இலங்கை நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது முதல் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடியது. ஆனால் அந்த போட்டி மழை காரணமாக தடைபட்ட வேளையில் நேற்று தங்களது இரண்டாவது போட்டியில் நேபாள் அணிக்கு எதிராக விளையாடியது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். அதன்படி முதலில் விளையாடிய நேபாள் அணி 48.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 230 ரன்களை குவித்தது.
பின்னர் 231 ரன்கள் அடித்தால் வெற்றி என்கிற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியானது 17 ரன்கள் குவித்திருந்த போது மழை பெய்ததன் காரணமாக போட்டியில் இலக்கு மாற்றி அமைக்கப்பட்டு 23 ஓவர்களில் 145 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
அதனை துரத்தி விளையாடிய இந்திய அணியானது 20.1 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 147 ரன்கள் குவித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக ரோஹித் சர்மா 74 ரன்களையும், சுப்மன் கில் 67 ரன்களையும் குவித்து அசத்தினர். பின்னர் இந்த போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறுகையில் :
இந்த போட்டியில் நான் பேட்டிங் செய்ய களமிறங்கும் போது சற்று பதட்டமாகவே இருந்தது. ஆனால் அதன் பிறகு நான் நன்றாக விளையாட ஆரம்பித்ததும் போட்டியை வெற்றிகரமாக முடித்து கொடுக்க நினைத்தேன். அந்த வகையில் இந்த போட்டியில் வெற்றி பெற்றது மகிழ்ச்சி. நாங்கள் இலங்கைக்கு வரும்போதே இந்த உலகக் கோப்பை தொடரில் விளையாடும் 15 வீரர்கள் யார் என்பது எங்களுக்கு தெரிந்து விட்டது.
அதனால் இந்த ஆசிய கோப்பை தொடரில் விளையாடும் இரண்டு போட்டிகளால் எந்த ஒரு பெரிய மாற்றமும் இருக்காது. முதல் போட்டியின் போது பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைத்தது. தற்போது இரண்டாவது போட்டியில் பவுலிங் செய்யும் வாய்ப்பு எங்களது அணியின் வீரர்களுக்கு கிடைத்துள்ளது. நிறைய வீரர்கள் காயத்திலிருந்து மீண்டு வந்துள்ளதால் எங்களுக்கு மேட்ச் டைம் மிகவும் அவசியம்.
இதையும் படிங்க : IND vs NEP : பவுலிங்கில் விட்டாலும் பேட்டிங்கில் நேபாளை நொறுக்கிய இந்தியா – மழையை தாண்டி வென்றது எப்படி, சூப்பர் 4க்கு சென்றதா?
இஷான் கிஷன் மற்றும் ஹார்டிக் பாண்டியா ஆகியோர் முதல் போட்டியில் சிறப்பாக விளையாடி இருந்தனர். தற்போது இரண்டாவது போட்டியில் பவுலிங் ஓகே-வாகத்தான் இருந்தது. ஆனால் பீல்டிங்கில் நாங்கள் மிகவும் மோசமாக செயல்பட்டோம். அதில் முன்னேற்றம் காண வேண்டியது அவசியம் என ரோகித் சர்மா கூறியது குறிப்பிடத்தக்கது.