ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. அதில் இந்தியாவின் நம்பிக்கை நாயகன் விராட் கோலி 661 ரன்கள் அடித்து அதிக ரன்கள் குவித்த வீரர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். அதன் காரணமாக ஆரஞ்சு தொப்பியையும் தன்வசம் வைத்துள்ள அவர் பெங்களூரு அணியின் வெற்றிகளில் முக்கிய பங்காற்றி வருகிறார். இருப்பினும் ஆரம்பகட்ட போட்டிகளில் விராட் கோலி கொஞ்சம் குறைவான ஸ்டிரைக் ரேட்டில் விளையாடினார்.
அதனால் ஆரம்பத்தில் பெங்களூரு பதிவு செய்த 6 தொடர்ச்சியான தோல்விகளுக்கு விராட் கோலி தான் காரணம் விமர்சனங்கள் காணப்பட்டது. குறிப்பாக சொந்த சாதனைகளுக்காக விராட் கோலி குறைவான ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடுவதாக சில முன்னாள் வீரர்கள் விமர்சித்தனர். அந்த சூழ்நிலையில் ஹைதராபாத்துக்கு எதிரான போட்டியில் அரை சதமடித்த விராட் கோலி கடைசியில் 118 அவுட்டாகி பின்னடைவை ஏற்படுத்தினார்.
சர்ச்சை கருத்து:
அப்போது “15 ஓவர்கள் வரை விளையாடிவிட்டு கடைசியில் 118 ஸ்ட்ரைக் ரேட்டில் அவுட்டானால் அதை யாரும் எதிர்பார்க்க மாட்டார்கள்” என்று அவரை சுனில் கவாஸ்கர் விமர்சித்தார். அதற்கு மற்றொரு போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்ற விராட் கோலி “நான் அணிக்காகவும் ரசிகர்களுக்காகவும் விளையாடுகிறேன். மற்ற யாருக்காகவும் விளையாடவில்லை” என்று சொல்லி மறைமுக பதிலடி கொடுத்தார்.
அதனால் அதிருப்தியடைந்த சுனில் கவாஸ்கர் “விமர்சனங்களைப் பற்றி கவலைப்படுவதில்லை என்று சொல்லக்கூடிய விராட் கோலி இப்படி பதிலடி கொடுப்பது ஏன்? 118 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடி விட்டு பாராட்டுமாறு சொல்வது வித்தியாசமாக இருக்கிறது” என மீண்டும் விமர்சித்திருந்தார். அதைத் தொடர்ந்து நடைபெற்ற போட்டிகளில் அதிரடியான ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடிய விராட் கோலி தன்னுடைய விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்தார்.
இந்நிலையில் மே 17ஆம் மும்பை மற்றும் லக்னோ அணிகள் மோதிய போட்டி நடைபெற்றது. மழை குறுக்கிட்டதால் அப்போட்டி அரை மணி நேரம் நிறுத்தப்பட்டது. அப்போது இந்த வருடம் அதிக ரன்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ள விராட் கோலியை பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் முன்னாள் வீரர்கள் விவாதித்தனர். அந்த விவாதத்தில் சம்பந்தமின்றி சுனில் கவாஸ்கர் பேசியது பின்வருமாறு.
இதையும் படிங்க: ஆரம்பத்திலேயே நடக்காம இப்போதான் இதெல்லாம் நடக்குது.. மும்பை அணியை வீழ்த்திய பிறகு – கே.எல் ராகுல் மகிழ்ச்சி
“விராட் கோலி தன்னுடைய கேரியரை துவங்கிய போது அது ஆரம்பத்திலேயே நிற்க வேண்டிய கேரியராக இருந்தது. அப்போது உண்மையில் எம்எஸ் தோனி அவருக்கு கூடுதல் வேகத்தையும் வாய்ப்பையும் கொடுத்தார். அதனாலேயே இன்று நாம் இந்த விராட் கோலியை பார்க்கிறோம்” என்று கூறினார். அதாவது அப்போதைய கேப்டன் தோனியின் ஆதரவால் விராட் கோலி வளர்ந்தது உண்மை தான். ஆனால் அதை இப்போது கவாஸ்கர் தெரிவிப்பது சர்ச்சையை ஏற்படுத்துவதாக அமைவது குறிப்பிடத்தக்கது.



