தவான் உலககோப்பை பார்ட்னரா? முன்னாள் வீரரின் கருத்துக்கு கேப்டன் ரோஹித் சர்மா அளித்த பதில் இதோ

Rohit and Dhawan
- Advertisement -

குயின்ஸ் பார்க் மைதானத்தில் நடைபெற்ற வந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மிகச் சிறப்பாக செயல்பட்ட இந்தியா 3 – 0 என்ற கணக்கில் கைப்பற்றி வரலாற்றில் முதல் முறையாக வெஸ்ட் இண்டீஸை அதன் சொந்த மண்ணில் ஒயிட்வாஷ் செய்த சாதனை வெற்றியுடன் கோப்பையை முத்தமிட்டது. இந்த தொடரில் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட முக்கிய வீரர்கள் ஓய்வெடுத்த நிலையில் ஷிகர் தவான் தலைமையில் இளம் வீரர்களுடன் 3 போட்டிகளிலும் தொடர்ச்சியாக பேட்டிங்கிலும் பந்துவீச்சிலும் அசத்திய இந்திய அணி அனைவரின் பாராட்டுகளைப் பெற்றுள்ளது. இந்த தொடரில் வாய்ப்பு பெற்ற பெரும்பாலான இளம் வீரர்கள் சிறப்பாக செயல்பட்ட நிலையில் அவர்களை அனுபவ வீரர் ஷிகர் தவான் கேப்டனாக சிறந்த வகையில் வழிநடத்தினார்.

கடந்த 2013 முதல் ரோகித் சர்மாவுடன் இந்தியாவின் நிரந்தர தொடக்க வீரராக விளையாடி வந்த அவர் 2013 சாம்பியன்ஸ் டிராபி உட்பட இந்தியாவுக்கு நிறைய வரலாற்று வெற்றிகளை பெற்றுக்கொடுத்த பெருமைக்குரியவர். கடைசியாக கடந்த 2019 உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் காயத்துடன் சதமடித்து இந்தியாவை வெற்றி பெற வைத்து வெளியேறிய அவரை குணமடைந்து பின்பும் தேர்வுக்குழு கண்டு கொள்ளவில்லை. ஏனெனில் அவரது இடத்தில் விளையாட துவங்கிய கேஎல் ராகுல் இளம் வீரராக இருப்பதுடன் அவரை விட மிகச் சிறப்பாக செயல்பட்டு அந்த இடத்தை தன் வசமாக்கினார்.

- Advertisement -

உலககோப்பை பார்ட்னர்:
மேலும் 35 வயதை கடந்த ஷிகர் தவான் 300, 500 போன்ற பெரிய ரன்களை ஐபிஎல் தொடரில் எடுத்தாலும் அதிரடியான ஸ்டிரைக் ரேட்டில் குவிக்க தடுமாறுகிறார். அதனால் வயதையும் தடுமாற்றத்தையும் காரணம் காட்டும் தேர்வுக்குழு அவரை டி20 கிரிக்கெட்டில் மொத்தமாக கழற்றி விட்டுள்ளது. மேலும் ஒருநாள் போட்டிகளிலும் வேண்டா வெறுப்பாக ரோகித் சர்மா மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் காயமடைந்தால் அல்லது ஓய்வெடுத்தால் மட்டும் வாய்ப்பளிக்கிறது. அந்த வகையில் கடந்த ஜூலையில் இலங்கை மண்ணில் இதேபோல் கேப்டனாக செயல்பட்ட அவர் கடந்த ஜனவரியில் தென்னாப்பிரிக்க மண்ணில் நடந்த ஒருநாள் தொடரில் பேட்ஸ்மேனாக அசத்தினார்.

இருப்பினும் அவரை கழற்றிவிடும் தேர்வுக்குழு சமீபத்திய இங்கிலாந்து தொடரில் தேர்வு செய்து தற்போது வெஸ்ட் இண்டீஸ் தொடரில் கேப்டன்ஷி பொறுப்பை கொடுத்து மீண்டும் கழற்றிவிட்டுள்ளது. ஆனாலும் கிடைக்கும் வாய்ப்புகளில் சிறப்பாக செயல்பட்டு வரும் அவர் இந்த வெஸ்ட் இண்டீஸ் தொடரில் 97, 13, 58 என நல்ல ரன்களை எடுத்து ஒருநாள் கிரிக்கெட்டில் இன்னும் நான் சோடை போகவில்லை என்று நிரூபித்து வருகிறார்.

