரிக்கெட்டிலும் 5 தொடர்களில் அவர் கேப்டன்ஷிப் செய்துள்ளார். அந்த 5 தொடர்களில் நடந்த 14 போட்டிகளில் 14 க்கு 14 வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ள ரோகித் சர்மா அடுத்தடுத்த 5 வைட்வாஷ் வெற்றிகளை பதிவு செய்து எதிரணிகளை மிரட்டினார் என்றே கூறலாம்.

Rohith

வேற லெவலில் வருவார்:
இந்நிலையில் இந்தியாவின் வெற்றிகரமான டெஸ்ட் கேப்டனாக விடைபெற்ற விராட் கோலியை விட வரும் காலங்களில் ரோகித் சர்மா மிகச்சிறந்த டெஸ்ட் கேப்டனாக உருவெடுப்பார் என முன்னாள் இந்திய வீரர் வாசிம் ஜாபர் கணித்துள்ளார். இதுபற்றி நேற்றைய போட்டி முடிந்த பின் அவர் பேசியது பின்வருமாறு. “டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலியை விட ரோகித் சர்மா மிகச்சிறந்த கேப்டனாக வர முடியும்.

- Advertisement -

அவர் இன்னும் எத்தனை டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக செயல்படுவார் என்பது பற்றி எனக்கு தெரியாது. ஆனால் நுணுக்கங்களின் அடிப்படையில் அவர் ஒரு மிகச் சிறந்த கேப்டன் என எனக்கு தோன்றுகிறது. அதற்கு ஆதாரமாக ஒவ்வொரு தொடரிலும் அவர் எப்படி எதிர் அணிகளை ஒயிட்வாஷ் செய்கிறார் என்பதை பார்த்து வருகிறோம். இதை பார்க்கும் போது ஒரு நல்ல திறமையான ஒருவரிடம் இந்திய கேப்டன்சிப் பதவி கொடுக்கப்பட்டுள்ளதாக உணர முடிகிறது” என கூறினார்.

rohith

கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் 2021 வரை இந்தியாவின் கேப்டனாக பொறுப்பேற்று வழிநடத்தி வந்த விராட் கோலி 68 டெஸ்ட் போட்டிகளில் 40 வெற்றிகளை பெற்றுக்கொடுத்த இந்தியா மட்டுமல்லாது ஆசிய அளவில் வெற்றிகரமான டெஸ்ட் கேப்டன் என்ற சாதனை படைத்துள்ளார். மேலும் அவர் தலைமையில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளில் இந்தியா பல சரித்திரம் வாய்ந்த வெற்றிகளை பதிவு செய்தது. அப்படிப்பட்ட நிலையில் டெஸ்ட் கேப்டனாக ஆரம்ப கட்டத்தில் மட்டுமே இருக்கும் ரோகித் சர்மா வாசிம் ஜாபர் கூறுவது போல அவரை விட மிகச்சிறந்த கேப்டனாக வருவாரா என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

- Advertisement -

டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல்:
“இதற்கு அடுத்தபடியாக நாம் நிறைய டெஸ்ட் போட்டிகளில் விளையாட போவதில்லை. சொல்லப்போனால் இங்கிலாந்துக்கு எதிரான ஒரு டெஸ்ட் போட்டியை தவிர வங்கதேசத்தில் ஒரு தொடரில் விளையாட உள்ளதால் நமக்கு நிறைய கால இடைவெளி உள்ளது. எனவே தற்போது போலவே அனைத்து வீரர்களும் நல்ல உடல் தகுதியுடன் இருக்கும் பட்சத்தில் அதன் பின் சொந்த மண்ணில் நடைபெறும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியா மிக சிறப்பாக செயல்பட்டால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவதில் எந்த வித பிரச்சனையும் இருக்காது” என இதுபற்றி வாசிம் ஜாபர் மேலும் கூறினார்.

Wasim Jaffer Rohit Sharma

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் இலங்கை வெற்றிக்கு பின் 4-வது இடத்தில் இருக்கும் இந்தியா அடுத்ததாக இங்கிலாந்துக்கு எதிராக 1 டெஸ்ட் போட்டியில் வரும் ஜூன் மாதம் விளையாட உள்ளது. அதன்பின் வங்கதேசம் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு எதிராக டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. தற்போதைய நிலைமையில் இந்த அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இந்திய அணியால் தகுதி பெற முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க : டெஸ்ட் தொடரை வென்றதும் கேப்டன் ரோஹித் செய்த செயல் – ரசிகர்கள் மத்தியில் குவியும் பாராட்டு

இருப்பினும் இப்பொழுது அணியில் இருக்கும் வீரர்கள் இதேபோல காயம் அடையாமல் நல்ல உடல் தகுதியுடன் இப்போது போலவே மிகச் சிறப்பாக விளையாடும் பட்சத்தில் நிச்சயமாக இறுதிப்போட்டிக்கு இந்தியாவால் தகுதி பெற முடியும் என வாசிம் ஜாபர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஏனெனில் இந்தியாவிடம் உலகத்தரம் வாய்ந்த கேப்டனாக ரோகித் சர்மா உள்ளார் என அவர் கூறினார்.

Advertisement