ஈஸியா கிடைக்கல.. கோலி, பண்ட் இல்லாமையே நாங்க ஜெயிக்க காரணம் இது தான்.. ரோஹித் பெருமிதம்

Rohit Sharma 5
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக நிறைவு பெற்ற நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. ஏற்கனவே முதல் 3 போட்டிகளில் 2 வெற்றிகளை பெற்ற இந்தியா இதையும் சேர்த்து 2 – 1* என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே இத்தொடரை கைப்பற்றியுள்ளது. முன்னதாக இந்த தொடரில் ஆரம்பத்திலேயே பேட்டிங் துறையின் முதுகெலும்பான விராட் கோலி சொந்த காரணங்களுக்காக விலகினார்.

அதே போல கேஎல் ராகுல் முதல் போட்டியுடன் காயத்தால் விலகினார். அதற்கு முன்பாகவே முகமது ஷமி காயத்தால் வெளியேறிய நிலையில் மூன்றாவது போட்டியில் குடும்பத்தில் ஏற்பட்ட அவசர நிலைமை காரணமாக அஸ்வின் பாதியில் வெளியேறினார். அதன் பின் நான்காவது போட்டியில் பும்ராவுக்கு பணிச்சுமையை நிர்வகிப்பதற்காக ஓய்வு கொடுக்கப்பட்டது.

- Advertisement -

ரோஹித் பெருமிதம்:
இருப்பினும் அந்த முக்கிய வீரர்கள் இல்லாத குறையை இருக்கும் வகையில் விளையாடிய ஜெய்ஸ்வால், கில் போன்ற இளம் வீரர்கள் இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றினர். குறிப்பாக ஜெயஸ்வால் மட்டும் இந்த தொடரில் 655 ரன்கள் அடித்து விராட் கோலியின் இடத்தில் இங்கிலாந்துக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தார் என்றே சொல்லலாம். அத்துடன் சர்பராஸ் கான், துருவ் ஜூரேல் ஆகிய அறிமுக வீரர்களும் கடினமான நேரங்களில் சிறப்பாக விளையாடி வெற்றிகளில் பங்காற்றினார்கள்.

குறிப்பாக 4வது போட்டியில் தோல்வியின் பிடியில் சிக்கிய இந்தியாவை முதல் இன்னிங்ஸில் 90 ரன்கள் அடித்து காப்பாற்றிய துருவ் ஜூரேல் ஆட்டநாயகன் விருது வென்று அசத்தினார். இந்நிலையில் விராட் கோலி, ரிஷப் பண்ட் என்ற முக்கிய வீரர்கள் இல்லாத நிலையில் முதல் போட்டியில் தோற்றும் அதற்கடுத்த 3 போட்டிகளில் வென்று இத்தொடரை வெல்வதற்கு இளம் வீரர்கள் தான் காரணம் என்று கேப்டன் ரோஹித் சர்மா பாராட்டியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“இந்த தொடர் எளிதாக கிடைக்கவில்லை. மிகவும் கடினமாக போராட வேண்டியிருந்தது. 4 போட்டிகளின் முடிவில் நாங்கள் சரியான இடத்தில் இருக்கிறோம். இதற்காக எங்களுடைய வீரர்களை நினைத்து பெருமைப்படுகிறேன். நாங்கள் நினைத்ததை எங்களுடைய பொறுப்பான வீரர்களை வைத்து சாதித்ததில் மகிழ்ச்சியடைகிறேன். டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவது மிகவும் சவாலானதாகும். நானும் ராகுல் பாயும் அனைத்தையும் ஒருங்கிணைக்கிறோம் அவ்வளவு தான். ரிஷப் பண்ட், விராட் கோலி போன்றவர்கள் அனைத்து சூழ்நிலைகளிலும் அசத்தக்கூடிய நிரூபணமான வீரர்கள்”

இதையும் படிங்க: பாகிஸ்தானை விட பாதாளத்திற்கு சரிந்த இங்கிலாந்து.. டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்ததா?

“அவர்கள் இல்லாதது எப்போதும் பின்னடைவு. ஆனால் அந்த இடத்தில் இளம் வீரர்கள் சிறப்பாக அடி எடுத்து வைத்தனர். முக்கிய வீரர்கள் இல்லாதது நல்ல உணர்வை கொடுக்காது. அவர்களின் இடத்தை நிரப்புவது கடினம். ஆனால் அந்த வேலையில் இளம் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர். அதே போல ஐந்தாவது டெஸ்ட் போட்டியிலும் நாங்கள் நன்றாக விளையாடுவோம் என நம்புகிறேன்” என்று கூறினார்.

Advertisement