2023 உ.கோ மட்டுமல்ல, அந்த தொடரிலும் ரிஷப் பண்ட் விளையாட மாட்டாரு – உண்மையான அப்டேட் கொடுத்த இஷாந்த் சர்மா

- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்று முடிந்த 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் இந்தியா கொஞ்சமும் போராடாமல் 209 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்த போது பெரும்பாலான இந்திய ரசிகர்கள் ரிஷப் பண்ட் இல்லையே என்று ஏக்கத்தை வெளிப்படுத்தியதை மறக்க முடியாது. ஏனெனில் டெல்லியைச் சேர்ந்த அவர் கடந்த 2017இல் அறிமுகமாகி வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் தடுமாறினாலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் தோனியையே மிஞ்சி ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்க ஆகிய சவாலான வெளிநாடுகளில் சதமடித்த முதல் ஆசிய விக்கெட் கீப்பர் என்ற சாதனை படைத்தார்.

Rishabh Pant IND vs ENG Rohit Sharma

- Advertisement -

அதிலும் 20202/21 பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் காபா மைதானத்தில் கடைசி இன்னிங்சில் 89* ரன்கள் அடித்த அவர் ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியாவுக்கு பெற்றுக் கொடுத்த சரித்திர வெற்றியை மறக்க முடியாது. மேலும் கடந்த 2022 ஜூலையில் இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற ஒருநாள் தொடரின் கடைசி போட்டியில் 125* ரன்கள் அடித்து 2 – 1 (3) என்ற கணக்கில் இந்தியாவை வெற்றி பெற வைத்த அவர் தொடர்ந்து வாய்ப்பு கொடுத்தால் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டிலும் அசத்துவேன் என்பதை நிரூபித்தார்.

உண்மையான அப்டேட்:
அதனால் நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்த அவர் டிசம்பரில் புத்தாண்டுக்காக வீடு திரும்பிக் கொண்டிருந்த போது மோசமான கார் விபத்தில் சிக்கி அதிர்ஷ்டவசத்தால் உயிர் தப்பினார். அந்த நிகழ்வு மொத்த ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்களையும் சோகத்தில் ஆழ்த்தினாலும் அதிர்ஷ்டத்தால் தப்பிய அவர் அறுவை சிகிச்சைகளை கடந்து தற்போது கொஞ்சம் கொஞ்சமாக பெங்களூருவில் இருக்கும் தேசிய கிரிக்கெட் அகாடமியில் குணமடைந்து வருகிறார். அதிலும் குணமடைவதற்கு ஒரு வருடம் தேவைப்படும் என்று ஆரம்பத்தில் செய்திகள் வெளியாகிய நிலையில் தற்போது அவர் உடற்பயிற்சிகளை செய்யும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Rishabh-Pant

அதன் காரணமாக வரும் அக்டோபரில் சொந்த மண்ணில் நடைபெறும் 2023 உலக கோப்பையில் அவர் விளையாடுவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுடன் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் 2023 உலகக் கோப்பை மட்டுமல்ல 2024 ஐபிஎல் தொடரிலும் ரிஷப் பண்ட் விளையாடுவதற்கு சந்தேகம் என அதே டெல்லியை சேர்ந்த நட்சத்திர வீரர் இஷாந்த் சர்மா தெரிவித்துள்ளார். குறிப்பாக அனைவரும் நினைப்பது போல் இது லேசான காயமல்ல என்று தெரிவிக்கும் அவர் விக்கெட் கீப்பர்கள் அடிக்கடி உட்கார்ந்து எழுந்திருக்க வேண்டிய நிலைமை ஏற்படும் என்பதால் முழுமையாக குணமடைவதற்கு இன்னும் அதிக காலம் தேவைப்படும் என கூறியுள்ளார்.

- Advertisement -

இது பற்றி ஜியோ சினிமா சேனலில் அவர் பேசியது பின்வருமாறு. “அடுத்த ஐபிஎல் தொடரிலும் ரிசப் பண்ட் விளையாடுவதை நாம் பார்க்கப் போவதில்லை என்று நான் கருதுகிறேன். ஏனெனில் அது சிறிய காயமல்ல. மாறாக அது மிகப்பெரிய காயமாகும். அதிலிருந்து லேசாக குணமடைந்துள்ள அவர் தற்போது நடக்கத் துவங்கி விக்கெட் கீப்பிங் செய்யும் பயிற்சிகளை எடுத்து வருகிறார். ஆனால் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இருப்பவருக்கு விரைவில் முழுமையாக குணமடைந்து வருவது சுலபமானதல்ல”

Ishanth-1

“தற்போதைய நிலைமையில் அவர் 2வது அறுவை சிகிச்சை செய்து கொள்ள தேவையில்லை என்பது நல்ல விஷயமாகும். ஒருவேளை அது நடைபெற்றிருந்தால் அவர் குணமடைவதற்கு இன்னும் அதிக காலம் தேவைப்பட்டிருக்கும். எனவே தற்போது ஒரு அறுவை சிகிச்சை மட்டும் மேற்கொண்டுள்ள அவர் நிச்சயமாக உலகக் கோப்பையில் விளையாட ஃபிட்டாகி விடுவார் என்று எனக்கு தோன்றவில்லை. அதனால் அடுத்த ஐபிஎல் தொடருக்கு அவர் குணமடைந்து வந்தாலே அது சிறப்பானதாக இருக்கும்” என்று கூறினார்.

இதையும் படிங்க:உங்களுக்கெல்லாம் வேலையில்லையா? தில்லாலங்கடி செய்த பாகிஸ்தான் ரசிகர்கள் – இர்பான் பதான் பதிலடி

அவர் கூறுவது போல பேட்ஸ்மேன்களை விட விக்கெட் கீப்பர் போட்டி முழுவதும் நிற்க வேண்டும் என்பதுடன் அடிக்கடி குனிந்து எழுந்திருக்க விளையாட வேண்டும். எடுத்துக்காட்டாக விக்கெட் கீப்பராக இல்லாத ஹர்திக் பாண்டியா இன்னுமே முழுமையாக குணமடையாமல் முதுகு வலியுடன் இருந்தாலும் இடையிடையே ஓய்வுகளை எடுத்து விளையாடி வருகிறார். ஆனால் விக்கெட் கீப்பர் முழுமையாக குணமடையாமல் விளையாட முடியாது என்பதால் ரிஷப் பண்ட் இந்த உலகக் கோப்பையில் விளையாடுவது சந்தேகமாக பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement