சச்சினின் ஆல் – டைம் சாதனையை முந்திய பாபர் அசாம்! இப்படியே போனால் வேற லெவலில் வருவார் போலயே

Sachin babar Azam
- Advertisement -

பாகிஸ்தானுக்கு 24 வருடங்கள் கழித்து சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலியா அங்கு அந்த அணிக்கு எதிராக டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என 3 வகையான கிரிக்கெட் தொடரிலும் பங்கேற்றது. கடந்த மார்ச் மாதம் துவங்கிய இந்த சுற்றுப்பயணத்தில் முதலாவதாக நடந்த 3 போட்டிகள் கொண்ட உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை 1 – 0 என்ற கணக்கில் கைப்பற்றிய பேட் கமின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா பாகிஸ்தானை அதன் சொந்த மண்ணில் மண்ணைக் கவ்வ செய்து கோப்பையை வென்றது. அதை தொடர்ந்து நடந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் அசத்திய பாகிஸ்தான் அதிரடியான வெற்றியைப் பெற்று 2 – 1 என்ற கணக்கில் கோப்பையை வென்று ஆஸ்திரேலியாவுக்கு தக்க பதிலடி கொடுத்தது.

கலக்கிய பாபர் அசாம்:
அந்த நிலையில் இந்த சுற்றுப்பயணத்தின் கடைசியாக 1 போட்டி கொண்ட டி20 தொடர் கடந்த ஏப்ரல் 5-ஆம் தேதியன்று நடந்தது. அந்த போட்டியில் பாகிஸ்தான் நிர்ணயித்த 163 ரன்கள் இலக்கை எளிதாக எட்டிப்பிடித்த ஆஸ்திரேலியா மீண்டும் பாகிஸ்தானை அதன் சொந்த மண்ணில் தோற்கடித்து தன்னை ஒரு டி20 உலக சாம்பியன் என நிரூபித்து கோப்பையை வென்றது. மொத்தத்தில் 24 வருடங்கள் கழித்து பாகிஸ்தானுக்கு சென்ற ஆஸ்திரேலியா தனது தனது அபாரமான செயல்பாடுகளால் மூன்றில் 2 தொடர்களை வென்று பாகிஸ்தான் மண்ணில் தனது வெற்றிக் கொடியை பறக்க விட்டு நாடு திரும்பியது.

- Advertisement -

மறுபுறம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் கூட ஆதிக்கம் செலுத்த முடியாமல் பரிதவித்த பாகிஸ்தான் ஒருநாள் தொடரை மட்டும் வென்று ஆறுதல் அடைந்தது. அந்த ஒருநாள் தொடர் கூட அந்த அணியின் கேப்டன் பாபர் அசாமின் அற்புதமான ஆட்டத்தால் கிடைத்தது என்றே கூற வேண்டும். ஏனெனில் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா நிர்ணயித்த 314 என்ற மெகா இலக்கை துரத்திய பாகிஸ்தானுக்கு அவர் 57 ரன்கள் எடுத்து போராடிய போதிலும் அந்த அணி தோல்வி அடைந்தது.

இருப்பினும் அதற்கு அடுத்த போட்டியில் மீண்டும் அதிரடியாக செயல்பட்ட ஆஸ்திரேலியா 349 என்ற மெகா இலக்கை நிர்ணயித்த நிலையில் அதை துரத்திய பாகிஸ்தானுக்கு மீண்டும் அபாரமாகவும் அற்புதமாகவும் பேட்டிங் செய்த பாபர் அசாம் வெறும் 83 பந்துகளில் சதமடித்து 114 ரன்கள் குவித்து வெற்றி பெறச்செய்து ஆட்டநாயகன் விருதை வென்றார்.

