100 மேட்ச் ஆடியும் பெருசா ஒன்னும் சாதிக்கல, அவ்வளவு தான் சான்ஸ் – இந்திய வீரரை விளாசிய ஆகாஷ் சோப்ரா

Akash
Advertisement

மிகுந்த பரபரப்புடன் நடைபெற்று வரும் ஐபிஎல் 2022 தொடர் வெற்றிகரமான முதல் வாரத்தை கடந்து ரசிகர்களை மகிழ்வித்து வருகிறது. கடந்த மார்ச் 26-ஆம் தேதியன்று மும்பை வான்கடே மைதானத்தில் கோலாகலமாக துவங்கிய இந்த தொடரின் சாம்பியன் பட்டத்துக்காக 10 அணிகள் போட்டியிடுகின்றன. வரும் மே 22-ஆம் தேதி வரை நடைபெறும் 70 போட்டிகள் கொண்ட முக்கியமான லீக் சுற்றில் சிறப்பாக செயல்பட்டு புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடித்து பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற அனைத்து அணிகளும் இப்போது முதலே பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.

Dc

இந்த தொடரில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் இதுவரை பங்கேற்ற 2 போட்டிகளில் ஒரு வெற்றியையும் ஒரு தோல்வியையும் பதிவு செய்து புள்ளி பட்டியலில் டாப் 4 இடத்துக்குள் கால் வைக்க முடியாமல் தவித்து வருகிறது. அதிலும் இந்த வருடம் மும்பைக்கு எதிரான தனது முதல் போட்டியில் தோல்வியின் பிடியில் சிக்கியிருந்த அந்த அணியை யாருமே எதிர்பாராத வண்ணம் கடைசி நேரத்தில் ஜோடி சேர்ந்த அக்சர் படேல் – லலித் யாதவ் ஆகியோர் அதிரடியாக விளையாடி காப்பாற்றி தங்களது அணிக்கு முதல் வெற்றியைப் பெற்றுக் கொடுத்தனர்.

- Advertisement -

அதன்பின் நடந்த குஜராத் அணிக்கு எதிரான 2-வது போட்டியில் 172 என்ற இலக்கை துரத்திய டெல்லி கிட்டத்தட்ட வெற்றியை நெருங்கிய போதிலும் 14 ரன்கள் வித்தியாசத்தில் பரிதாபமாக தோல்வி அடைந்தது. அந்த அணிக்கு பந்துவீச்சு ஓரளவு சிறப்பாக இருக்கும் போதிலும் பெரிய ரன்களை குவிக்க முடியாத அளவுக்கு மோசமான பேட்டிங் ஒரு பிரச்சனையாக உள்ளது. அதிலும் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்புதால் அந்த அணி தொடர்ச்சியாக பின்னடைவை சந்தித்து வருகிறது.

Mandeep

100 மேட்ச் ஆச்சு:
இந்நிலையில் தடுமாறும் டெல்லி அணியின் டாப் ஆர்டர் பேட்டிங்கை சரி செய்ய என்ன செய்யலாம் என்பது பற்றி இந்தியாவின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தனது கருத்தை தெரிவித்துள்ளார். இது பற்றிய தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “முதல் ஒரு சில போட்டிகளில் பங்கேற்காத நட்சத்திர வீரர் டேவிட் வார்னர் அணிக்குள் வந்தால் வேறு வழியின்றி டிம் ஷைஃபர்ட் வெளியேற வேண்டும். ஆனால் 3-வது இடத்தில் பேட்டிங் செய்யும் மந்தீப் சிங் இதுவரை எதுவும் பெரிதாக செய்யவில்லை. இத்தனைக்கும் 100 போட்டிகளுக்கு மேல் விளையாடியுள்ள அவர் வெறும் 1000க்கும் மேற்பட்ட ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். அவர் தன் மீதான எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் அளவுக்கு எப்போதும் செயல்பட்டதில்லை. எனவே அவரின் இடத்தில் கேஎஸ் பரத் அல்லது யாஷ் துள் ஆகியோரில் யாராவது ஒருவருக்கு வாய்ப்பளிக்க வேண்டும்” என கூறினார்.

