ஹாட்ரிக் தோல்வியின் கோபத்தை நிருபர் மீது காட்டிய கேப்டன் ரோஹித் – மும்பை ரசிகர்களுக்கு வைத்த கோரிக்கை

Rohit Sharma Angry
- Advertisement -

மும்பை நகரில் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் 2022 கிரிக்கெட் தொடர் வெற்றிகரமான முதல் வாரத்தை கடந்து பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரில் மார்ச் 6-ஆம் தேதியன்று நடந்த போட்டியில் மும்பையை மண்ணை கவ்வ செய்த கொல்கத்தா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முன்னதாக புனே நகரில் நடந்த அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 161/4 ரன்கள் எடுத்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ் 36 பந்துகளில் 52 ரன்கள் விளாசினார். கொல்கத்தா சார்பில் பந்துவீச்சில் அசத்திய பட் கம்மின்ஸ் 2 விக்கெட்டுகளை சாய்த்தார்.

மும்பை ஹாட்ரிக் தோல்வி:
அதை தொடர்ந்து 161 என்ற இலக்கை துரத்திய கொல்கத்தாவுக்கு அஜிங்கிய ரகானே 7 (11), கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் 10 (6), சாம் பில்லிங்ஸ் 17 (12), நிதிஷ் ரானா 8 (7) என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து வந்த நட்சத்திர அதிரடி வீரர் ஆண்ட்ரே ரஸ்ஸல் 11 (5) ரன்களுக்கு அவுட்டாக்கி அதிர்ச்சி அளித்தார். இருப்பினும் மறுபுறம் தொடர்ந்து நங்கூரமாக செயல்பட்டு வந்த மற்றொரு தொடக்க வீரர் வெங்கடேஷ் ஐயர் கொல்கத்தாவின் வெற்றிக்காக போராடினார்.

- Advertisement -

முக்கிய வீரர்களின் சொதப்பலான பேட்டிங்கால் 13 ஓவர்களில் 101/5 என தடுமாறிய கொல்கத்தாவின் வெற்றி கேள்விக்குறியான நிலையில் களமிறங்கிய ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பட் கம்மின்ஸ் அதிரடியாக பேட்டிங் செய்து வெறும் 15 பந்துகளில் 4 பவுண்டரி மற்றும் 6 சிக்சர் உட்பட 56* ரன்களைக் குவித்து மும்பைக்கு அதிர்ச்சி அளித்து கொல்கத்தா வெற்றி பெறச் செய்தார். அவருக்கு துணையாக நின்ற வெங்கடேஷ் ஐயர் 50* (41) ரன்கள் எடுத்து வெற்றியில் பங்காற்றினார். இந்த தோல்வியால் இந்த வருடம் இது வரை பங்கேற்ற 3 போட்டிகளிலும் அடுத்தடுத்து தோல்வியடைந்த மும்பை ஹாட்ரிக் தோல்விகளுடன் புள்ளி பட்டியலில் 9-வது இடத்தில் தள்ளாடி வருகிறது.

கோபத்தை காட்டிய ரோஹித் சர்மா:
அதைவிட இந்தப் போட்டியின் போது ஒரு பவுலரான பட் கமின்ஸ்சிடம் அடிவாங்கி தோற்றதால் மும்பை வீரர்களும் ரசிகர்களும் மிகவும் கடுப்பானார்கள். குறிப்பாக கடைசி 30 பந்துகளில் 35 ரன்கள் தேவை என்ற நிலையில் அந்த ஓவரை மற்றொரு ஆஸ்திரேலிய பவுலர் டேனியல் சாம்ஸ் வீச அதில் வானவேடிக்கை காட்டிய பட் கமின்ஸ் 6, 4, 6, 6, 3 (நோ பால்), 4, 6 என ஒரே ஓவரில் 35 ரன்களையும் விளாசி மும்பையை தனி ஒருவனாக தோற்கடித்தார். ஏற்கனவே முதல் 2 போட்டிகளில் படுதோல்வியை சந்தித்த மும்பை இந்த போட்டியில் அதைவிட மோசமான தோல்வியை சந்தித்தால் அந்த அணியின் கேப்டன் ரோகித் சர்மா கடும் கோபத்திற்கு உள்ளானார்.

