பெரிய ஸ்கோர் வரலைன்னு ஒத்துகிறேன் – தன்னுடைய ஃபார்ம் மற்றும் விமர்சனங்களுக்கு ரோஹித் சர்மாவின் பதில் என்ன

Rohit-Sharma
Advertisement

2023 அக்டோபர் மாதம் சொந்த மண்ணில் நடைபெறும் 50 ஓவர் உலக கோப்பை தயாராகும் வகையில் முதலில் இலங்கைக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் தொடரை 3 – 0 (3) என்ற கணக்கில் வென்ற இந்தியா அடுத்ததாக நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்று வரும் ஒருநாள் தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்று 2 – 0* (3) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே கோப்பையை கைப்பற்றியுள்ளது. முன்னதாக விராட் கோலிக்கு பின் கேப்டனாக பொறுப்பேற்ற ரோஹித் சர்மா இருதரப்பு தொடர்களை வென்றாலும் 2022 ஆசிய மற்றும் டி20 உலக கோப்பையில் வெற்றியை பதிவு செய்ய தவறினார்.

Rohit sharma IND vs NZ

அதனால் 2023 உலகக் கோப்பையே கேப்டன்ஷிப் பயணத்தில் அவருடைய கடைசி வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. அதை விட கேப்டனாக முன்னின்று அதிரடியாக ரன்களை குவிக்க வேண்டிய ஓப்பனிங் இடத்தில் சமீப காலங்களாகவே ஹிட்மேன் என்ற தன்னுடைய பெயருகேற்றார் போல் அசத்த முடியாமல் தடுமாறும் அவர் அதற்காக நிறைய விமர்சனங்களை சந்தித்து வருகிறார். குறிப்பாக கடைசியாக 2020 ஜனவரியில் ஒருநாள் போட்டிகளில் சதமடித்திருந்த அவர் 3 வகையான கிரிக்கெட்டையும் சேர்த்து கடந்த 51 இன்னிங்ஸ்களாக சதமடிக்க முடியாமல் தடுமாறி வருகிறார்.

- Advertisement -

மாற்றம் செய்கிறேன்:
இத்தனைக்கும் 2019 – 2021 வரை சதமடிக்க முடியாமல் விராட் கோலி தவித்த அளவுக்கு அவர் தடுமாறுவதாகவும் தெரியவில்லை. ஏனெனில் தொடக்க வீரராக களமிறங்கி பெரும்பாலான போட்டிகளில் அதிரடியான பவுண்டரிகளை பறக்க விட்டு 30, 40, 70 போன்ற நல்ல ரன்களை விளாசி நல்ல தொடக்கத்தை பெறும் அவர் துரதிஷ்டவசமாக அதை சதமாக மாற்ற முடியாமல் அவுட்டாகி விடுகிறார். இருப்பினும் ஏற்கனவே ஒருநாள் கிரிக்கெட்டில் 29 சதங்களையும் 3 உலக சாதனை இரட்டை சதங்களை அடித்துள்ள அவரால் ஏன் நல்ல தொடக்கத்தை பெரிய ரன்களாக மாற்ற முடியவில்லை என்பது மட்டும் புரியவில்லை என முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

Rohit Sharma 83

எடுத்துக்காட்டாக ராய்ப்பூரில் நடைபெற்ற 2வது ஒருநாள் போட்டியில் இதர பேட்ஸ்மேன்கள் தடுமாறிய போது ரோகித் சர்மா மட்டுமே 7 பவுண்டரி 2 சிக்சருடன் 51 (50) ரன்களை 100+ ஸ்ட்ரைக் ரேட்டில் அடித்து இந்தியாவின் வெற்றியை உறுதி செய்து அவுட்டானார். இருப்பினும் இந்திய பேட்டிங் துறையின் தூணாக கருதப்படும் அவர் உலகக்கோப்பை நடைபெறும் இந்த வருடத்தில் மிக விரைவில் சதமடித்து முழுமையான பார்முக்கு திரும்ப வேண்டியது அவசியமாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் விரைவில் சதமடிப்பதற்காக தேவையான மாற்றங்களை தன்னுடைய பேட்டிங்கில் செய்து வருவதாக தெரிவிக்கும் ரோஹித் சர்மா சதமடிக்கவில்லை என்றாலும் அணி வெற்றி பெறும் அளவுக்கு தேவையான ரன்களை குவிப்பதால் அதைப் பற்றி கவலைப்படவில்லை என்று தன்னுடைய விமர்சனங்களுக்கு பதிலளித்துள்ளார்.

- Advertisement -

இது பற்றி 2வது ஒருநாள் போட்டிக்கு பின் அவர் பேசியது பின்வருமாறு. “தற்போது என்னுடைய விளையாட்டில் சில மாற்றங்களை செய்ய நான் முயற்சித்து வருகிறேன். குறிப்பாக எந்த பவுலர்களை எந்த சமயத்தில் அடிக்க வேண்டும் என்பதில் மாற்றங்களை செய்து வருகிறேன். அது தான் எதிரணிக்கு அழுத்தத்தை கொடுக்கும் என்பதால் அதுவே முக்கியமாகும். மேலும் தற்சமயத்தில் என்னிடமிருந்து பெரிய ஸ்கோர்கள் வரவில்லை என்பது எனக்கு தெரியும். ஆனால் அதைப் பற்றி நான் அதிகமாக கவலைப்படவில்லை. அதே சமயம் என்னுடைய பேட்டிங்கை நான் மிகவும் மகிழ்ச்சியாக செய்கிறேன்”

Rohit-Sharma

“அதில் என்னுடைய அணுகுமுறையை எப்போதும் ஒரே மாதிரியாக வைத்துள்ளேன். அதனால் தற்போது நான் அணிக்காக எவ்வாறு பேட்டிங் செய்கிறேன் என்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். எனவே நிச்சயமாக விரைவில் எனக்கு பெரிய ஸ்கோர் தாமாக வரும் என்பதும் எனக்கு தெரியும்” என்று கூறினார். அவர் கூறுவது போல நல்ல தொடக்கத்தை பெற்று அதிரடியான ஸ்ட்ரைக் ரேட்டில் செயல்படும் ரோகித் சர்மா உண்மையாகவே சமீப காலங்களில் விராட் கோலி தடுமாறி அளவுக்கு தடுமாறவில்லை என்பது தெளிவாக தெரிகிறது.

இதையும் படிங்க: வீடியோ : உன்கிட்ட வேற லெவல் திறமை இருக்குய்யா, அதை மட்டும் செஞ்சா உலகையே மிரட்டலாம் – உம்ரான் மாலிக்க்கு ஷமி அட்வைஸ்

அதனால் நல்ல தொடக்கத்தை பெற்றும் துரதிஷ்டவசமாக அவுட்டாகி வரும் தமக்கு விரைவில் 3 இலக்க ரன்கள் தாமாகவே தேடி வரும் என்று தெரிவிக்கும் ரோகித் சர்மா தற்சமயத்தில் இந்தியா வெற்றி பெறுவதே தமக்கு மிகவும் மகிழ்ச்சியாக கொடுப்பதாக கூறியுள்ளார்.

Advertisement