இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியானது ஜூலை 20-ஆம் தேதி டிரினிடாட் நகரில் துவங்கி நடைபெற்று வந்தது. இந்த போட்டியின் கடைசி நாளான நேற்று வெஸ்ட் இண்டிஸ் அணி வெற்றிபெற 289 ரன்கள் தேவைப்பட்டது. அதேபோன்று இந்திய அணி எஞ்சியுள்ள எட்டு விக்கெட்டுகளை வீழ்த்தினால் வெற்றி என்ற நிலை இருந்தது. ஆனால் நேற்றைய போட்டி மழையால் ஒரு பந்துகூட வீசப்படாமல் கைவிட்டதால் போற்றி டிராவில் முடிவடைந்தது. இதன் காரணமாக இந்திய அணி இந்த தொடரை ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.
இந்நிலையில் இந்த டெஸ்ட் தொடரில் பெற்ற வெற்றி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறியதாவது : ஒவ்வொரு வெற்றியுமே வித்தியாசமானது. வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நாங்கள் பெற்ற இந்த வெற்றி என்பதும் வித்தியாசமான ஒன்று. ஏனெனில் இங்கு ஒரு சவாலுடன் நாங்கள் விளையாடி வெற்றியை பெற்றுள்ளோம். இந்த தொடரில் நாங்கள் விளையாடிய விதம் சிறப்பாக இருந்தது. நாங்கள் சிறப்பாக விளையாடியும் போட்டியின் கடைசி நாளான இன்று எதிர்பாரா விதமாக மழை காரணமாக விளையாட முடியாமல் போனது.
போட்டியில் நான்காம் நாள் ஆட்டத்தில் நாங்கள் மிகவும் பாசிட்டிவாக விளையாடினோம். வெற்றியை நோக்கியே நகர்ந்த எங்களுக்கு கடைசி நாளில் மழை அனைத்தையும் முடித்து விட்டது. நிச்சயம் ஐந்தாவது நாளில் நம்பிக்கையுடன் களமிறங்கி வெற்றிக்காக போராட இருந்தோம். ஏனெனில் கடைசி நாளில் பேட்டிங் செய்வது எவ்வளவு கடினம் என்பது உங்களுக்கும் தெரிந்திருக்கும். போட்டி நடந்திருந்தால் நிச்சயமாக நாங்கள் அவர்களுக்கு அழுத்தத்தை கொடுத்திருப்போம். ஆனால் இன்றைய போட்டி நடைபெறாமல் எங்களால் அவர்களை வீழ்த்த முடியாமல் போயிற்று.
சிராஜை மிகவும் அருகில் இருந்து நான் பார்த்து வருகிறேன். அவர் தற்போது எல்லாம் மிகச் சிறப்பாக பந்துவீசி வருகிறார். மேலும் அவர் தற்போது ஒரு மிகப்பெரிய அடியை எடுத்து வைத்துள்ளார். இந்திய அணியின் பந்துவீச்சை துறையை தலைமை தாங்கி வழி நடத்துகிறார். ஆனால் நான் யாரும் அப்படி பந்துவீச்சு துறையை தலைமை தாங்கி வழிநடத்த விரும்பவில்லை. ஏனெனில் அனைத்து பந்து வீச்சாளர்களுமே தங்களது கைக்கு பந்து வரும்போது அவர்களே லீடர் என்று நினைத்து சிறப்பாக செயல்பட வேண்டும்.
அதேபோன்று இஷான் கிஷன் போன்ற ஒரு வீரரும் அணிக்கு தேவை. ஏனெனில் எப்போதெல்லாம் நமக்கு வேகமாக ரன்கள் தேவை என்று நினைக்கிறோமோ? அப்போது அவரை முன்கூட்டியே களமிறக்கினால் அவரால் பயமின்றி விளையாட முடியும். அதேபோன்று ஒரு இன்னிங்ஸை சரியாக கட்டமைத்துச் செல்ல விராட் கோலியும் வேண்டும். இது போன்ற கலவையான வீரர்கள் இருப்பதாலேயே நமது அணி பலமான அணியாக இருந்து வருகிறது.
இதையும் படிங்க : 2023 உ.கோ மட்டுமல்ல, அந்த தொடரிலும் ரிஷப் பண்ட் விளையாட மாட்டாரு – உண்மையான அப்டேட் கொடுத்த இஷாந்த் சர்மா
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் ஒவ்வொரு போட்டியும் நமக்கு முக்கியம். இந்த தொடரில் ஒரு வெற்றியுடன் நாம் பயணத்தை ஆரம்பித்துள்ளோம். இனிவரும் தொடர்களில் மூன்று துறைகளிலுமே பேட்டிங், பவுலிங் மற்றும் பீல்டிங் என அனைத்திலும் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்த விரும்புகிறோம் என இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறியது குறிப்பிடத்தக்கது.