IND vs NEP : பவுலிங்கில் விட்டாலும் பேட்டிங்கில் நேபாளை நொறுக்கிய இந்தியா – மழையை தாண்டி வென்றது எப்படி, சூப்பர் 4க்கு சென்றதா?

IND vs NEP
- Advertisement -

ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா விளையாடிய முதல் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. அதனால் ஒரு புள்ளியை மட்டுமே பெற்ற இந்தியா செப்டம்பர் 4ஆம் தேதி நடைபெற்ற நேபாளுக்கு எதிரான போட்டியில் நிச்சயம் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியது. அதில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய நேபாள் மிகச் சிறப்பான போராட்டத்தை வெளிப்படுத்தி 48.2 ஓவர்களில் 230 ரன்கள் சேர்த்து அசத்தியது.

கத்துக்குட்டியாக பார்க்கப்படும் அந்த அணி வரலாற்றில் முதல் முறையாக இந்தியாவை எதிர்கொண்ட இப்போட்டியில் 62 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல துவக்கத்தை கொடுத்த தொடக்க வீரர்களில் புர்டேல் 38 ரன்களும் ஆசிப் சேக் 58 ரன்களும் எடுத்தனர். இருப்பினும் மிடில் ஆர்டரில் பீம் சர்க்கி 7, கேப்டன் ரோஹித் பௌடேல் 5, மல்லா 2 என முக்கிய வீரர்கள் ரவீந்திர ஜடேஜாவின் சுழலில் சொற்ப ரன்களில் அவுட்டாகி பெரிய பின்னடைவை ஏற்படுத்தினர். இருப்பினும் லோயர் மிடில் ஆர்டரில் ஆரி 29 ரன்களும் சொம்பல் கமி 48 ரன்களும் எடுத்து நேபாள் நல்ல வெற்றி இலக்கை நிர்ணயிக்க உதவினார்கள்.

- Advertisement -

மழையை தாண்டி வெற்றி:
மறுபுறம் பந்து வீச்சில் அசத்திய இந்தியா சார்பில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர். அதை தொடர்ந்து 231 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு கேப்டன் ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் 17/0 ரன்கள் எடுத்த கொடுத்த போது மீண்டும் வந்த மழை போட்டியை நிறுத்தியது. ஏற்கனவே மாலை நேரத்தில் வந்து சுமார் ஒரு மணி நேரம் போட்டியை தாமதப்படுத்திய மழை 2வது முறையாக வந்த போது 2 மணி நேரத்திற்கு மேல் மீண்டும் தாமதம் செய்தது.

இருப்பினும் இரவு 10 மணிக்கு மேல் கருணை காட்டி மழை ஒதுங்கியதால் டிஎல்எஸ் விதிமுறைப்படி இந்தியாவுக்கு 23 ஓவர்களில் 145 ரன்கள் தேவை என்ற புதிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதைத் துரத்திய இந்தியாவை கேப்டன் ரோகித் சர்மா அதிரடியாக விளையாடி விரைவாக ரன்களை சேர்த்து பாதைக்கு அழைத்து வந்தார். குறிப்பாக கடந்த போட்டியில் ஏமாற்றத்தை கொடுத்த அவர் இம்முறை நேபாள் பவுலர்களை சிறப்பாக எதிர்கொண்டு வேகமாக அரை சதமடித்து வெற்றியை உறுதி செய்தார்.

- Advertisement -

அதே போல மறுபுறம் தம்முடைய பங்கிற்கு சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய கில் அரை சதம் கடந்து 8 பவுண்டரி 1 சிக்சருடன் 67* (62) ரன்கள் எடுத்தார். மறுபுறம் இறுதி வரை அவுட்டாகாத ரோகித் சர்மாவும் 6 பவுண்டரி 5 சிக்ஸருடன் 74* (59) ரன்கள் எடுத்ததால் 20.1 ஓவரிலேயே 147/0 ரன்கள் எடுத்த இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கொடுத்தனர். முன்னதாக இப்போட்டியில் கத்துக்குட்டியான நேபாளை ஆல் அவுட்டாக்க இந்தியா 49 ஓவர்கள் எடுத்துக் கொண்டது ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க:IND vs NEP : நேபாள் போட்டியிலும் குறிக்கிட்ட மழை. மாற்றி அமைக்கப்பட்ட இலக்கு – விதிமுறை கூறுவது என்ன?

இருப்பினும் பவுலிங்கில் விட்டாலும் பேட்டிங்கில் 145 ரன்களை 20 ஓவர்களிலேயே எட்டிய இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்று அசத்தியுள்ளது. மேலும் தம்முடைய 2 லீக் சுற்றின் முடிவில் குரூப் ஏ பிரிவில் 1 சமன், 1 வெற்றியுடன் மொத்தம் 3 புள்ளிகளை பெற்ற இந்தியா சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்று அசத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து சூப்பர் 4 சுற்றில் செப்டம்பர் 10ஆம் தேதி பாகிஸ்தானை மீண்டும் இந்தியா எதிர்கொள்ள உள்ளது. மறுபுறம் இந்தியாவுக்கு முடிந்தளவுக்கு பெரிய சவாலை கொடுத்த நேபாள் முதல் போட்டியில் பாகிஸ்தானிடமும் தோற்றதால் இத்தொடரிலிருந்து முதல் அணியாக வெளியேறியுள்ளது.

Advertisement