உங்களுக்கெல்லாம் வேலையில்லையா? தில்லாலங்கடி செய்த பாகிஸ்தான் ரசிகர்கள் – இர்பான் பதான் பதிலடி

- Advertisement -

இலங்கையில் வளர்ந்து வரும் ஆசிய கிரிக்கெட் வீரர்களுக்கான 2023 ஆசிய கோப்பை விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது. அதில் 2022 அண்டர்-19 உலக கோப்பையை வென்ற அனுபவமிக்க யாஷ் துள் தலைமையில் களமிறங்கிய இந்தியா ஏ அணி லீக் சுற்றில் அமீரகம் நேபாளம் மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகளை தோற்கடித்து செமி ஃபைனலில் வங்கதேசத்தை வீழ்த்தி ஃபைனலுக்கு சென்றது. இருப்பினும் லீக் சுற்றில் நேபாள் மற்றும் அமீரகம் ஆகிய அணிகளை மட்டும் தோற்கடித்து செமி ஃபைனலில் இலங்கையை தோற்கடித்த பாகிஸ்தான் ஃபைனலில் இந்தியாவை நேற்று முன்தினம் கொழும்பில் எதிர்கொண்டது.

அதில் முதலில் பேட்டிங் செய்த அந்த அணி தயாப் தாஹிர் சதத்தின் உதவியுடன் அதிரடியாக விளையாடி 353 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது. அதை துரத்திய இந்தியாவுக்கு இதே தொடரில் லீக் சுற்றில் பாகிஸ்தானுக்கு எதிராக சதமடித்து வெற்றி பெற வைத்த தமிழக வீரர் சாய் சுதர்சன் 29 ரன்கள் விளாசி நல்ல துவக்கத்தை பெற்ற போதிலும் நோ-பாலில் தவறான தீர்ப்பு வழங்கி காலி செய்த அம்பயர்கள் அடுத்து வந்த நிக்கின் ஜோஸையும் எட்ஜ் கொடுக்காத போதிலும் அவுட் என்று அறிவித்தார்கள். அப்படி ஆரம்பத்திலேயே நடுவர்களாக வீழ்த்தப்பட்ட இந்தியாவுக்கு மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களும் கைகொடுக்க தவறியதால் 128 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற பாகிஸ்தான் கோப்பையை வென்றது.

- Advertisement -

பதான் பதிலடி:
ஆனாலும் சதமடித்த தயாப் தஹிர் சீனியர் அணியின் கேப்டன் பாபர் அசாமை விட அதிக வயதுடையவர் என்பதுடன் பாகிஸ்தான் ஏ அணியில் ஏற்கனவே 85 சர்வதேச போட்டியில் விளையாடிய வீரர்கள் இடம் பிடித்திருந்தனர். மறுபுறம் 25க்கும் குறைவான வயதில் ஒருவர் கூட சர்வதேச அளவில் விளையாடாத வீரர்களை கொண்டிருந்த இந்தியா ஏ இந்தளவுக்கு சிறப்பாக செயல்பட்டு ஃபைனல் வரை சென்றதே இந்திய ரசிகர்களுக்கு பெருமையாக அமைந்தது. இருப்பினும் என்னவோ உலகக் கோப்பையை வென்றது போல் சமூக வலைதளங்களில் வழக்கம் போல இந்தியர்களை தேடி வந்து பாகிஸ்தான் ரசிகர்கள் கலாய்த்தனர்.

அதிலும் குறிப்பாக கடந்த 2022 டி20 உலகக் கோப்பையில் ஞாயிற்றுக்கிழமை அன்று வென்ற காரணத்தால் “சொந்தக்காரர்களே இந்த ஞாயிற்றுக்கிழமை எப்படி இருக்கிறது” என்று முன்னாள் இந்திய வீரர் இர்பான் பதான் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்த போட்டியில் வென்ற பின் அவரை டேக் செய்து நிறைய பாகிஸ்தான் ரசிகர்கள் கலாய்த்தனர்.

- Advertisement -

ஆனாலும் அவர் எந்த பதிலும் கொடுக்காததால் இர்ஃபான் பதான் என்ற பெயரில் தாங்களாகவே ஒரு போலியான கணக்கை உருவாக்கிய பாகிஸ்தான் ரசிகர்கள் அதில் தங்களுக்கு தாங்களே பெருமை பேசி வாழ்த்தி கொண்டது பின்வருமாறு. “பாகிஸ்தானுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். இன்றைய எனது ஞாயிறு மிகவும் அருமையாக இருந்தது. குறிப்பாக போட்டியின் முடிவை அறிந்திருந்ததால் நான் தூங்குவதை விரும்பினேன். அதற்காக நான் சோகமாக இல்லை” என்று பதிவிட்டனர்.

இவை அனைத்தையும் பார்த்த இர்ஃபான் பதான் தமது பெயரில் போலியாக பாகிஸ்தானை பாராட்டுவது போலவும் இந்தியாவை தாழ்த்துவதும் போல தில்லாலங்கடியாக பதிவிட்ட பாகிஸ்தான் ரசிகர்களுக்கு தம்முடைய அதிகாரப்பூர்வமான ட்விட்டர் கணக்கிலிருந்து தக்க பதிலடி கொடுத்தார். குறிப்பாக ஒரு ஞாயிற்றுக்கிழமை ட்வீட் போடவில்லை என்றால் வேலையில்லாமல் சும்மா இருப்பவர்கள் விட்டு வைப்பதில்லை என்று அவர் பாகிஸ்தான் ரசிகர்களுக்கு பதிலடி கொடுத்தது பின்வருமாறு.

இதையும் படிங்க:ஐபிஎல் தொடரின் போது தோனி, விராட் கோலி கொடுத்த ஆலோசனை – கற்றுக்கொண்டதை பற்றி சாய் சுதர்சன் பேட்டி

“ஞாயிற்றுக்கிழமை ஒரு ட்வீட்டை மறக்கவில்லையா? நீங்கள் எவ்வளவு சும்மா இருக்கிறீர்கள்” என்று பதிவிட்டுள்ளார். மொத்தத்தில் சாதாரண ஜூனியர் அளவிலான ஆசிய கோப்பைக்கே இரு நாட்டைச் சேர்ந்தவர்கள் இப்படி மல்லுக்கட்டும் நிலையில் வரும் செப்டம்பர் மாதம் முதன்மையான ஆசிய கோப்பை மற்றும் அக்டோபர் மாதம் 2023 உலக கோப்பையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் குறைந்தது 4 போட்டிகளில் மோதும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த சமயங்களில் இதையும் மிஞ்சி பல விமர்சனங்களும் கிண்டல்களும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement