2024 டி20 உலகக் கோப்பையில் விளையாடுவீங்களா? முக்கிய கேள்விக்கு கேப்டன் ரோஹித் நேரடி பதில்

- Advertisement -

கோலாகலமாக நடைபெற்று முடிந்த 2023 உலகக் கோப்பையில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தொடர்ச்சியாக 10 வெற்றிகளை பெற்றதால் 2011 போல கோப்பையை வெல்லும் என்று நம்பப்பட்டது. ஆனால் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் பேட்டிங்கில் 240 ரன்கள் மட்டுமே எடுத்த இந்தியா கோப்பையை கோட்டை விட்டது கோடி கணக்கான ரசிகர்களின் நெஞ்சங்களை உடைத்தது.

அதைத் தொடர்ந்து 2024 டி20 உலகக் கோப்பைக்கான பயணத்தை துவங்கியுள்ள இந்திய அணியில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் விளையாடுவார்களா என்பது சந்தேகமாகியுள்ளது. ஏனெனில் 2022 டி20 உலக கோப்பையில் விராட் கோலியை தவிர்த்து ரோகித் சர்மா, ராகுல், புவனேஸ்வர் குமார், ரவிச்சந்திரன் அஸ்வின், தினேஷ் கார்த்திக் போன்ற சீனியர் வீரர்கள் சுமாராக செயல்பட்டது தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

- Advertisement -

ரோஹித்தின் பதில்:
அதனால் சீனியர்களை கழற்றி விட்டு 2022 ஐபிஎல் கோப்பையை வென்ற ஹர்திக் பாண்டியா தலைமையில் புதிய அணியை 2024 டி20 உலகக் கோப்பையில் களமிறக்கும் திட்டத்தை பிசிசிஐ கையிலெடுத்துள்ளது. அதன் காரணமாகவே கடந்த டி20 உலகக் கோப்பைக்கு பின் நடைபெற்று முடிந்த தென்னாபிரிக்க டி20 தொடர் உட்பட மேற்கொண்டு ரோஹித் மற்றும் விராட் ஆகியோர் எவ்விதமான டி20 போட்டியிலும் விளையாடாமல் இருக்கின்றனர்.

இதற்கிடையே ஐபிஎல் தொடரில் மும்பை அணியில் ரோகித் சர்மாவுக்கு பதிலாக பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அதனால் அடுத்த வருடம் இந்திய அணியின் கேப்டனாகவும் பாண்டியா நியமிக்கப்படுவார் என்ற செய்திகள் வலம் வருவதால் சமீப காலங்களாகவே டி20 போட்டிகளில் தடுமாறி வரும் ரோகித் விளையாடுவாரா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

- Advertisement -

இந்நிலையில் 2024 டி20 உலகக் கோப்பையில் விளையாடுவேனா என்பதற்கான பதிலை விரைவில் தெரிந்து கொள்வீர்கள் என்று ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். இது பற்றி முதல் தென் ஆப்பிரிக்க டெஸ்ட் போட்டிக்கு முன்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளித்தது பின்வருமாறு. “நல்ல கிரிக்கெட்டை விளையாட வேண்டும் என்பதில் எப்போதும் ஆர்வம் இருக்கிறது. அனைவரும் சிறப்பாக விளையாட விரும்புகின்றனர். எனவே வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் நாங்கள் சிறப்பாக செயல்பட விரும்புகிறோம்”

இதையும் படிங்க: தெ.ஆ தொடரை ஜெயிச்சாலும் அதுக்கு ஈடாகாது.. யாரும் செய்யாத சரித்திரம் படைப்போம்.. கேப்டன் ரோஹித் உறுதி

“நீங்கள் என்னிடம் என்ன கேட்க விரும்புகிறீர்கள் என்பது எனக்கு தெரியும். அதற்கான பதிலை நீங்கள் விரைவில் பெறுவீர்கள்” என்று கூறினார். இது போன்ற நிலைமையில் இளம் வீரர்களை மட்டும் வைத்து வெல்ல முடியாது என்பதால் ரோகித் சர்மா, விராட் ஆகிய அனுபவ வீரர்களும் வெற்றிக்கு தேவை என்று கௌதம் கம்பீர், வாசிம் அக்ரம் போன்ற நிறைய முன்னாள் வீரர்கள் ஆதரவு கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement