
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான ரோகித் சர்மா ஏற்கனவே டி20 உலக கோப்பை தொடரை கைப்பற்றிய கையோடு டி20 வடிவ போட்டிகளில் இருந்து ஓய்வினை அறிவித்ததால் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே இந்திய அணிக்காக தொடர்ந்து விளையாடி வருகிறார். கடந்த 2023 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை தொடரிலிருந்து புதிய யுத்தியை கையில் எடுத்த ரோகித் சர்மா அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
அதாவது பெரிய ஸ்கோர்களை பற்றி எல்லாம் கவலைப்படாமல் இந்திய அணி சிறப்பான துவக்கத்தை பெற வேண்டும் என்பதற்காகவே ஒருநாள் போட்டிகளிலும் பவர் பிளேவில் அதிரடியான ஆட்டத்தை அவர் வெளிப்படுத்துகிறார். இதன் காரணமாக முதல் 10 ஓவர்களிலேயே இந்திய அணி பெரிய ரன்களை அடிக்கும் பட்சத்தில் பின்னால் வரும் வீரர்கள் மிகச் சிறப்பாக விளையாட வழி செய்கிறது.
அந்த வகையில் அவர் கடந்த சில ஆண்டுகளாகவே மிகச்சிறப்பான துவக்கத்தை இந்திய அணிக்காக வழங்கி வருகிறார். நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் கூட அவர் பெரிய ரன்களை குவிக்காவிட்டாலும் மிகச் சிறப்பான துவக்கத்தை கொடுத்து வருகிறார். இந்நிலையில் இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும் பட்சத்தில் மூன்று போட்டிகளில் விளையாடும்.
அந்த மூன்று போட்டிகளில் விளையாடவுள்ள இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஒருநாள் கிரிக்கெட்டில் புதிய உச்சத்தை தொட காத்திருக்கிறார். அந்த வகையில் ரோகித் சர்மா படைக்கப் போகும் சாதனை யாதெனில் : இதுவரை சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளை பொறுத்த வரை 339 சிக்ஸர்களை அடித்துள்ள ரோஹித் அடுத்து வரும் மூன்று போட்டிகளில் மேலும் 11 சிக்ஸர்களை விளாசும் பட்சத்தில் ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 350 சிக்ஸர்களை அடித்த சர்வதேச வீரர் என்ற சாதனையை நிகழ்த்துவார்.
அதுமட்டுமின்றி இதுவரை ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்களை அடித்த வீரராக பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான ஷாஹித் அப்ரிடி 351 சிக்சருடன் முதலிடத்தில் இருக்கிறார். அவரது இந்த சாதனையை முறியடிக்க ரோஹித் சர்மாவிற்கு 13 சிக்ஸர்கள் மட்டுமே தேவை. எனவே அவர் இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரிலேயே அந்த சாதனையை எட்ட வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.
இதையும் படிங்க : ஐ.சி.சி கோப்பையை வெல்லவில்லை என்றாலும் விராட் கோலி பெஸ்ட் கேப்டன் தான்.. காரணத்தை கூறிய – சுனில் கவாஸ்கர்
ஏற்கனவே மூன்று விதமான சர்வதேச போட்டிகளிலும் சேர்த்து அதிக சிக்ஸர்களை அடித்த வீரர் என்ற சாதனையில் முதலிடத்தில் இருக்கும் ரோகித் சர்மா 632 சிக்சர்களை விளாசியுள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் கிறிஸ் கெயில் 553 சிக்சருடன் இரண்டாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.