- Advertisement -

அதை தொடர்ந்து முக்கியமான 3-வது போட்டியிலும் அசத்திய அவர் சதமடித்து 105* ரன்கள் விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து வெற்றி பெறச் செய்ததால் மீண்டும் ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார். அதுமட்டுமில்லாமல் இந்த தொடரில் 3 போட்டிகளையும் சேர்த்து 300க்கும் மேற்பட்ட ரன்களை குவித்த அவர் பாகிஸ்தானின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியதால் தொடர்நாயகன் விருதையும் வென்று அசத்தினார். மேலும் இந்த சுற்றுப் பயணத்தில் முதலில் நடந்த டெஸ்ட் தொடரிலும் அசத்திய அவர் கடைசியாக நடந்த டி20 போட்டியிலும் அரைசதம் அடித்து பாகிஸ்தானின் உயிர் நாடியாக செயல்பட்டது பலரின் பாராட்டுகளைப் பெற்றது.

சச்சினை முந்திய பாபர்:
இந்நிலையில் பாகிஸ்தான் – ஆஸ்திரேலியா மோதி வந்த ஒருநாள் தொடர் முடிவுக்கு வந்துள்ள நிலையில் சர்வதேச ஒருநாள் போட்டிகளுக்கான புதிய தரவரிசைப் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. அதில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் அசத்திய பாபர் அசாம் 891 புள்ளிகளுடன் உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். 2-வது இடத்தில் இந்தியாவைச் சேர்ந்த நட்சத்திரம் விராட் கோலி 811 புள்ளிகளுடன் உள்ளார்.

- Advertisement -

அதைவிட ஒட்டுமொத்த ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் விளையாடிய பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்தியாவின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரை முந்தியுள்ள பாபர் அசாம் 15-வது இடத்தைப் பிடித்து புதிய சாதனை படைத்துள்ளார். இந்தப் பட்டியல் என்பது ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடிய தரமான பேட்ஸ்மென்கள் எட்டிய அதிகபட்ச புள்ளிகளை கொண்டு ஐசிசியால் உருவாக்கப்பட்டுள்ள பட்டியலாகும்.

அந்த வகையில் இதுநாள் வரை அந்த இடத்தில் இந்தியாவின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 887 புள்ளிகளுடன் இருந்தார். தற்போது 891 புள்ளிகளைப் பெற்றுள்ள பாபர் அசாம் அவரை முந்தி புதிய சாதனை படைத்துள்ளார். இதே பட்டியலில் சச்சினை தவிர்த்து இந்திய வீரர் என்று பார்த்தால் தற்போதைய நட்சத்திரம் விராட் கோலி 911 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் ஜொலிக்கிறார். இந்த பட்டியலில் ஒருநாள் கிரிக்கெட்டின் மகத்தான பேட்ஸ்மேனாக வெஸ்ட் இண்டீசை சேர்ந்த ஜாம்பவான் விவியன் ரிச்சர்ட்ஸ் 935 புள்ளிகளுடன் இன்றும் முதலிடத்தில் ஜொலிக்கிறார்.

இதையும் படிங்க : நானா இதை பண்ணது? மும்பை அணிக்கு எதிராக செய்த சம்பத்தை நினைத்து ஆச்சரியப்படும் – பேட் கம்மின்ஸ்

இப்படி சமீப காலங்களாகவே அபாரமாக செயல்பட்டு வரும் பாபர் அசாம் பாகிஸ்தானுக்காக 3 வகையான கிரிக்கெட்டிலும் ரன் மெஷினாக செயல்பட்டு அந்த அணிக்கு பல வெற்றிகளை தேடிக் கொடுத்து வருகிறார். இதன் காரணமாக சமீப காலங்களாக விராட் கோலி, சச்சின் டெண்டுல்கர் போன்ற இந்திய ஜாம்பவான்களின் சாதனையையும் உடைக்க தொடங்கியுள்ள அவர் இதே போல் விளையாடினால் அவர்களை முந்துவதற்கு பிரகாசமான வாய்ப்பு உள்ளதாக அந்நாட்டு ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பாராட்டி வருகின்றனர்.

Advertisement