மொத்தமா 10 ஓவரை குடுத்தரலாம்னு நெனச்சேன். ஆனா 7 ஓவரோட சிராஜ்ஜ நிப்பாட்ட காரணமே இதுதான் – ரோஹித் விளக்கம்

Siraj-and-Rohit
Advertisement

கொழும்பு மைதானத்தில் நேற்று நடைபெற்ற 16-வது ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது இலங்கை அணியை வீழ்த்தி எட்டாவது முறையாக ஆசிய கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது. இந்திய அணியின் இந்த சிறப்பான செயல்பாடு பலரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணியானது ஓரளவு சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் மிக மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 15.2 ஓவர்களில் 50 ரன்கள் மட்டுமே எடுத்து சுருண்டது.

இந்திய அணி சார்பாக சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய முகமது சிராஜ் 7 ஓவர்கள் வீசி 21 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றி இலங்கை அணியை சுருட்டினார். பின்னர் தொடர்ந்து 51 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்தியா 6.1 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 51 ரன்கள் குவித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியில் தனது அற்புதமான பந்துவீச்சை வெளிப்படுத்திய சிராஜ் போட்டியின் மூன்றாவது ஓவரில் 4 விக்கெட்டுகளை கைப்பற்றியதோடு தான் வீசிய 16-வது பந்திலேயே தன்னுடைய ஐந்தாவது விக்கெட்டை வீழ்த்தி இருந்தார். மொத்தமாக இந்த போட்டியில் ஆறு விக்கெட்டுகளை வீழ்த்திய அவர் ஒட்டுமொத்தமாக இலங்கை அணியை தோல்விக்கு தள்ளினார்.

இந்நிலையில் இந்த போட்டியின் போது தொடர்ச்சியாக அவர் 7 ஓவர்கள் வீசிய வேளையில் அவருக்கு 10 ஓவரையும் ஒரே ஸ்பெல்லில் வழங்க நினைத்ததாகவும், ஆனால் அணியின் ட்ரெயினர் தான் சிராஜை தொடர்ந்து பந்து வீசவைக்க வேண்டாம் என்று செய்தி அனுப்பியதாகவும் போட்டி முடிந்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் :

- Advertisement -

ஒரே ஸ்பெல்லில் சிராஜ் ஏழு ஓவர்கள் வீசினார். ஏழு ஓவர்களை தொடர்ச்சியாக வீசுவது என்பது அதிகம் தான். இருந்தாலும் அவரை நான் பத்து ஓவர்கள் முழுமையாக வீச வைக்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் ட்ரெயினரிடம் இருந்து வந்த செய்தியில் : சிராஜை இதோடு நிறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார். ஏனெனில் ஒரு பேட்ஸ்மேனோ அல்லது பவுலரோ நன்றாக விளையாடிக் கொண்டிருக்கும்போது அந்த வாய்ப்பை தொடர்ச்சியாக பயன்படுத்தவே நினைப்பார்கள். ஆனால் அங்கு தான் எனது வேலை வருகிறது.

இதையும் படிங்க : இன்னைக்கு எதையும் திங்க் பண்ண விரும்பல. தூங்கி எழுந்து நாளைக்கு பேசிக்குறோம் – இலங்கை பயிற்சியாளர் விசித்திர பேட்டி

சிராஜின் வேலைப்பலுவை கணக்கில் கொண்டே அந்த ஸ்பெல்லை அங்கேயே நிறுத்து நேர்ந்தது. ஏற்கனவே இலங்கை அணிக்கு எதிராக திருவனந்தபுரத்தில் நடைபெற்ற ஒரு போட்டியில் இப்படித்தான் தொடர்ச்சியாக 8 முதல் 9 ஓவர்கள் வீசினார் என்று நினைக்கிறேன். அப்போதும் அவர் மிகச் சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். நேற்றைய போட்டியில் மற்றவர்களை காட்டிலும் சிராஜ் பந்தினை சற்று அதிகமாக நகர்த்தினார் என ரோகித் சர்மா பேசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement