உலக கிரிக்கெட் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2023-ஆம் ஆண்டிற்கான 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் மிகப்பெரிய போட்டியான இறுதிப்போட்டி சற்று முன்னர் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும் சாம்பியன் பட்டத்தை வெல்வதற்காக பலப்பரீட்சை நடத்த காத்திருக்கின்றன.
அதன்படி சற்று முன்னர் நடைபெற்று முடிந்த டாசில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் தங்களது அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். அதனை தொடர்ந்து தற்போது இந்திய அணியானது இந்த மாபெரும் இறுதிப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்ய தயாராகி வருகிறது.
இந்நிலையில் டாசுக்கு பிறகு இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா எடுத்த முடிவு அனைவரது மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கடந்த சில போட்டிகளாகவே இந்திய அணியில் ஏதாவது ஒரு மாற்றம் நிகழுமா? என்று எதிர்பார்த்தனர்.
இவ்வேளையில் இறுதி போட்டியிலாவது தமிழக வீரர் அஸ்வின் இடம் பெறுவாரா? என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அணியின் காம்பினேஷனை மாற்ற விரும்பாத ரோகித் சர்மா கடந்த அரையிறுதி போட்டியில் விளையாடிய அதே அணி தான் இந்த இறுதிப் போட்டியிலும் விளையாடும் என்று அதிரடி முடிவை அறிவித்தார்.
பின்னர் டாசுக்கு பிறகு பேசிய ரோஹித் சர்மா கூறுகையில் : நாங்கள் இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்யவே விரும்பினோம். ஏனெனில் இது ஒரு நல்ல ஆடுகளம் இந்த போட்டியில் நாங்கள் பெரிய ரன் குவிப்பிற்கு செல்லும் போது நிச்சயம் எங்களால் அவர்களை தடுத்து நிறுத்த முடியும்.
இதையும் படிங்க : அஸ்வினுக்கு டீம்ல இடமில்லை.. ஒருவேளை அது நடக்கலைனாலும் வருத்தப்படாதீங்க.. ரசிகர்களுக்கு கம்பீர் முன்னெச்சரிக்கை
இது போன்ற ஒரு பெரிய ரசிகர்கள் கூட்டத்திற்கு மத்தியில் இந்திய அணியின் கேப்டனாக மாபெரும் உலக கோப்பை இறுதி போட்டியில் நிற்பது மிகவும் பெருமையாக இருக்கிறது. கடந்த 10 போட்டிகளில் நாங்கள் என்ன செய்தோமோ அதனையே இந்த போட்டியிலும் செய்து வெற்றி பெறுவோம் என ரோகித் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.