
ஐசிசி டி20 உலக கோப்பையை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வென்று சாதனை படைத்தது. ஜூன் மாதம் அமெரிக்காவில் துவங்கி வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நிறைவு பெற்ற அந்தத் தொடரில் இந்தியா தோல்வியே சந்திக்காமல் சாம்பியன் பட்டம் வென்றது. குறிப்பாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மாபெரும் இறுதிப்போட்டியில் 7 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா 17 வருடங்கள் கழித்து டி20 உலகக் கோப்பை வென்றது.
அத்துடன் கடந்த 10 வருடங்களாக ஐசிசி தொடர்களில் சந்தித்த தொடர்ச்சியான தோல்விகளையும் இந்தியா உடைத்தது. அதனால் அந்த வெற்றியை ஒட்டுமொத்த இந்திய மக்களும் கொண்டாடி தீர்த்தனர். இருப்பினும் அதற்கிடையே ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் ஒரே நாளில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஓய்வு பெறுவதாக அறிவித்தது ரசிகர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றமாக அமைத்தது.
ரோஹித் அறிவிப்பு:
குறிப்பாக பேட்டிங்கில் இரட்டைக் குழல் துப்பாக்கிகளை போல் சிறப்பாக விளையாடி இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்த விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோரின் ஓய்வு ரசிகர்களிடம் சோகத்தை ஏற்படுத்தியது. இருப்பினும் தற்போது 35 வயதை கடந்து விட்டதால் இளம் வீரர்களுக்கு வழிவிட்டு அவர்கள் ஓய்வு பெற்றுள்ளனர். அதே சமயம் ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடுவதாகவும் அவர்கள் அறிவித்துள்ளனர்.
இந்நிலையில் 2025 சாம்பியன்ஸ் ட்ராபி மற்றும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் இந்தியாவுக்கு கோப்பையை வெல்வதே தம்முடைய லட்சியம் என ரோகித் சர்மா தெரிவித்தார். எனவே தற்போதைக்கு ஓய்வு பெறும் எண்ணமில்லை என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி டாலஸ் நகரில் பங்கேற்ற சமீபத்திய தனியார் நிகழ்ச்சியில் பேசியது பின்வருமாறு. “இதை நான் ஏற்கனவே கூறியுள்ளேன். மிகவும் நீண்ட தூரம் எதையும் செய்யவில்லை”
“எனவே நான் நீண்ட காலம் விளையாடுவதை நீங்கள் தெளிவாக பார்க்க முடியும். இதுவரை முழுமையான ஓய்வு பற்றி நான் சிந்திக்கவில்லை. ஆனால் வாழ்க்கை உங்களை எங்கே எடுத்துச் செல்லும் என்பது எனக்கு தெரியாது. தற்சமயத்தில் நான் நன்றாக விளையாடுகிறேன். எனவே இன்னும் சில வருடங்கள் நான் தொடர்ந்து விளையாடலாம் என்று நினைக்கிறேன்”
இதையும் படிங்க: புதுமண தம்பதிகளான ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்சென்ட் ஆகியோருக்கு தோனி கூறிய அட்வைஸ் – என்ன தெரியுமா?
“அதன் பின் எனக்குத் தெரியாது. தற்போதைக்கு சாம்பியன்ஸ் ட்ராபியை வெல்ல விரும்புகிறேன். அதன் பின் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல். அதற்கு இந்தியா தகுதி பெறும் என்று நான் நம்புகிறேன்” என கூறினார். இதைத் தொடர்ந்து அடுத்ததாக நடைபெறும் இலங்கை ஒருநாள் தொடரில் ரோஹித் சர்மா, ஜஸ்ப்ரித் மற்றும் விராட் கோலி ஆகியோர் ஓய்வெடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.