- Advertisement -

அந்த நிலையில் நேற்றைய போட்டி முடிந்த பின் நிகழ்ந்த செய்தியாளர்கள் சந்திப்பில் ஒரு நிருபர் மீது அந்தக் கோபத்தை ரோகித் சர்மா கொட்டினார். அதிலும் போட்டி முடிந்த போது அவரை வர்ணனையாளராக இருக்கும் முன்னால் நியூசிலாந்து வீரர் டேனி மோரிசன் போட்டிக்கான தோல்வியின் காரணத்தை பற்றி எழுப்பினார். ஆனால் அது தனது காதுகளில் சரியாக விழாத காரணத்தால் கோபமடைந்த ரோகித் சர்மா “சத்தத்தை அதிகப்படுத்துங்க” என்பதுபோல் இந்தியில் திட்டினார். பொதுவாக கூலாக காட்சியளிக்கும் அவர் இந்த போட்டியில் கிடைத்த படுதோல்வியால் இவ்வாறு கோபத்தை காட்டியது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மும்பை ரசிகர்களுக்கு கோரிக்கை:
இருப்பினும் அதை சாந்தப்படுத்திக் கொண்ட ரோகித் சர்மா அதன்பின் சிரித்த முகத்துடன் பேட்டியளித்தார். இதுபற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ஒருசில ஓவர்களில் போட்டி தலைகீழாக மாறியதை ஏற்றுக் கொள்ள கடினமாக இருக்கிறது. இருப்பினும் வரும் போட்டிகளில் நாங்கள் நிறைய கடினமான வேலைகளை செய்ய வேண்டியுள்ளது. இது போன்ற ஒரு சூழ்நிலையில் எல்லா நேரமும் இருக்க நான் விரும்பவில்லை” என கூறினார். இதுவரை நடந்த போட்டிகளில் பேட்டிங் மற்றும் பவுலிங் என அனைத்தும் சொதப்பிய நிலையில் வரும் போட்டிகளில் வெற்றிக்காக கடினமாக உழைப்போம் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

- Advertisement -

மேலும் “நாங்கள் ஒரு அணியாக ஒன்றாக வலுவாக இணைந்துள்ளோம். அது எங்களின் ஒரு மிகப்பெரிய பலமாகும். அதை நீங்கள் இன்னும் பார்க்கவில்லை” என இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரோகித் சர்மா பதிவிட்டுள்ளார். அதாவது வரும் போட்டிகளில் ஒரே அணியாக வலுவாக இணைந்து நிச்சயம் வெற்றி பாதைக்கு திரும்புவோம் என்று மும்பை ரசிகர்களுக்கு நம்பிக்கை அளித்துள்ள அவர் நமது பலத்தை எதிரணிகள் இன்னும் பார்க்கவில்லை என்று கூறியுள்ளார்.

அவர் கூறுவது போல ஆரம்ப கட்டங்களில் தோல்வியடைவது மும்பை ஒன்றும் புதிதல்ல. ஏற்கனவே கடந்த 2015, 2017 போன்ற வருடங்களில் இதேபோல ஆரம்பத்தில் அடுத்தடுத்து தோல்விகளை பெற்ற போதிலும் அதன்பின் பொங்கி எழுந்த அந்த அணி அடுத்தடுத்த வெற்றிகளை பதிவு செய்து பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று கோப்பையையும் வென்று சாதனை படைத்தது.

இதையும் படிங்க : 100 மேட்ச் ஆடியும் பெருசா ஒன்னும் சாதிக்கல, அவ்வளவு தான் சான்ஸ் – இந்திய வீரரை விளாசிய ஆகாஷ் சோப்ரா

எனவே அதேபோல இந்த ஆரம்பகட்ட தோல்விகளில் இருந்து மீண்டுடெழுந்து மும்பை 6வது முறையாக கோப்பையை வெல்லும் என அந்த அணி ரசிகர்கள் நம்பிக்கையுடன் காணப்படுகின்றனர்.

Advertisement