- Advertisement -

அவர் கூறுவது போல பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த 30 வயது மந்தீப் சிங் கடந்த 2011 முதல் இப்போதுவரை பஞ்சாப், பெங்களூரு, கொல்கத்தா ஆகிய அணிகளுக்காக விளையாடி தற்போது டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் விளையாடி வருகிறார். கடந்த 10 வருடங்களாக தொடர்ந்து ஐபிஎல் தொடரில் பல்வேறு அணிகளுக்காக விளையாடி வரும் அவர் இதுவரை 107 போட்டிகளில் விளையாடி வெறும் 1692 ரன்களை 21.69 என்ற மோசமான சராசரியில் 123.77 என்ற சுமாரான ஸ்ட்ரைக் ரேட் விகிதத்தில் மட்டுமே எடுத்துள்ளார்.

mandeep singh

இந்த வருடம் கூட டெல்லி அணிக்காக முதல் 2 போட்டிகளில் களமிறங்கிய அவர் 0, 18 என சொற்ப ரன்களில் அவுட்டானது அந்த அணிக்கு பெரிய பின்னடைவாக அமைந்தது. எனவே அவருக்கு ஏகப்பட்ட வாய்ப்புகள் வழங்கப்பட்டு விட்டது என கூறியுள்ள ஆகாஷ் சோப்ரா இனிமேல் அவருக்கு பதில் இளம் வீரர்களான யாஷ் துள் அல்லது கேஎஸ் பரத் போன்றவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். அவர் கூறியது போல லக்னோ அணிக்கு எதிரான 3-வது போட்டியில் மந்தீப் சிங் அதிரடியாக நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

பௌலிங் முன்னேற்றம் தேவை:
“டெல்லி அணிக்கு பந்துவீச்சும் மோசமாக உள்ளது. கடந்த 2 போட்டிகளில் 40 ரன்களுக்கும் மேல் கொடுத்த தாக்கூர் அதிக ரன்களை வாரி வழங்கினார். ஒரு ஆல்ரவுண்டராக ஒரு போட்டியில் ரன்கள் அடித்தாலும் மற்றொரு போட்டியில் சொற்ப ரன்களில் நடையை கட்டினார். அவரின் பேட்டில் இருந்து பெரிய அளவில் ரன்கள் வரவில்லை. மேலும் அவர் விக்கெட்டுகளையும் எடுக்க முடியாமல் தடுமாறி வருகிறார்” என இது பற்றி ஆகாஷ் சோப்ரா மேலும் தெரிவித்தார்.

chopra

கடந்த வருடம் ஷிகர் தவான், ஷ்ரேயஸ் ஐயர், சிம்ரோன் ஹெட்மயர், ரவிச்சந்திரன் அஸ்வின், ககிசோ ரபடா போன்ற முக்கிய வீரர்கள் சிறப்பாக செயல்பட்டதால் அந்த அணி தொடர்ச்சியாக வெற்றி பெற்று பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது.

இதையும் படிங்க : சச்சினின் ஆல் – டைம் சாதனையை முந்திய பாபர் அசாம்! இப்படியே போனால் வேற லெவலில் வருவார் போலயே

ஆனால் இந்த முறை அது போன்ற முக்கிய தரமான வீரர்களை ஏலத்தில் கோட்டை விட்ட அந்த அணி தற்போது வலுவற்ற அணியாக வெற்றிக்கும் தோல்விக்கும் நடுவில் சிக்கி தவிக்கிறது. எனவே பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் தேவையான மாற்றங்களை செய்தால் மட்டுமே ப்ளே ஆப் சுற்றுக்கு டெல்லி தகுதி பெற முடியும் என ஆகாஷ் சோப்ரா எச்சரித்துள்ளார்.

Advertisement