வீடியோ : உன்கிட்ட வேற லெவல் திறமை இருக்குய்யா, அதை மட்டும் செஞ்சா உலகையே மிரட்டலாம் – உம்ரான் மாலிக்க்கு ஷமி அட்வைஸ்

- Advertisement -

நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் 12 ரன்கள் வித்தியாசத்தில் போராடி வென்ற இந்தியா வெற்றியாளரை தீர்மானிக்கும் 2வது போட்டியில் அபரமாக செயல்பட்டு 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வென்றது. ராய்ப்பூரில் நடைபெற்ற 2வது போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்து வீசிய இந்தியாவின் தரமான பந்து வீச்சுக்கு தாக்குப் பிடிக்க முடியாத நியூசிலாந்து சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து 108 ரன்களுக்குச் சுருண்டது. குறிப்பாக டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டானதால் 15/5 என சரிந்த அணிக்கு அதிகபட்சமாக கிளன் பிலிப்ஸ் 36 ரன்கள் எடுத்தார்.

இந்தியா சார்பில் அதிகபட்சமாக முகமது ஷமி 3 விக்கெட்களை எடுத்தார். அதைத் தொடர்ந்து 109 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு ரோகித் சர்மா 51 (50) ரன்களும் சுப்மன் கில் 40* (53) ரன்களும் எடுத்து எளிதாக வெற்றி பெற வைத்தனர். இந்த வெற்றியால் 2 – 0* (3) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே தொடரை கைப்பற்றியுள்ள இந்தியா உலகின் நம்பர் ஒன் அணியாக வந்த நியூசிலாந்தை தோற்கடித்து சொந்த மண்ணில் தங்களை கில்லி என்பதை நிரூபித்தது. மேலும் அக்டோபர் மாதம் நடைபெறும் உலகக் கோப்பைக்கு தயாராகும் பயணத்திலும் இந்தியா வெற்றி நடை போடுகிறது.

- Advertisement -

ஜூனியருக்கு அட்வைஸ்:
இந்த வெற்றிக்கு 3 விக்கெட்டுகள் எடுத்து முக்கிய பங்காற்றிய முகமது ஷமி ஆட்டநாயகன் விருதை வென்றார். கடந்த 10 வருடங்களாக 3 வகையான கிரிக்கெட்டிலும் விளையாடி வரும் முகமது ஷமி சமீப காலங்களில் டி20 கிரிக்கெட்டில் தடுமாறினாலும் ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவின் முதன்மை வேகப்பந்து வீச்சாளராக ஜொலித்து வருகிறார். அவர் வந்த காரணத்தால் இலங்கைக்கு எதிரான தொடரில் விளையாடிய இளம் எக்ஸ்பிரஸ் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக்க்கு இத்தொடரில் வாய்ப்பு கிடைக்கவில்லை.

அந்த நிலையில் இப்போட்டியின் முடிவில் தனது சீனியரை பேட்டி எடுக்கும் வாய்ப்பை பெற்ற உம்ரான் மாலிக் தமக்கு மிகவும் பிடித்த தரமான பவுலரான நீங்கள் நான் முன்னேறுவதற்கு சில ஆலோசனைகளை வழங்குங்கள் என்று முகமது ஷமியிடம் கேட்டார். அதற்கு கற்றுக் கொடுத்தாலும் வராத அதிரடியான வேகத்தை இயற்கையாகவே கொண்டுள்ள நீங்கள் நல்ல லைன், லென்த்தில் கவனம் செலுத்தினால் யாராலும் உங்களை தொட முடியாது முகமது ஷமி ஆலோசனை கொடுத்தார். அதை மட்டும் செய்தால் இந்திய வேகப்பந்து வீச்சு கூட்டணியில் நாம் இருவரும் சேர்ந்து உலகின் எதிரணிகளை மிரட்டலாம் என்று தெரிவித்த அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“முதலில் உங்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன். பிரகாசமான வருங்காலத்தை கொண்டுள்ள நீங்கள் இன்னும் சிறப்பாக செயல்படுவீர்கள் என்று நம்புகிறேன். உங்களுக்கு நான் ஒரே ஒரு ஆலோசனை மட்டுமே வழங்க விரும்புகிறேன். முதலில் உங்களிடம் இருக்கும் வேகத்திற்கு உங்களுக்கு எதிராக விளையாடுவது யாருக்குமே அவ்வளவு எளிதாக இருக்காது. எனவே அதில் நாம் லைன் மற்றும் லென்த் ஆகியவற்றில் மட்டுமே வேலை செய்ய வேண்டும். ஒருமுறை நீங்கள் அதில் கடினமாக உழைத்து தேவையான மாற்றங்களை செய்து வெற்றி கண்டுவிட்டால் அதன் பின் நாம் இணைந்து இந்த உலகை ஆளலாம்” என்று கூறினார்.

அவர் கூறுவது போல அசால்ட்டாக 150+ கி.மீ வேகத்தில் தொடர்ந்து பந்து வீசும் உம்ரான் மாலிக் ஆரம்பத்தில் வேகத்தை மட்டும் நம்பி விவேகத்தை பின்பற்றாமல் செயல்பட்டதால் தன்னுடைய முதலிரண்டு போட்டிகளில் ரன்களை வாரி வழங்கி அத்தோடு அதிரடியாக கழற்றி விடப்பட்டார். இருப்பினும் அதிலிருந்து பாடத்தை கற்றுக் கொண்ட அவர் உள்ளூர் கிரிக்கெட்டுக்கு சென்று மீண்டும் பெற்றுள்ள 2வது வாய்ப்பில் சமீபத்திய போட்டிகளில் நல்ல லைன், லென்த் போன்றவற்றை பின்பற்றி குறைவான ரன்களை கொடுத்து விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்.

இதையும் படிங்க: என்ன இருந்தாலும் இந்தியாவிடம் அந்த விஷயத்தை பாகிஸ்தான் கத்துக்கணும் – முதல் முறையாக ரமீஸ் ராஜா நியாயமான பேச்சு

மேலும் ஒருநாள், டி20 கிரிக்கெட்டில் அதிவேகமான பந்தை வீசிய இந்திய பவுலராக வரலாற்று சாதனை படைத்த அவர் இதே போல் தொடர்ந்து முன்னேறும் பட்சத்தில் நிச்சயமாக ஆஸ்திரேலியாவின் கிளன் மெக்ராத் போல வருவார் என்று கூறலாம்.

Advertisement