தெ.ஆ தொடரை ஜெயிச்சாலும் அதுக்கு ஈடாகாது.. யாரும் செய்யாத சரித்திரம் படைப்போம்.. கேப்டன் ரோஹித் உறுதி

- Advertisement -

தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி அங்கு முதலாவதாக நடைபெற்ற டி20 தொடரை சூரியகுமார் யாதவ் தலைமையில் சமன் செய்து அடுத்ததாக நடைபெற்ற ஒருநாள் தொடரை கே.எல் ராகுல் தலைமையில் வென்றது. இதை தொடர்ந்து இந்த சுற்றுப்பயணத்தில் கடைசியாக 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் ஒரு பகுதியாக இவ்விரு அணிகளும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகின்றன.

அதில் இந்தியாவை தோற்கடித்து காலம் காலமாக தங்களுடைய சொந்த மண்ணில் தொடரில் தோற்காமல் இருந்து வரும் கௌரவத்தை காப்பாற்றும் முனைப்புடன் தென்னாப்பிரிக்கா களமிறங்குகிறது. மறுபுறம் 1992 முதல் இதுவரை தென்னாப்பிரிக்காவில் ஒரு டெஸ்ட் தொடரை கூட வெல்ல முடியாமல் திண்டாடி வரும் கதையை இம்முறை நிறுத்தும் லட்சியத்துடன் இந்தியா களமிறங்க உள்ளது.

- Advertisement -

ஈடாகாத புதிய சரித்திரம்:
அதற்காக ரோஹித் சர்மா தலைமையில் விராட் கோலி உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் அடங்கிய முதன்மை இந்திய அணி களமிறங்குகிறது. மேலும் 2023 உலகக் கோப்பை ஃபைனலில் சந்தித்த தோல்விக்கு பின் ரோகித் சர்மா, விராட் கோலி, பும்ரா ஆகியோர் களமிறங்குவது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக இந்த டெஸ்ட் தொடரை வெல்வது 2023 உலகக்கோப்பை தோல்வியை ஈடு செய்யும் வெற்றியாக இருக்கும் என்பதால் அதை தவற விடாதீர்கள் என ரோகித் சர்மாவுக்கு முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கோரிக்கை வைத்திருந்தார். இந்நிலையில் தென்னாபிரிக்க மண்ணில் வென்றாலும் அது உலகக் கோப்பைக்கு ஈடாகாது என்று ரோகித் சர்மா கூறியுள்ளார். ஆனால் இதற்கு முன் தெனாப்பிரிக்காவில் படைக்காத சரித்திரத்தை இம்முறை தாங்கள் படைக்க போராடுவோம் என்று உறுதியாக தெரிவிக்கும் அவர் இது பற்றி செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

‘நாங்கள் தென்னாபிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றதில்லை. ஒருவேளை இத்தொடரை நாங்கள் வென்றால் அது உலகக்கோப்பை தோல்விக்கு இழப்பீடாக இருக்குமா என்பது எனக்கு தெரியாது. ஏனெனில் உலகக்கோப்பை என்பது உலகக் கோப்பை அதனுடன் எதையும் ஒப்பிட முடியாது. ஆனால் இதுவும் பெரிய தொடராகும். எனவே அதில் நாங்கள் வரலாற்றை படைத்தால் மகத்தானதாக இருக்கும்”

இதையும் படிங்க: டெஸ்ட் கிரிக்கெட்டில் தோனியின் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் ரோஹித் சர்மா – சேவாக்கை முந்தவும் வாய்ப்பு

“அதற்காக நாங்கள் கடினமாக உழைத்துள்ளோம். இத்தொடரில் நாங்கள் ஏதோ ஒரு பெரியவற்றை சாதிக்க விரும்புகிறோம். அதற்காக அனைத்து வீரர்களும் ஆர்வத்துடன் இருக்கிறார்கள். எங்களிடம் அதற்கான உபகரணங்கள் இருப்பதால் நாங்கள் இத்தொடரில் நன்றாக செயல்படுவோம் என்று நம்புகிறேன். இத்தொடரில் நாங்கள் எதைப் பற்றியும் அதிகம் சிந்திக்காமல் சுதந்திரமாக விளையாட உள்ளோம்” என்று கூறினார். இதை தொடர்ந்து முதல் போட்டி டிசம்பர் 26ஆம் தேதி இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு சென்சூரியனில் துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement