ஐசிசி உலக கோப்பை 2023 : ரோஹித் தலைமையில் சரித்திரம் படைக்குமா.. இந்திய அணியின் முழுமையான அலசல்

Rohit Shama World Cup
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டின் புதிய சாம்பியன் யார் என்பதை தீர்மானிக்கும் ஐசிசி உலக கோப்பை 2023 தொடர் வரும் அக்டோபர் 5ஆம் தேதி துவங்கி நவம்பர் 19 வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற உள்ளது. கிரிக்கெட் என்றால் என்னவென்றே தெரியாமல் இருந்த இந்திய விளையாட்டுத்துறையில் கபில் தேவ் தலைமையில் 1983 உலக கோப்பையை இந்திய அணி வென்றதே மாபெரும் புரட்சி ஏற்படுத்தியது என்று சொல்லலாம். அதனால் ஆலமரமாய் வளர்ந்து நிற்கும் இந்திய கிரிக்கெட்டில் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் தோனி தலைமையில் 2011ஆம் ஆண்டு சொந்த மண்ணில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணி மாபெரும் சரித்திரம் படைத்தது.

அதே போல தற்போது 1987, 1996, 2011 போல் அல்லாமல் வரலாற்றில் முதல் முறையாக முழுவதுமாக இந்திய மண்ணில் மட்டும் நடைபெறும் இந்த உலக கோப்பையை ரோகித் சர்மா தலைமையிலான அணி வென்று சரித்திரம் படைக்குமா என்ற எதிர்பார்ப்பு உச்சகட்டமாக ரசிகர்களிடம் காணப்படுகிறது. இருப்பினும் 2013க்கு சாம்பியன்ஸ் டிராபிக்கு பின் கடந்த 10 வருடங்களாக தொடர்ந்து ஐசிசி தொடர்களில் இந்தியா தோல்வியை சந்திப்பதால் இம்முறையும் சொந்த மண்ணில் கோப்பையை வெல்ல முடியாது என்று ரசிகர்கள் பேசி வந்தனர்.

- Advertisement -

இந்திய அணியில் அலசல்:
ஆனால் நடைபெற்று முடிந்த 2023 ஆசிய கோப்பையை 8வது முறையாக இந்தியா வென்றுள்ளதால் தற்போது ரசிகர்களிடம் புதிய நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. ஏனெனில் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் மற்றும் சமீபத்திய வெஸ்ட் இண்டீஸ் தொடரில் சுமாராக செயல்பட்ட துவக்க வீரர் சும்மங்கில் இந்த தொடரில் சிறப்பாக செயல்பட்டதை போலவே கேப்டன் ரோஹித் சர்மாவும் அதிரடியாக விளையாடி முக்கிய நேரத்தில் ஃபார்முக்கு திரும்பியுள்ளார்.

அதே போல அழுத்தங்களை அசால்டாக சந்திக்கக்கூடிய நம்பிக்கை நாயகன் விராட் கோலி பாகிஸ்தானுக்கு எதிராக சதமடித்து சிறப்பான ஃபார்மில் இருக்கிறேன் என்பதை மீண்டும் நிரூபித்தார். அதை விட கேஎல் ராகுல் காயத்திலிருந்து குணமடைந்து பாகிஸ்தானுக்கு எதிராக சதமடித்து தொடர் முழுவதும் சிறப்பாக கீப்பிங் செய்து ரிசப் பண்ட்க்கு பதிலாக அசத்துவதற்கு தாம் தயார் என்பதை காட்டினார்.

- Advertisement -

மேலும் இடது கை பவுலர்களுக்கு எதிராக இந்திய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் தடுமாறியது மற்றொரு கவலையாக இருந்தது. ஆனால் இந்த தொடரில் சூப்பர் 4 சுற்றில் ஷாஹீன் அப்ரிடியை அபாரமாக எதிர்கொண்ட இந்திய டாப் 4 பேட்ஸ்மேன்கள் அதில் முன்னேறியுள்ளோம் என்பதை நிரூபித்தனர். அத்துடன் மிடில் ஆர்டர் பலவீனமாக இருக்கிறது என்ற பேசிய முன்னாள் வீரர்களுக்கு முதல் போட்டியிலேயே 66/4 என சரிந்தும் இந்தியா 266 ரன்கள் குவிக்கும் அளவுக்கு இசான் கிசான் – ஹர்திக் பாண்டியா ஆகியோர் அட்டகாசமாக செயல்பட்டு பதிலடி கொடுத்தனர்.

இத்துடன் குல்தீப் யாதவ் தொடர் நாயகன் விருது வென்று சுழல் பந்து வீச்சு துறையை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று காட்டிய நிலையில் ஆல் ரவுண்டர்கள் பிரிவில் பாண்டியா மற்றும் ஜடேஜா போன்ற உலகத்தரம் வாய்ந்தவர்கள் ஜொலிக்கின்றனர். மறுபுறம் ஜஸ்பிரித் பும்ரா காயத்திலிருந்து குணமடைந்து அசத்தும் நிலையில் முகமது சிராஜ் ஆசிய கோப்பை ஃபைனலில் 6 விக்கெட்டுகளை எடுத்து இந்தியாவுக்கு வரலாற்று வெற்றியை பெற்றுக் கொடுத்தார்.

இதையும் படிங்க: 2023 உ.கோ வெல்ல சச்சின், தோனி, யுவியை இந்திய அணிக்குள் கொண்டு வாங்க.. ஆடம் கில்கிறிஸ்ட் வித்யாச பேச்சு

அதனால் வேகப்பந்து வீச்சு துறையும் தெறிக்க விடும் அளவுக்கு ஃபார்மில் இருப்பதால் பிறந்து வளர்ந்த சொந்த மண்ணில் நடைபெறும் இந்த உலகக் கோப்பையில் தன்னம்பிக்கையுடன் பயமின்றி விளையாடினால் நிச்சயமாக இந்தியா கோப்பையை வெல்லும் என்று உறுதியாக சொல்லலாம். மொத்தத்தில் தங்களைப் போலவே சிறப்பாக செயல்பட்டு ஃபைனலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படும் இங்கிலாந்து அல்லது ஆஸ்திரேலியா போன்ற அணிகளுக்கும் சொந்த ரசிகர்கள் ஆதரவுடன் பதிலடி கொடுத்து 2023 உலக கோப்பையை வெல்வதற்கு இந்தியா தயாரான அணியாகவே இருக்கிறது என்பதே க்ரிக்தமிழ் இணையத்தின் அலசலாகும்.

Advertisement