- Advertisement -

ஓஜா ஆதரவு:
மேலும் கடந்த 10 வருடங்களாக ரோகித் சர்மாவின் மானசீக பார்ட்னராக விளையாடி வரும் அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர் – சவுரவ் கங்குலி ஆகியோருக்கு பின் 5000+ ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த இந்திய ஜோடியாக சாதனையும் படைத்துள்ளார். எனவே ராகுல் – ரோஹித் என்ற வலதுகை ஜோடியை விட ஜாம்பவான்கள் சச்சின் – கங்குலி போல் நண்பர்களாகவும் நல்ல புரிதல்களையும் கொண்ட தவான் – ரோஹித் ஆகிய அனுபவம் வாய்ந்த இடது – வலது கை ஜோடி வரும் 2023 உலக கோப்பையில் விளையாட தகுதியானது என்று முன்னாள் இந்திய வீரர் பிரக்யன் ஓஜா நேற்று முன்தினம் தெரிவித்திருந்தார்.

மேலும் கேப்டன் ரோகித் சர்மாவும் அவருடன் ஓபனிங் வீரராக களமிறங்க விரும்புவதாகவும் அவர் கூறியிருந்தார். இந்நிலையில் அவரின் இருந்த கருத்தை வெஸ்ட் இண்டீசில் இருக்கும் ரோகித் ஷர்மாவிடம் செய்தியாளர்கள் கேள்வியாக எழுப்பினர். அதற்கு பிரக்யான் ஓஜா எப்போது வர்ணனையாளராக மாறினார் என்று கலகலப்பாக தெரிவித்த ரோகித் சர்மா தவானுடன் விளையாடும் சாத்தியக்கூறு அமைந்தால் அதை மறுக்கப் போவதில்லை என்று பதிலளித்துள்ளார். இதுபற்றி அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“ஓஜா வர்ணனை செய்ய தொடங்கிவிட்டாரா? நல்லது. நாங்கள் விளையாடும் போதெல்லாம் ஷிகர் தவான் உட்பட பார்ட்னர் யாராக இருந்தாலும் எங்களுக்கிடையே நல்ல புரிதல் எப்போதும் உள்ளது. அது களத்திற்கு வெளியேவும் நல்ல நட்பை ஏற்படுத்துகிறது. களத்தில் அனைவருடனும் இணைந்து விளையாடுவது அவசியமாகும்.

களத்திற்கு வெளியே நண்பர்களாக மகிழ்ச்சியாக இருப்பது ஒருவருக்கு ஒருவரின் காலை வாருவது போன்ற செயல்களில் ஈடுபட்டால் தான் மொத்த அணியின் சூழ்நிலையும் சிறப்பாக இருக்கும். எனவே அணிக்குள் மகிழ்ச்சியாக இருப்பதும் முக்கியமானதாகும். ஏனெனில் இது போன்ற வாய்ப்புகள் எப்போதும் கிடைக்காது” என்று கூறினார்.

இதையும் படிங்க : டி20 உ.கோ அணியில் அவரை கழற்றிவிட்டால் ஆபத்து உங்களுக்கு தான் – இந்தியாவை எச்சரிக்கும் ஆஸி ஜாம்பவான்

அதாவது ராகுல் – தவான் என யாராக இருந்தாலும் பார்ட்னர்ஷிப் அமைப்பதில் வித்தியாசம் பார்ப்பதில்லை என்று தெரிவிக்கும் ரோகித் சர்மா ஒருவேளை வரும் 2023 உலக கோப்பையில் தவானுடன் பார்ட்னராக களமிறங்கும் வாய்ப்பு கிடைத்தாலும் மகிழ்ச்சியுடன் இணைந்து விளையாட உள்ளதாக கூறியுள்ளார்.

Advertisement